சற்று முன்
Home / செய்திகள் / முறையற்ற இடமாற்றங்களால் திணறும் வடக்கு கல்வி அமைச்சு – ஆளுநரிடமும் திட்டமில்லை !

முறையற்ற இடமாற்றங்களால் திணறும் வடக்கு கல்வி அமைச்சு – ஆளுநரிடமும் திட்டமில்லை !

முறையான இடமாற்றக் கொள்கை பின்பற்றப்படாமையே வடக்கு மாகாணத்தில் ஆசிரிய ஆளணி நெருக்கடிக்கு காரணம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், வடக்கு மாகாண ஆளுநரிடம் எடுத்துரைத்தது.

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற வடமாகாண கல்வி நிலை தொடர்பான கூட்டத்தில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் இந்தக் கருத்தை முன்வைத்தது.

இதுதொடர்பில் சங்கம் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் வடக்கு மாகாண ஆசிரிய ஆளணி தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

“வடக்கு மாகாணத்திற்கு 2 ஆயிரம் ஆசிரியர்கள் இன்னும் தேவையாக உள்ளனர். தற்போதுள்ள ஆசிரிய ஆளணியில் 600ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாடத்தேவைக்கு அதிகமாக உள்ளனர். இவர்களின் மேலதிகம் வடக்கு மாகாணத்தில் பாடரீதியிலான ஆசிரிய ஆளணி வெற்றிடம் நிரப்புவதற்கு தடையாக உள்ளது.

இதனை உடனடியாக சீர்செய்யாவிட்டால் 2019ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் பங்கீட்டில் பெரும் நெருக்கடி உருவாகும். இதைவிட கல்வி வலயங்களில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் சரியானதாக இல்லை. காரணம் அந்தத் தகவல்கள் அதிபர்களிடமும், ஆசிரியர்களிடமும் இருந்து பெறப்படுகின்றன.

ஆசிரிய இடமாற்றம் தொடர்பில் தேசிய இடமாற்றக் கொள்கை ஒன்று இருந்தும், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரத்தில் இருந்தவர்கள் தமக்கு இசைவான கொள்கைகளை அவ்வப்போது தயாரித்து நடைமுறைப்படுத்தி வருகின்றமையே இத்தனை சிக்கல்களுக்குக் காரணமாகும்.

மாகாணக் கல்வித் திணைக்களத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் முல்லைத்தீவில் 135 ஆசிரியர்களும், வவுனியா தெற்கில் 69 ஆசிரியர்களும், வவுனியா வடக்கில் 5ஆசிரியர்களும், மடுவில் 4ஆசிரியர்களும், மன்னாரில் 4ஆசிரியர்களும், கிளிநொச்சியில் 95ஆசிரியர்களும், தீவகத்தில் 37ஆசிரியர்களும், தென்மராட்சியில் 31ஆசிரியர்களும், வடமராட்சியில் 125 ஆசிரியர்களும், வலிகாமத்தில் 140 ஆசிரியர்களும், யாழ்ப்பாணத்தில் 145 ஆசிரியர்களும் பாடரீதியாக மேலதிகமாக உள்ளனர்.

ஆனால் பாடரீதியாக துணுக்காய் 170 ஆசிரியர்களும், முல்லைத்தீவில் 109 ஆசிரியர்களும், வவுனியா தெற்கில் 88 ஆசிரியர்களும், வவுனியா வடக்கில் 222 ஆசிரியர்களும், மடுவில் 103 ஆசிரியர்களும், மன்னாரில் 206 ஆசிரியர்களும், கிளிநொச்சியில் 185 ஆசிரியர்களும், தீவகத்தில் 169 ஆசிரியர்களும், தென்மராட்சியில் 161 ஆசிரியர்களும், வடமராட்சியில் 38 ஆசிரியர்களும், வலிகாமத்தில் 250 ஆசிரியர்களும், யாழ்ப்பாணத்தில் 143 ஆசிரியர்களும் தேவையாக உள்ளனர்”என்று புள்ளிவிவரங்களை ஆளுநரிடம் சமர்ப்பித்த இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் இவற்றுக்கு உடனடியாக தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் இதற்கான திட்டம் ஒன்றை விரைவாக வரைந்து தம்மிடம் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கினார்.

இதைவிட வடக்கு மாகாணத்தில் இருந்து பெருமளவான ஆசிரியர்கள் நீண்ட விடுமுறைகளில் வெளிநாடுகளுக்குச் செல்வதாகவும் அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கு, சங்கத்தின் பொதுச் செயலாளர் மகப்பேற்றுக்காக வெளிநாடு செல்பவர்களின் விடுறைகளை மறுக்க முடியாது எனச் சுட்டிக்காட்டினார். அதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் ஆளுநரின் ஆலோசகர் சுந்தரம் டிவகலாலா, வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அ.சிவபாலசுந்தரன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார், 12 வலயங்களின் கல்விப் பணிப்பாளர்கள், மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் – என்றுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com