வடக்கு மாகாண முதலமைச்சர் முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்.பொது நூலகத்தில் இரகசிய கூட்டம் ஒன்று இன்று (19.11.2015) இரவு நடைபெற்றுள்ளது.
இக் கூட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈ.பி.ஆர்.எல். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இவ் இரகசியக் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படாதநிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி மற்றும் தினக்குரல் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படடிருந்ததாக அறியமுடிகின்றது.
இவ் இரகசிய ஒன்றுகூடலிற்கு வடக்கில் உள்ள மருத்துவர்கள், மதகுருமார்கள், பேராசிரியர்கள் சிலரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் அதிருப்தி அணிகளை ஒன்று திரட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்று அணிஒன்றினை உருவாக்குவதற்கான முனைப்புக்கள் அண்மைக்காலமான மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் இவ் இரகசியக் கூட்டம் இடம்பெற்றிருக்கிறது.
உடனடியாக அரசியல் கட்சிசார்ந்த அமைப்பாக உருவெடுக்காது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் சிவில் சமுக அமைப்பாக தமிழ் மக்கள் பேரவை எனும் பெயரில் செயற்பட முடிவெடுத்திருப்பதாகவும் காலப்போக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் அதிருப்தி அளிப்பனவாகவே இருக்கும் நிலையில் கூட்டமைப்பிற்கு எதிராக அரசியல் கூட்டணி ஒன்றினை உருவாக்குவதே இவ் அணியின் நோக்கம் என கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரதிநிதி ஒருவர் வாகீசத்திற்குத் தெரிவித்தார்.