முன்னாள் போராளிகள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படவில்லை!

“யாழ்ப்பாணத்தில், அண்மைக் காலமாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளுடன், புனர்வாழ்வளிக்கப்பட்ட  தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லை” என்று, புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்க தெரிவித்தார்.

“நான் இதனை, நம்பிக்கையுடனும் மிகவும் பொறுப்புடனும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில், நேற்று (15) இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக, இந்த வைபவத்தின் போது, அவர்களுக்குக் கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “எம்மால் புனர்வாழ்வளிக்கப்பட்ட 12 ஆயிரத்து 190 பேர், யாழ்ப்பாணத்திலோ அல்லது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலோ எவ்விதமான வன்முறையான செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. அதேபோல, சட்டவிரோதமான சம்பவங்களுடன் அவர்கள் தொடர்பு கொண்டிருக்கவில்லை” என்றார்.

“எங்களுடைய அறிக்கையின் பிரகாரம், ஒன்றே ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டும். அதாவது, ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மட்டும்தான், அதுவும் ஒரேயோர் உறுப்பினர், தென் பகுதியைச் சேர்ந்த பாதாள உலகக் கோஷ்டியின் சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்தார். அவ்வளவுதான்.
“மற்றொருவரின் மனதை முழுமையாக மாற்றியமைப்பதற்கு, எங்களால் முடியாது. நாங்கள், 12 ஆயிரத்து 190 பேருக்குப் புனர்வாளித்தோம். அதில், நூற்றுக்கு நூறு சதவீதம் புனர்வாளிக்கப்பட்டது என்று கூறமுடியாது. அதனை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், எனக்கு தெரிந்த வகையில், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களில் ஒருவரேனும் இதுவரையிலும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்களைப் போலவே, தென் பகுதியிலும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள், (எல்.ரீ.ரீ.ஈ) மீண்டும் தலைதூக்குகிறது என்று பொய்யான பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.

அவ்வாறானவர்கள், தங்களுடைய நிகழ்ச்சி நிரலின் ஊடாக, தங்களுடைய நோக்கத்தை அடிப்படையாக வைத்து, பொய்யான பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர்.

பொய்யான பிரசாரங்கள் ஊடாக, மனிதர்களின் மனதை மாற்றி, நாட்டை மீண்டும் பின்னோக்கிக் கொண்டு செல்லும் நடவடிக்கையைக் கைவிடவேண்டும் என்றும் நான் கூறிக்கொள்கின்றேன்” என்றார்.

“புனர்வாழ்வளிக்கப்படாத நபர்கள், எங்களுடைய சமுகத்தில் இருக்கமுடியும். யுத்தம் நிறைவடைந்து எட்டுவருடங்கள் நிறைவடைந்து விட்டது.

அந்தக் காலப்பகுதியில், அவர்கள் இயல்பாகவே புனர்வாழ்வை பெற்றுக்கொண்டிருப்பார்கள். இந்த அபிவிருத்தியை கண்டு, மனிதர்களின் மாற்றங்களை கண்டு, அவர்கள் வன்முறைகளில் இறங்காமல், தாமாகவே நல்ல நிலைமைக்கு மாறியிருப்பார்கள் என்ற நம்பிக்கையே எனக்கிருக்கின்றது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com