சற்று முன்
Home / செய்திகள் / முஸ்லிம் வர்த்தகரின் முகநூல் பதிவே சிலாபம் வன்முறைக்கு காரணமாகியது

முஸ்லிம் வர்த்தகரின் முகநூல் பதிவே சிலாபம் வன்முறைக்கு காரணமாகியது

சிலாபத்தில் இன்று காலை ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் இட்ட முகநூல் பதிவே காரணம் எனத் தெரிவித்துப் பொலிஸார் அவரைக் கைதுசெய்துள்ளனர்

ஆனால், அவர் இட்ட பதிவொன்றைத் தவறாக விளங்கிக்கொண்ட சிங்கள இளைஞர் குழுவே குழப்பத்தை விளைவித்துள்ளது.

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்தான தனது விசனத்தை வெளியிட்ட ஹஸ்மார் ஹமீட் என்ற வர்த்தகர், “அளவுக்கதிகமாகச் சிரித்தால் ஒரு நாள் அழ வேண்டியும் வரும்” என்பதை “Dont laugh more 1 day u will cry” என்று தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .

ஆனால், அதனை மொழிபெயர்த்த சிங்கள இளைஞர்கள் சிலர், ”இன்று மட்டும்தான் நீங்கள் சிரிப்பீர்கள்; நீங்கள் அழ இன்னும் ஒரு நாள் இருக்கின்றது” என்று பதிவிடப்பட்டதாக உணர்ந்து அதன் உண்மைத் தன்மையைக் கேட்க சிலாபம் நகரத்தில் அமைந்துள்ள மேற்படி வர்த்தகரின் கடைக்கும், பொலிஸ் நிலையத்துக்கும் சென்று தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதன்போது பிரச்சினை பூதாகரமானது. அங்கு ஏற்பட்ட பதற்ற நிலைமையையடுத்து கடைகள் அனைத்தும் நகரத்தில் மூடப்பட்டன.

தர்க்கத்தில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்களை வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுக் கலைத்த இராணுவம் அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

இதனையடுத்து சிலாபம் பொலிஸ் பிரிவில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் உடன் அமுலுக்கு வந்தது.

நாளை காலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.

ஏற்கனவே நாளை திங்கட்கிழமை ஏதும் அசம்பாவிதங்கள் நடக்கலாம் எனச் செய்திகள் பரவியிருந்த நிலையில், குறித்த முஸ்லிம் வர்த்தகரின் பதிவை அதனுடன் ஒப்பிட்டு சிங்கள இளைஞர்கள் பார்த்ததால் இந்தக் களேபரம் ஏற்பட்டுள்ளது.

எப்படியாயினும் தற்போது வர்த்தகரைக் கைதுசெய்துள்ள பொலிஸார், இந்தப் பதிவு தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com