யாழில் குற்றத்தை கட்டுப்படுத்த அதிரடிப்படை தேவையில்லை. – ஸ்ரீகாந்தா.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச்சாட்டுக்களைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினரை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. அது பாரிய சமூக விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தாவினால் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினரைப் பயன்படுத்துமாறு, வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கடந்த வாரம் அறிவுறுத்தியிருந்தார்.
இது தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகத்தால் ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
 யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபடும் குழுக்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு உதவியாக விசேட அதிரடிப் படையினரை ஈடுபடுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
நடந்து முடிந்த போரில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்ட பொலிஸ் கொமாண்டோ படை அணியான விசேட அதிரடிப்படையை, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்துவது என்பது, கெடுபிடிகள் நிறைந்த பதற்றச் சூழ்நிலையை யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்துவதோடு, எதிர்மறையான தாக்கங்களையும் விளைவுகளையும் கொண்டு வரலாம்.
யாழ்ப்பாணத்தில் நிகழும் வாள்வெட்டுத் தாக்குதல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குழுக்கள், முற்று முழுதாக அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்படுவதோடு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்து கிடையாது.
ஆனால், இச் சம்பவங்கள் தொடர்பான புலன்விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள் அனைத்தும் பொலிஸாரிடம் இருப்பதே பொருத்தமானதும், உகந்ததும் ஆகும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பொலிஸாரே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். ஆனால், யாழ்ப்பாணத்தில் அங்கும் இங்குமாக கொள்ளைகளும், வன்முறை வெறியாட்டங்களும் நிகழ்ந்து வருகின்றன என்பதற்காக, விசேட அதிரடிப் படையினரை களத்தில் இறக்குவது ஆரோக்கியமானது அல்ல.
விசேட அதிரடிப்படை என்பது, போருக்கு பிந்திய இக்காலத்தில், பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாத கலகங்களை அடக்குவதற்கும், அசாதாரண மற்றும் அனர்த்தச் சூழ்நிலைகளில் சிக்குண்டோரை மீட்பதற்கும் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர் குழுக்களையும் கிறிமினல் கும்பல்களையும் தேடிப் பிடிப்பதற்கு தேவைப்படவில்லை.
இத்தகைய கடமைகள் சட்டத்தின் கீழ், சாதாரண பொலிஸாருக்கு மட்டுமே உரியவை. யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதிலும், குற்ற குழுக்களை கைது செய்வதிலும் பொலிஸாரிடம் எதிர்பார்க்கப்படும் வேகமும் வெற்றியும் இதுவரையில் கிடைக்கவில்லை என்பது உண்மைதான்.
இதனைச் சாதிப்பதற்கு தமிழ் தெரிந்த மேலதிக பொலிஸார் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதோடு, பாரிய குற்றச் செயல்களில் புலன்விசாரணை மேற்கொள்வதற்கு விசேட பொலிஸ் குழுக்களும் அமைக்கப்பட வேண்டும். அத்துடன், குற்றத்தடுப்பு விடயத்தில் பொது மக்களின் பூரண ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக யாழ்ப்பாணம் முழுவதும் பொலிஸ் – பொதுமக்கள் நல்லுறவுக் குழுக்களும், விழிப்புக்குழுக்களும் அமைக்கப்படுவது உடனடி அவசியமானது.
பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களில் உள்ள பல சுறாக்கள் சிக்காமல் இருப்பதற்கும், பெரும்பாலும் நெத்தெலிகளே மாட்டிக் கொள்வதற்கும் காரணமாக, பாதுகாப்புக் கேடயம் ஏதாவது பின்னணியில் செயற்படுகின்றதா? என்று எழுந்திருக்கும் கேள்விக்கும் பதில் தேவைப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் சட்டம், ஒழுங்கு என்பன சீர்குலைந்து விட்டன என்ற தோற்றப்பாடு கூட, அரசியல் ரீதியாக சில தரப்புக்களுக்கு இன்று தேவையாக உள்ளது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் கூறியாக வேண்டும்.
இந்த சூழ்நிலையில், தீவிர போர் அனுபவப் பின்னணி கொண்ட விசேட அதிரடிப்படையினை சட்டம் மற்றும் ஒழுங்கு என்பனவற்றை பராமரிக்கும் நடவடிக்கைகளுக்காக மக்கள் மத்தியில் இரவும் பகலும் வலம் வரச் செய்வது ஆரோக்கியமானது அல்ல என்பதோடு பாதகமானதும் கூட என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் பொலிஸ் படையினரை பொதுமக்கள் எதிர்பார்க்கும் அதேநேரத்தில், தேவைக்கு அதிகமான அழுத்தங்கள் பொலிஸார் மீது பிரயோகிக்கப்படுமானால் நிரபராதிகள் கைது செய்யப்படவும், ஆதாரங்கள் புனைந்துரைக்கப்படவும் குற்றச்சாட்டுகள் சோடிக்கப்படவும் அவை வழிவகுத்து விடும்.
சட்டம், ஒழுங்கு தொடர்பில், யாழ்ப்பாணத்தின் இன்றைய அவல நிலையை மாற்றுவதற்கு சமூகப் பொறுப்புள்ள அனைவரின் பங்களிப்பும் அவசியமானது. ஆகக்குறைந்தது அயலவரின் அபயக்குரல் கேட்டு உதவிக்கு ஓடி வரும் தைரிய உணர்வு கட்டாயமாக தேவைப்படுகின்றது.
இந்த பிரச்சினையில் எமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், புதிய  பொலிஸ் மா அதிபர் ஊடாக உரிய நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த கடமைப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த சிக்கலான பிரச்சினையில், நீதித்துறை காட்டும் அக்கறையும் கரிசனையும் பாராட்டப்பட்டே ஆக வேண்டும். ஆனால், நீதித்துறை கூட, அதன் வரையறைகளுக்குள் நின்று தான் செயற்படவேண்டும் என்பதையும் எவரும் மறுத்துரைக்க முடியாது.
நோக்கம் நல்லதாக இருப்பினும், அதை அடைவதற்கான மார்க்கமும் உகந்ததாக இருந்தால் மட்டுமே, அந்த நோக்கம் நிறைவேற முடியும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com