முதலமைச்சர் பணிகளில் சம்பந்தன் தலையிடுவது அநாகரீகம் – சுரேஸ்

மக்களுக்கு இன்றைய அரசியல் நிலை தொடர்பாக உண்மையான கருத்தை வெளியிட வேண்டியவர்கள் அவை எல்லாவற்றையும் மறந்து முதலமைச்சருக்கு உரித்தான மாகாணசபை விடயங்களில் மூக்கை நுழைத்து, அதனை தொடர்ந்தும் ஒரு பிரச்சினையாக்குவது இன்றளவில் தேவைதானா? எனவே பிரச்சினைகளை திசைதிருப்பாமல், தமிழ் மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் வினைதிறனுடன் செயற்பட வேண்டும் என ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் கூட்டமைப்பின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு குறித்தும் அதன் பின்னர் இலங்கை தமிழரசுக் கட்சி வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி குறித்தும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பாக சுரேஸ்பிறேமச்சந்திரன் தனது கருத்தை தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடமாகாண முதலமைச்சருக்கும் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் திரு. சம்பந்தருக்கும் இடையில் கடந்த 23.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முழு விபரங்களும் பத்திரிகைகளுக்கு வெளியிடப்படாத நிலையில், வடக்கு மாகாணசபையின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அது மாத்திரமல்லாமல், வடக்கு மாகாண முதலமைச்சர் முன்னெடுக்க இருந்த விசாரணைகளை நிறுத்தும்படியும் அமைச்சர் டெனீஸ்வரனை மாற்றும்படியான ரெலோவின் கோரிக்கைகளை நிறுத்தும்படியும் இவை தொடர்பாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் பேசியே முடிவெடுக்க வேண்டும் என்று திரு. சம்பந்தன் கூறியதாகவும் அதற்கு முதலமைச்சர் உடன் பட்டதாகவும் அவ்வாறானதொரு கூட்டம் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி திரு. சம்பந்தன் அவர்கள் யாழ்ப்பாணம் வரவிருப்பதால் அன்றைய தினம் இந்தக் கூட்டத்தை நடத்தலாம் என்று முடிவு செய்திருப்பதாகவும் அறிகின்றோம்.
இப்பொழுது தமிழரசுக் கட்சியின் தலைமை அவ்வாறான ஒரு கூட்டத்திற்கு முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கலந்துரையாடி, ஒரு முடிவை எட்ட வேண்டும் என்றும் அதற்குப் பின்னர் முதலமைச்சருடன் பேசலாம் என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டபோது, பங்காளிக் கட்சிகளுடன் பேசி அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. இப்பொழுது பல்வேறு ஊழல்கள், குழப்பங்கள் நடைபெற்றிருக்கக்கூடிய சூழலில், இதற்கான விசாரணைணக் குழுக்கள் நியமிக்கப்பட்டு முதலமைச்சர் சில அமைச்சுக்களை மாற்றிய சூழ்நிலையிலும் ஏனைய அமைச்சர்கள் தொடர்பாக விசாரணைக் குழு ஒன்றை நிறுவவிருக்கும் சூழலிலும், இவை தொடர்பாக பங்காளிக் கட்சிகள் கூடி பேச வேண்டும் என்று சம்பந்தன் குறிப்பிடுவதும் பங்காளிக்கட்சிகள் ஒருமித்த கருத்துக்கு வரவேண்டுமென்று தமிழரசுக் கட்சி குறிப்பிடுவதும் இவ்வாறானவர்களை தொடர்ந்து அங்கீகரிக்கும் முயற்சியா என்ற ஐயமும் ஏற்படுகின்றது.
பாராளுமன்ற அரசியல் சாசன வழிநடத்தல் குழுவானது 63முறை கூடியதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் கூறுகின்றார். ஆனால், எமது கடுமையான முயற்சியின் காரணமாக இந்த அரசியல் சாசன முயற்சிகள் பற்றிஅ ங்கத்துவக் கட்சிகளுடன் ஒரேயொருமுறை மட்டுமே கலந்துரையாடப்பட்டுள்ளது. 63முறை பேசியும்கூட இவை தொடர்பான சாதக பாதகங்கள் முன்னேற்றங்கள் தொடர்பாக இதுவரை பங்காளிக்கட்சிகளுக்கு எந்தவிதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை. தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய தருணங்களில்கூட பங்காளிக்கட்சிகளுடன் கலந்துபேச விரும்பாத சம்பந்தன் போன்றோர் இன்று மாகாணசபையில் முதலமைச்சரால் மேற்கொள்ளப்படவுள்ள அவருக்கு உரித்தான நடவடிக்கைகளில் தலையிட்டு அதனை தவறாக வழிநடத்த முயற்சிப்பதும் அதற்காக பங்காளிக்கட்சிகளின் ஒப்புதலைப் பெற முயற்சிப்பதும் அநாகரிகமானது.
யுத்தத்திற்குப் பின்னர், தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். மீள்குடியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ வெளியேற்றம் போன்ற விடயங்கள் தமிழ் மக்களுக்கு முன்னால் உள்ள பிரதான பிரச்சினைகளாக உள்ளன. இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக எமது மக்கள் கடந்த 150 நாட்களுக்கும் மேலாக வடக்கு-கிழக்கு மாகாணம் முழுவதும் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அந்த போராட்டக் காரர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் பெற்றுக்கொடுக்க திரு.சம்பந்தருக்கும் தமிழரசுக் கட்சிக்கும் முடியவில்லை. இவற்றை எவ்வாறு கையாளலாம் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கு எத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றலாம் என்கின்ற விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்கு இதுவரை பங்காளிக்கட்சிகள் அழைக்கப்படவில்லை. இன்னும் கூறுவதாக இருந்தால் போராட்டங்கள் கொச்சைப்படுத்தப்பட்டன. போராடும் மக்களிடம் சென்று ஆண்டவனை வேண்டும்படி திரு.சம்பந்தன் கூறியுள்ளார். சர்வதேச சமூகத்துடன் பேசுகின்றபொழுதும் பலவிடயங்களில் முன்னேற்றம் இருக்கிறது என்று கூறினாரே தவிர அரசாங்கத்தின் உண்மையான சுயரூபத்தை இவர் தோலுரித்துக் காட்டவில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் அரசாங்கத்தைப் பாதுகாப்பதில் இவர்கள் முனைப்பாகச் செயற்பட்டனர்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் விசேட அறிக்கையாளர் இலங்கை அரசாங்கத்தின் மிக மோசமான மனித உரிமைகள் மீறலையும் ஐ.நா தீர்மானங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதையும் இலங்கையில் தொடர்ந்து நடைபெறக்கூடிய சித்திரவதைகள் தொடர்பாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் இன்னும் தமிழர்கள் கைது செய்யப்படுவதைளும் தோலுரித்துக் காட்டியது மாத்திரமல்லாமல்இ இலங்கை அரசாங்கத்தின் இனவாதப்போக்கினையும் தெளிவாக வெளிக்காட்டியுள்ளார்.
மகாநாயகர்கள் புதியதொரு அரசியல் சாசனமோ அல்லது இருக்கின்ற யாப்பில் திருத்தங்களோ தேவையில்லை என்று சொல்லிய போதிலும் அவர்களை மீறி நாம் எதுவும் செய்ய மாட்டோம் என்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உறுதிமொழி அளித்திருக்கும் நிலையில் அரசியல் சாசன விடயங்கள் தொடர்பாக தமிழ் மக்களுக்கு உண்மைக்குப் புறம்பான செய்திகளையே திரு. சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் தெரிவித்து வருகின்றனர்.
யதார்த்த நிலைமைகள் இவ்வாறிருக்கையில், மக்களுக்கு இன்றைய அரசியல் நிலை தொடர்பாக உண்மையான கருத்தை வெளியிட வேண்டியவர்கள் அவை எல்லாவற்றையும் மறந்து முதலமைச்சருக்கு உரித்தான மாகாணசபை விடயங்களில் மூக்கை நுழைத்து, அதனை தொடர்ந்தும் ஒரு பிரச்சினையாக்குவது இன்றளவில் தேவைதானா? எனவே பிரச்சினைகளை திசைதிருப்பாமல், தமிழ் மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் வினைதிறனுடன் ஈடுபடுமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வேண்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com