முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் தொழில்சார் புனர்வாழ்வழிக்கப்படவேண்டும் – இரா சம்பந்தன்

(யாழ்-25.07.2015) முன்னாள் போராளிகளைப் பொறுத்தவரை அவர்களிற்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டதாகக்கூறப்பட்டாலும் அவர்கள் தங்கள் தங்கள் தொழிலை ஆரம்பிக்கக்கூடியவகையில் அவர்கள் புனர்வாழ்வு பெறவில்லை. அது விடையம் தொடர்பாக திட்டம் தீட்டப்பட்டு மீண்டும் தொழில்சார்பு புனர்வாழ்வு பயிற்சி வழங்கப்படவேண்டுமென தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் நாட்டிலிருந்து வெளியேறிய சுமார் 10 இலட்சம் மக்களை மீள நாட்டிற்கு அழைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் தென்னிந்தியாவில் மாத்திரம் ஒரு இலட்சம் மக்கள் வாழ்கின்றார்கள் அவர்களை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் யாழ்ப்பாணம் மருதனார் மடம் சந்தைப் பகுதியில் சனிக்கிழமை (25.07.2015) ஊடகவியலாளர் சந்திப்பும் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டமும் நடைபெற்றது. அந்நிகழ்வில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உரையாற்றும்போதே இரா சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறி்க்கையில் அவர்களது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் குறிப்பிடப்படும்போது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வுகாண அத்தியாவசியமெனக் கருதும் கோட்பாடுகளும், பிரத்தியேக அரசியலமைப்பு ஏற்பாடுகளும் பிரதானமாக இத்தீவில் வாழும் பல்வேறு மக்களிடையே ஆட்சி அதிகாரங்களைப் பங்கிடுவதனூடாகப் பகிர்ந்த இறையான்மையினை உறுதிப்படுத்தலைக் குறித்தது. உண்மையான நல்லிணக்கத்தையும், நீடித்து நிலைக்கும் சமாதானத்தையும், இலங்கை மக்கள் அனைவருக்கும் பொதுவான அபிவிருத்தியையும் எய்துவதற்குப் பின்வரும் அதிகாரப் பங்கீட்டு அடிப்படைகள் முக்கியம் பெறுகின்றன.

 தமிழர்கள் தமக்கேயுரிய நாகரிகம், மொழி, கலாசாரம், மற்றும் பாரம்பரியத்தைக் கொண்ட தனித்துவமிக்க தேசிய இனமாவர். அத்துடன் தொன்று தொட்டே சிங்கள மக்களுடனும் ஏனைய மக்களுடனும் இந்தத் தீவில் வாழ்ந்து வருகின்றனர்.

“ புவியியல் ரீதியாகப் பிணைக்கப்பட்டுள்ளதும், தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதுமான வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களதும், தமிழ் பேசும் முஸ்லீம் மக்களதும் பூர்வீக வாழ்விடங்களாகும்.

“ இலங்கை நாடு ஏற்றுக்கொண்டு, கைச்சாத்திட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் குடியியலுரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சாசனத்திலும், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான சாசனத்திலும் அடங்கியிருக்கும் விதிகளின் பிரகாரம் தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான மக்கள் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களாவர்.

“ முன்னர் இருந்தவாறு ஒன்றுபட்ட வடக்கு-கிழக்கு அலகைக்கொண்ட சமஷ்டிக் கட்டமைப்பிற்குள்ளே அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கின் வரலாற்றுக் குடிகளான தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் மேற்கொள்ளப்படும் அனைத்து அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளினதும் நன்மைகளைப் பெற உரித்துடையவர்கள். இது வடக்கு-கிழக்கில் வாழும் எந்த ஒரு மக்கள் மீதும் எவ்வித முரண்பட்ட தாக்கத்தையும் ஏற்படுத்தா வண்ணம் இருத்தல் அவசியம்.

“ பகிரப்பட்ட இறையாண்மையின்; அடிப்படையில் உருவாக்கப்படும் அதிகாரப்பகிர்வு ஏற்பாடானது நிலத்தின் மீதும், தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்;, சட்டம்-ஒழுங்கு, சட்ட அமுலாக்கம் என்பவற்றின் மீதும், சமூக பொருளாதார அபிவிருத்தயின் அங்கங்களான சுகாதாரம், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி, விவசாயம், மீன்பிடி, கைத்தொழில், கால்நடை அபிவிருத்தி, பண்பாட்டுத்துறை, உள்நாட்டிலும், வெளிநாட்டிலுமிருந்து வளங்களை திரட்டிக்கொள்ளல் மற்றும் நிதி அதிகாரம் என்பவற்றின் மீதானதாகவும் இருக்க வேண்டும்.

“ வடக்கு- கிழக்கில் வாழும் இளைஞர்களுக்கு நேரடி வெளிநாட்டு முதலீட்டின் மூலம் புதிய கைத்தொழிற் துறைகளும் வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்படல் வேண்டும்

“ தேசிய பல்கலைக்கழகங்களிற்கு அனுமதி பெறாதோர் தமக்கு உகந்த துறைகளில் உயர் கல்வியைத் தொடர்வதற்கு மாற்று வழிமுறைகள் செயற்படுத்தப்பட வேண்டும்

மேற்குறித்த யாவும் ஒன்றுபட்டதும் பிளவுறாததுமான இலங்கைக்குள் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com