சற்று முன்
Home / செய்திகள் / முல்லைத்தீவு போராட்டத்தின் முடிவில் ஐ.நாவிற்கு அனுப்பப்பட்ட மகஜரின் முழு வடிவம்..

முல்லைத்தீவு போராட்டத்தின் முடிவில் ஐ.நாவிற்கு அனுப்பப்பட்ட மகஜரின் முழு வடிவம்..

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அதியுச்ச இனத்துவசத்தின் இன்னொரு பரிணாமம், மியன்மார் பாணியிலான பெளத்த மத தீவிரவாதம் சிறிலங்காவிற்கு புதியது அல்ல. கடந்த காலங்களில் மென்போக்கு அணுகுமுறையை கடைப்பிடித்த பௌத்த தீவிரவாதம் தற்போது கடும்போக்கு அணுகுமுறையை கையிலெடுத்திருப்பது என்பது சிறிலங்காவின் பெரும்பான்மை சனநாயக விழுமியங்களை முற்று முழுதாகவே இல்லாதொழிக்கின்றது என தமிழர் மரபுரிமை பேரவையினால் இன்று சமர்ப்பிக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் நீதித்துறையையும், தமிழர்களையும் அவமதித்து பிக்குவின் உடலை தகனம் செய்தமைக்கு எதிராக இன்று முல்லைத்தீவில் பிரமாண்ட மக்கள் போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தின் முடிவில் தமிழர் மரபுரிமை பேரவையினால் மகஜர் கையளிக்கப்பட்டது. இலங்கை ஜனாதிபதி, கொழும்பிலுள்ள ஐ.நா வதிவிட பிரதிநிதி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த மகஜரின் முழு விபரம் வருமாறு-

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் மேதகு ஜனாதிபதி,
மைத்திரிபால சிறிசேன அவர்கட்கு

வதிவிட ஒருங்கிணைப்பாளர், ஐக்கிய நாடுகள் தலைமை அலுவலகம்,
கொழும்பு.

கடந்த 23.09.2019 அன்று பொதுபல சேனா ஞானசாரா தேரர் தலைமையில் நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் வளாகத்தில் அத்துமீறி குடியிருந்த பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்த செயலானது சிறீலங்காவின் முழு நீதித்துறைக் கட்டமைப்பை அவமதித்ததோடு ஏற்கனவே நீதித்துறை மீதிருந்த நம்பிக்கையின்மையை மீணடும் ஆழமாக உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பௌத்த பிக்கு சிறிலங்கா ஜனாதிபதியினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே.

நேற்றைய மேற்குறிப்பிட்ட பௌத்த பிக்குவின் செயற்பாடும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின் பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளும் வெறுமனே உதிரியான செயற்பாடுகளாக உற்று நோக்க முடியாதவை. இச் செயற்பாடுகள் ஏற்கனவே நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்பாடே.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அதியுச்ச இனத்துவசத்தின் இன்னொரு பரிணாமம், மியன்மார் பாணியிலான பெத்த மத தீவிரவாதம் சிறிலங்காவிற்கு புதியது அல்ல. கடந்த காலங்களில் மென்போக்கு அணுகுமுறையை கடைப்பிடித்த பௌத்த தீவிரவாதம் தற்போது கடும்போக்கு அணுகுமுறையை கையிலெடுத்திருப்பது என்பது சிறிலங்காவின் பெரும்பான்மை சனநாயக விழுமியங்களை முற்று முழுதாகவே இல்லாதொழிக்கின்றது. சிறிலங்காவின் பெரும்பான்மை சனநாயக போர்வையோடு சிங்கள பௌத்த கடும்போக்கு தேசிய தீவிரவாதம் கட்டவிழ்க்கப்பட்டிருந்ததோடு சிறிலங்கா சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமானது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றது. தமிழ் தேசியத்தின் எழுதல் என்பது வரலாற்றில் சிங்கள பௌத்த கடும்போக்கு தேசிய தீவிரவாதத்திற்கு எதிரானது என்பதையும் வரலாறு எமக்கு சுட்டி நிற்கின்றது.

பெரும்பான்மை சனநாயகப் போர்வையில் 2009 ற்குப் பின்னரான சிங்கள பௌத்த கடும்போக்கு தேசிய தீவிரவாதத்தின் இன்னொரு பரிணாமத்தின் அதியுச்ச எழுச்சி எவ்வாறு தளங்களில் வெவ்வேறு அணுகுமுறைகளோடு குறிப்பாக அரச கட்டமைப்புக்களுக்கூடாக தமிழர் தாயகத்தில் வெளிப்படுத்தப்படுவது சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதத்தினை ஆழப்படுத்துவதோடு சிங்கள பௌத்தம் தவிர்ந்த ஏனையவர்களுக்கான சனநாயக வெளியை சுருக்கி வருகின்றது.

2009ற்குப் பின்னரான பௌத்த மத கடும்போக்கு தீவிரவாத எழுச்சி இன்னொரு இன சுத்திகரிப்பிற்கான ஆயத்தங்களை முன்னெடுக்கின்றது. பௌத்த மதத்திற்கும், பௌத்த மதத் தலைவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள அதிவிசேடத் தன்மையும் அதன் வெளிப்பாடுகளின் வெவ்வேறு பரிணாமங்களும் இன்னொரு இனச் சுத்திகரிப்பை கட்டியம் கூறுகின்றது. சனநாயக செயற்பாட்டுவாதிகளாக தம்மை அடையாளம் காட்டும் அமைப்புக்களும், ஆர்வலர்களும் இச்செயலை எடுக்காமலிருப்பதும் அவர்களுடைய இரட்டை வேடத்தனத்தை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பங்களாக எண்ணத் தோன்றுகின்றது.

நீதிமன்றத்தின் கட்டளையை அமுல்படுத்த முடியாத சிறிலங்கா அரசின் படைக்கட்டுமானம் காவல்துறை உட்பட ஒரு இனம், தம் சார்ந்து செயற்பட முடிவதானது வெறுமனே ஒரு சந்தர்ப்பம் சார்ந்து எடுக்கப்பட்ட முடிவல்ல. நீதிமன்ற தடையுத்தரவை மீறிய செய்ற்பாடுகளின் சந்தர்ப்பங்கள் சிங்கள பௌத்த இன மதம் சார்ந்து அதிகரித்துச் செல்லுவது 2009 ற்குப் பின்னரான புதிய செல் நெறியாகும்.

அவ்வாறான செயற்பாடுகளுக்கு சிங்கள அரசின் பொறிமுறைகள் முண்டு கொடுப்பது இனச்சுத்திகரிப்பு உள்நோக்க திட்டமிடலை வெளிக்கொணருகின்றது.
2009 மே க்குப் பின்னரான சூழலில் தமிழர்களின் பொறுப்புக்கூறல் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரித்து வெளிநாட்டு விசாரணையை முன்வைத்ததற்கான காரணங்களை தமிழர் கூட்டுரிமை சார்ந்து செயற்படுகின்ற அமைப்புக்களும், குழுக்களும் முன் வைத்தது தெரிந்ததே.

சிறிலங்கா நீதித்துறைக் கட்டமைப்பின் நம்பகத்தன்மை பொறுப்புக்கூறல் தொடர்பில் இன்றும் குறிப்பாக போர்க்குற்றம் மனித குலத்திற்கு எதிரான குற்றம், இனப்படுகொலை தொடர்பில் இதய சுத்தியோடு பக்கச் சார்பற்றும் செயற்படாதது என்பதை மீண்டும் இச்சம்பவம் நிரூபித்துள்ளது. கொலைக் குற்றவாளிகளை உயர் பதவிகளுக்கு உயர்த்துவதனூடு சிறிலங்கா அரசு தண்டனை விலக்கீட்டை ஊக்குவிக்கின்றது. சர்வதேச அழுத்தங்களையும் தவிர்த்து மிக அண்மையில் நடைபெற்ற இராணுவத் தளபதியின் நியமனமானது சிறிலங்கா அரசு என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்கின்ற தற்துணிவை பெரும்பான்மை சிங்கள தேசியவாதிகளுக்கு வழங்கியுள்ளது. இத் தற்துணிவின் பல்வேறு வடிவங்கள் வரலாற்றில் தமிழர் தற்துணிவின் பல்வேறு வடிவங்கள் வரலாற்றில் தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட படுகொலைகளாக உருவெடுத்தன.

தமிழர்களின் வெளிசர்வதேச விசாரணை பொறிமுறைக் கோரிக்கையை நிராகரித்து கலப்புமுறை பொறிமுறையை பரிந்துரைத்த அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் இனியாவது சிறிலங்காவின் சிங்கள பௌத்த தேசியத்தின் பிரத்தியேகவாத அரசியலை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். சிறிலங்கா அரசின் நீதித்துறைக் கட்டுமானம் சிங்கள பௌத்த தேசிய பிரத்தியேகவாத கருத்தியலை தக்க வைக்கின்ற இன்னொரு சிங்கள அரசின் பொறிமுறை.

அன்பான எம் நெஞ்சிற்கினிய ஈழத்தமிழ் உறவுகளே,

ஓர் அடக்குமுறைக்கு எதிராக எழுந்த இனம் எம் தமிழினம். சிங்கள பௌத்த சிறிலங்கா அரசு மீண்டும் மீண்டும் தமிழர்களை வெவ்வேறு பொறிமுறைகளோடு அடக்க முனைகின்றது என்பதை கடந்த ஒரு தசாப்தம் எமக்கு மிகத் தெளிவாக சுட்டி நிற்கின்றது. தமிழினத்தின் கூட்டு இருப்பையும், உரிமையும் மக்கள் சக்தியில் நம்பிக்கை வைத்து போராட்ட வடிவங்களை மாற்றி வன்முறையற்ற வழியில் எம் அரசியல் கோரிக்கைகளை முன்வைப்பதற்கான காலம் கனிந்து வருகின்றது. இவ்வரலாற்றுக் கடமையிலிருந்து நாம் தமிழர்களாக விலகி நிற்க முடியாது. எமக்கான தீர்வு கிடைக்கும் வரை எமது அடுத்த சந்ததிக்கான இருப்பை உறுதி செய்யும் வரை நாம் தொடர்ந்து உழைக்க வேண்டியுள்ளது. இவ் உழைப்பு கூட்டான முயற்சியாக உருவெடுக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். தொடர்ந்து கூட்டாக உழைப்போம்.

வண லியோ ஆம்ஸ்ரோங்- இணைத்தலைவர்
Dr. . கை. சுதர்சன்- இணைத்தலைவர்
வி. நவநீதன்- இணைத்தலைவர்

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com