யாருக்கும் வாக்களியுங்கள்… பணத்திற்கு மட்டும் விலைபோகாதீர்கள் – சகாயம் ஐ.ஏ.எஸ்

யாருக்கு வேண்டும் என்றாலும் நீங்கள் வாக்களியுங்கள் ஆனால், பணத்திற்கு மட்டும் விலைபோய் விடாதீர்கள் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சென்னை அறிவியல் மைய துணை தலைவருமான சகாயம், நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”கிரானைட் முறைகேடு தொடர்பாக ஒரு ஆண்டு காலத்திற்கு மேலாக விசாரணை நடத்தி அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். இதற்குமேல் நீதிமன்றம் தான் தண்டனை வழங்க வேண்டும். கிரானைட் முறைகேடு விசாரணையை ஆதரித்தவர்களையும், எதிர்த்தவர்களையும் பற்றி நான் கவலைப்படவில்லை. எனது கடமையை செய்து முடித்துள்ளேன்.

இந்திய நாடு ஜனநாயக நாடு. இளைஞர்கள் நேர்மையாகவும், கண்ணியமாகவும் தேர்தல் நடத்த உறுதுணையாக இருக்க வேண்டும். வாக்குகளை விற்பனை செய்திட வேண்டாம். தேசத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு உள்ளது.

யாருக்கு வேண்டும் என்றாலும் நீங்கள் வாக்களியுங்கள். ஆனால், பணத்திற்கு மட்டும் விலைபோய் விடாதீர்கள். இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்தும். பண நாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்தை நிலை நிறுத்தும்.

தமிழக இளைஞர்கள் சிறந்த அரசியல்வாதிகளை தேர்வு செய்து வாக்களிக்க வேண்டும். அரசியல் என்பது சமூகத்தின் வெளிப்பாடு. அரசியல் நேர்மையாக இருந்தால்தான் சமூகமும் நேர்மையாக இருக்கும். அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. இதற்கு மாற்றுக்கருத்து இல்லை. அனைத்து பள்ளிகளிலும் கண்டிப்பாக தேசிய கீதம் பாட வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com