மூன்று அரசியல் கைதிகளும் மேல்முறையீட்டு நீதிமன்றில் மனு!

அனுராதபுர சிறைச்சாலையில் கடந்த ஒரு மாதமாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளும், தமக்கு எதிரான வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அனுராதபுர மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ள தமது வழக்குகளை மீண்டும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிடக் கோரி, இராசதுரை திருவருள், சுலக்சன், கணேசன் தர்சன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகளும், நேற்று முன்தினம் (26) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு எதிரான சாட்சிகளாக 67 பேர் பெயரிடப்பட்டுள்ளனர். அவர்களில் 64 பேர் இலங்கை பொலிஸார்  மற்றும், இராணுவத்தினராவர்.

சாட்சிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி, இவர்களின் வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அனுராதபுர மேல்நீதிமன்றத்துக்கு  மாற்றப்பட்டன.

இதனை எதிர்த்து, அவர்கள் கடந்த ஒரு மாதமாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற போதிலும், இலங்கை அரசாங்கம், வழக்குகளை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ள மூன்று அரசியல் கைதிகளும், “அனுராதபுரவில் எமக்கு எந்த உறவினர்களோ நண்பர்களோ இல்லை.  எமக்கு தமிழ் மொழி மட்டுமே பேச முடியும். இதனால் அனுராதபுர நீதிமன்றத்தில் வழக்குகளை நாம் எதிர்கொள்வதும், எமக்கான சட்டவாளரைப் பெறுவதும் கடினம்.

எனவே அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் நியாயமான விசாரணை நடக்காது என்று நம்புகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களமும், குற்றப் புலனாய்வுப் பிரிவும் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com