முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவின் மருமகன் சஷி வெல்கம கைது

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவின் மருமகனுமான சஷி வெல்கம குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று(20) கைது செய்யப்பட்டார். இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பிலேயே சஷி வெல்கம உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இவர்கள் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், இவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

2010ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கான உதிரிப்பாகங்கள் கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சஷி வெல்கம இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக இருந்த காலத்தில் உரிய கேள்விப்பத்திரங்கள் கோரப்படாமல், போக்குவரத்து சபைக்கு நஷ்டத்தை அதிகரிக்கும் வகையிலும் 125 மில்லியன் ரூபா பொது நிதியை ஏமாற்றியிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.

இது தொடர்பில் தாம் விசாரணை நடத்தியிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். சந்தேகநபர் இந்த மோசடியான கொடுக்கல் வாங்கலில் நேரடியாகத் தொடர்புபட்டதன் அடிப்படையில் அவரைக் கைதுசெய்ததாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

இதற்கு அமைய சந்தேகநபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதேநேரம், போக்குவரத்துசபையில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கு விசாரணையில் சஷி வெல்கம, நந்தன பிரியந்த, சஞ்சீவ வைத்திய திலக, சுமித் ஹெட்டியாராச்சி ஆகியோர் வெளிநாட்டுக்குச் செல்வதைத் தடுக்குமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கொழும்பு மேலதிக மஜிஷ்திரேட் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com