மெழுகுவர்த்தி, செல்போன் வெளிச்சத்தில் நடந்த வாக்குப்பதிவு!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டதால் மெழுகுவர்த்தி மற்றும் செல்போன், டார்ச் லைட் உதவியுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் கடும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை துவங்கிய வாக்குப் பதிவு மந்தமாக இருந்து வருகிறது. காலை 10 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் 8 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதிகளில் உள்ள வாக்கு மையங்களில் மின்விளக்கு வசதி செய்யப்படவில்லை. மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ள மையங்களிலும் வெளிச்சம் குறைவாகவே உள்ளது. மேலும் மேக மூட்டமாக இருப்பதுடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டு வருகிறது. மின்தடை ஏற்படும் நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை. குறிப்பாக தங்கச்சிமடம் வாக்குப் பதிவு மையம் எண் 227 அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெறும் அறை முழுவதும் இருட்டாக உள்ளது.
இதனால் வாக்களிக்க வரும் வாக்காளர்களின் அடையாளம் காண்பதில் கட்சிகளின் முகவர்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து செல்போனில் உள்ள விளக்கின் வெளிச்சத்தில் வாக்காளர் அடையாளத்தை சரி பார்த்தனர். இதன் பின் வாக்களிக்கும் இயந்திரம் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற வாக்காளருக்கு எங்கே மிஷின் உள்ளது, எந்த இடத்தில் சின்னம் உள்ளது என்பது கூட தெரியாத அளவிற்கு அந்த இடம் இருள் சூழ்ந்து இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் திரும்பினர். இதனை தொடர்ந்து வாக்கு மைய அலுவலர் தான் வைத்திருந்த பென் டார்ச் லைட்டின் மூலம் வெளிச்சம் ஏற்படுத்தி வாக்களிக்க செய்தார். ஒவ்வொரு வாக்காளர் வாக்களிக்க செல்லும் போதும் வாக்குப்பதிவு மைய அதிகாரி எழுந்து சென்று லைட் அடித்து உதவி வருகிறார்.
ராமேஸ்வரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையங்களில் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு உதவுவதற்காக தேர்தல் கமிஷனால் பூத் லெவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களை தவிர வேறு யாரையும் இவர்கள் தங்கள் அருகில் அனுமதிக்க கூடாது. இதற்கு மாறாக அ.தி.மு.க கவுன்சிலர் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் பூத் லெவல் அதிகாரியின் அருகில் அமர்ந்து கொண்டு ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனை தேர்தல் அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com