மைத்திரி-ரணில் கூட்டணியை 2020 வரை யாராலும் கவிழ்க்க முடியாது – ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

2020ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கும் வரை தற்போதைய அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாதென இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசும்போது, 2017-ம் ஆண்டில் தற்போதைய ஆட்சியைக் கவிழ்ப்பதே தனது நோக்கம் என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து, பிரமதர் ரணில் விக்ரமசிங்க ஏற்கெனவே கருத்துத் தெரிவித்த நிலையில், ஜனாதிபதியும் இன்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இன்னும் ஒரு வாரத்தில் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை மீண்டும் கிடைக்கும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.
இன்று வெள்ளிக்கிழமை மத்திய மாகாணத்தின் தலைநகரான கண்டியில் பாலமொன்றை திறந்து வைத்து உரையாற்றிய அவர் இந்த சலுகையானது நாட்டின் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி துறையில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்றார்..
” நாடு என்ற வகையில் முன்னோக்கி செல்வதற்காக காணப்பட்ட அனைத்து தடைகளையும் நீக்கி அனைத்து நாடுகளுடனும் நட்புறவை ஏற்படுத்திக் கொள்வதற்கு கடந்த இரு வருடங்களாக அரசினால் முன்னெடுக்கப்பட்ட செயல்பாடுகளின் நன்மைகள் கிடைக்க ஆரம்பித்துள்ளது .
அபிவிருத்தி நடவடிக்கைககள் போன்று நாட்டின் கடன் சுமைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வெண்டிய தேவை உள்ளது ” என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தைக்கப்பட்ட ஆடைகளுக்கு ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை கிடைத்து வந்தது. 2010 ம் ஆண்டுடன் அந்த சலுகை நிறுத்தப்பட்டது. அதனை மீண்டும் வழங்க உள்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகள் சில ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன் வைக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்த சலுகை மீண்டும் வழங்குவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com