மேடியைச் சந்தித்தார் ஜெயலலிதா – இலங்கையுடனான 1974 மற்றும் 1976-ம் ஆண்டு ஒப்பந்தங்களை இரத்துச் செய்ய வலியுறுத்து

jayalalithaa-modi02மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக, ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட நிலையில், மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்ற ஜெயலலிதா, செவ்வாய்க்கிழமை மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இச் சந்திப்பின்போது, தமிழகத்தின் பல்வேறு திட்டங்கள், நிதி ஆதாரங்கள், மீனவர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக, 96 பக்க அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தார் முதல்வர்.

அதன்பாபோது பாக்கு நீரிணையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் இலங்கைக் கடற்படை அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையைப் பாதுகாக்க, 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலாயத்தை புனரமைக்கும் முன்னதாக, தமிழக மீனவர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும், இரு நாடுகளும் இணைந்து அப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்காக இன்று (14-ம் தேதி) மதியம் 2.00 மணிக்கு டெல்லி விமானம் நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து டெல்லியிலுள்ள தமிழக இல்லத்திற்கு சென்ற ஜெயலலிதா, சற்று நேரம் ஓய்வு எடுத்தார்.

பின்னர் சுமார் 4.00 மணியளவில் டெல்லி, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி வீட்டிற்கு சென்று, பிரதமரை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்திற்கு தேவையான 29 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் நரேந்திர மோடியிடம், ஜெயலலிதா வழங்கினார்.

அந்த மனுவில், ”தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நதி நீர் இணைப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை சிறையில் உள்ள 21 தமிழக மீனவர்களையும், 92 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும். இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்க வேண்டும். கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவிலை புதுப்பிக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். பறக்கும் ரயிலையும், மெட்ரோ ரயிலையும் இணைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. மசோதாவில் அ.தி.மு.க கோரியுள்ள திருத்தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். கெயில் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும்

மருத்துவ நுழைவுத் தேர்வை அமல்படுத்த மாநில அரசை கட்டாயப்படுத்தக் கூடாது. தமிழக அரசு பரிந்துரைத்துள்ள இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும். மாநில அரசுக்கு தரவேண்டிய நிதி உதவிகளை உடனே வழங்க வேண்டும். உணவு தானியங்கள் வழங்குவதை குறைக்கக் கூடாது. கூடங்குளம் அணுமின் நிலைய 2 வது அலகை உடனே தொடங்க வேண்டும். தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும்” என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com