யாழில் கறுப்புக்கொடி போராட்டம்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐந்தம்ச கோரிக்கையை முன் வைத்து கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்க பட்டது.
யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக புதன்கிழமை காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்க பட்டது.
இனப்படுகொலை, போர்க்குற்றம் ஆகியவற்றுக்கு நீதி வேண்டும், தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை மூன்றாந்தரப்பு மத்தியஸ்தமாகப் பயன்படுத்தி நிரந்தர தீர்வு காணப்படவேண்டும், தமிழ் மக்களின் நிலங்களை தொடர்ந்தும் இராணுவத்தினர் ஆக்கிரமிப்பதை நிறுத்தி இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படவேண்டும், காணாமல்போன மற்றும்  கடத்தப்பட்ட 14 ஆயிரம் பேருடையதும் போரில் சரணடைந்த போராளிகள், அவர்களின் மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட 6 ஆயிரம் பேருடையதும் நிலைமைகள் என்ன என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் மற்றும் அரசியல் கைதிகள் 217 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும். இல்லையேல் குறுகிய காலத்துக்குள் பொது மன்னிப்பு வழங்கி புனர்வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய 5 அம்சக் கோரிக்கைகள் குறித்த போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்டன.
குறித்த ஐந்தம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரே யாழில் தேசிய பொங்கல் விழாவை நடத்த வேண்டும். அதற்கு முன்னர் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் வடமாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் , அனந்தி சசிதரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , பத்மினி சிதம்பரநாதன் , உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , அரசியல் கைதிகளின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய பொங்கல் விழா யாழ்.பலாலி ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 15ம் திகதி நடைபெறவுள்ளது. பொங்கல் விழாவில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds