யாருக்காகவும் எமது கலை கலாசாரத்தை விட்டுக்கொடுக்க முடியாது – முத்து சிவலிங்கம் எம்.பி

இந்தியாவிலிருந்து மொழி, கலை, கலாச்சாரம் கொண்டு வந்த இந்திய வம்சாவளி மக்கள் மலையகத்தில் வாழ்கின்றனர். யார் எவர் எதை சொன்னாலும் நமது கலை, கலாச்சாரத்தை ஒழித்து விட முடியாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா தலைவருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

தலவாக்கலையில் நடைபெற்ற மத்திய மாகாண தைப்பொங்கல் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்தியாவில் தொண்டு தொட்டு நிகழ்த்தி வந்த ஜல்லிக்கட்டு காளை அடக்கும் நிகழ்வுக்கு எதிர்ப்புகாட்டியமையினால் மாட்டுப்பொங்கல் தினமான 15.01.2017 அன்று 8 கோடி தமிழ் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதில் பங்கு வகிக்க கூடியவர்கள் இலங்கை மலைநாட்டிலும் இந்திய வம்சாவளினராக நாமும் திகழ்கின்றோம். இவ்வாறாக இந்தியாவிலிருந்து கலை, கலாச்சாரத்தை கொண்டு வந்த நாம் இலங்கையிலும் கலாச்சார விழுமியங்களை பாதுகாக்க வேண்டும்.

உழைப்புக்கும் அதன் உயர்வுக்கும் வித்திட்ட மலையக தோட்ட தொழிலாளர்கள் தை திருநாளை கொண்டாடுகின்ற இந்த நாளில் தோட்டங்கள் என்ற வார்த்தையை அகற்றி கிராமங்களில் வாழும் மக்கள் என தனி வீடுகளை அமைத்து வாழ வேண்டும்.

இதை ஒற்றுமையாக நாம் முன்னெடுக்க வேண்டும். இதுவே ஆரம்பகாலத்திலிருந்து இ.தொ.காவின் செயல்பாடாக இமைந்திருந்தது. நூற்றுக்கு 90 வீத தமிழ் மக்கள் வாழும் தலவாக்கலை பிரதேசத்தில் இவ்வாறான கலாச்சார நிகழ்வுகளை கொண்டாடுவது பெருமைக்குரிய விடயமாக அமைந்துள்ளது.

கலைகள், கலாச்சாரங்கள் காலத்திற்கேற்ப ஒழிந்தும் மறைந்தும் வருகின்ற சூழ்நிலையில் அதனை மறக்கவிடாது. எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கப்படுத்தும் வகையில் கலாச்சாரங்களை அதன் விழுமியங்களை ஊக்குவிக்கும் வகையில் இ.தொ.கா காலத்திற்கேற்ப அதன் பணிகளை செய்து வருகின்றது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com