முதலமைச்சர் உரை – இசை நடன மாலை நிகழ்வு

CMஇலங்கை சாரணியர் சங்கம்
மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாட்டுக் குழுக் கிளையின் ஆதரவில்
நடாத்தப்படும் இசை நடன மாலை நிகழ்வு
யாழ்.பரியோவான் கல்லூரி மண்டபம்
2016 ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி திங்கட் கிழமை மாலை 4 மணியளவில்
பிரதம அதிதி உரை
குருர் ப்ரம்மா………………
இலங்கை சாரணியர் சங்கத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாட்டுக் குழுவின் யாழ்.கிளை தலைவர் அவர்களே, இக் கல்லூரியின் அதிபர் அவர்களே, மற்றும் இங்கே மேடையில் வீற்றிருக்கும் விசேட அதிதிகளே, இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையின் எல்லாப் பாகங்களிலிருந்தும் வந்து கலந்துகொண்டிருக்கின்ற எனதருமை மாணவச் செல்வங்களே!
“புசநயவ வழ டிந ரnஙைரந” எனும் தொனிப் பொருளில் மாற்றுத்திறனாளிப் பெண் சாரணியர் பாசறையினரால் நடாத்தப்படும் இசை நடன மாலை நிகழ்வுகளில் கலந்துகொண்டு உங்கள் முன் உரையாற்றவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். நீங்கள் இலகுவில் விளங்கிக் கொள்ளக் கூடிய உங்களது சைகை மொழியில் நேரடியாக என்னால் பேச முடியவில்லையே என்ற வருத்தம் எனது மனதில் எழுகின்ற போதிலும் இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் எனது உரையின் சாராம்சத்தை சமாந்தரமாக சைகை மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வழங்கிக் கொண்டிருப்பது போற்றுதற்குரியது.
ஒரு சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மாற்றுத்திறனாளிகளின் திறமைகள் பற்றியும், அவர்களின் முன்மாதிரியான செயற்பாடுகள் பற்றியும் நான் குறிப்பிட்டு பேசியிருந்தேன். மாற்றுத்திறனாளிகள், மனவளம் குன்றியவர்கள், கண்பார்வை இழந்தவர்கள், செவிப்புலன் அற்றவர்கள் என பலதரப்பட்ட குழந்தைகள் இதுவரை காலமும் முறையான கவனிப்பும் பராமரிப்;பும் இல்லாத காரணத்தினால் அவர்களின் வாழ்க்கை இருண்டதொரு கோளமாக மாற்றப்பட்டிருந்ததுடன் அவர்கள் உலகத்திற்கு தெரியாமலேயே தமது வாழ்க்கைக் காலத்தை நிறைவு செய்து வந்திருந்தனர்.
ஆனால் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான ஒரு விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டு அதன் விளைவாக மாற்றுவலுவுடையோருக்கான பாடசாலைகள், பராமரிப்பு நிலையங்கள், உளவளச் செயற்பாடுகள் என பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் இக் குழந்தைகள் தாமும் ஏனைய சாதாரண குழந்தைகளுக்கு ஒப்பானவர்களாக இயங்கத் தொடங்கியது மட்டுமன்றி தம்மை சாதனையாளர்களாக மாற்றுவதற்கு பலவிதத்திலும் முயன்றுகொண்டிருப்பதை வாழ்த்தாமல் இருக்க முடியாது.
இம்மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக கலை நிகழ்வுகள், பாட்டு, நடனம், நாடகம், இசைக்கருவிகள் பிரயோகம் ஆகிய பல துறைகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு ஏனைய மாணவர்களை விட தாம் முன்மாதிரியாக விளங்க வேண்டும் என்ற அவாவில் செயற்பட்டுக் கொண்டிருப்பது பாராட்டப்பட வேண்டியது.
இவ்வாறான மாணவர்களை பயிற்றுவிப்பது என்பது சற்று கடினமான செயற்பாடாக இருக்கின்ற போதிலும் இவர்களுக்கான ஆசிரியர்கள் மிகப் பொறுப்புணர்வுடன் இம் மாணவர்கள் மீது அதிக கரிசனை காட்டி அவர்கள் வழியில் சென்று அவர்களை நெறிப்படுத்தி இந்த கலை நிகழ்வுகளில் ஈடுபட வைத்ததும் அல்லாமல் அவர்களை மேடையேற்றி நாம் அனைவரும் வியந்து அவர்களின் செயற்பாட்டை பார்க்கக் கூடிய அளவிற்கு பயிற்றுவித்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆசிரியர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள். இவர்களின் சேவை அளப்பரியது. அவர்களின் அன்புள்ளங்களுக்கு என் சிரம் தாழ்த்திய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கை சாரணிய இயக்கத்தில் மாணவர்கள் பல்வேறு மட்டங்களில் வகைப்படுத்தப்பட்டு இச் சேவையில் உள்வாங்கப்படுகின்றனர். உதாரணமாக,
8 வயது தொடக்கம் 10 வயது வரை
11 வயது தொடக்கம் 12 வயது வரை
13 வயது தொடக்கம் 16 வயது வரை
17 வயது தொடக்கம் 21 வயது வரை என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அம் மாணவர்களின் உடல் உள வலுவிற்கேற்ப சாரணியப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இதற்கும் மேலாக மாற்றுவலுவுள்ள பெண் பிள்ளைகளுக்கான சாரணிய இயக்கம் ஒன்று மேலதிகமாக ஆரம்;பிக்கப்பட்டு ஒரு சாரணியனின் விசேட பண்புகளைக் கொண்ட ஒரு சாரணியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதிலும் உள்ள இவ்வாறான மாணவர்களின் குழுக்களை ஒன்று திரட்டி அவர்களின் பிரதேசங்களில் இருக்கக்கூடிய பழக்கவழக்கங்கள் மற்றும் அவ்வப் பிரதேசங்களில் காணப்படக்கூடிய சிறப்புக்கள் பற்றி ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாறிக் கொள்வதற்கும் அவர்களுக்கான மேலதிக பயிற்சிகள் பற்றி தெரிந்துகொள்வதற்கும் இவ்வாறான சந்திப்புக்கள் ஒரு உந்து சக்தியாக அமைகின்றன.
நாம் இந்த மேடையில் ஆற்றுகின்ற உரைகளில் எத்தனை சதவீதம் இவர்களின் செவிவழியாகவோ அல்லது சைகை மொழி மூலமாகவோ இவர்களை சென்றடைவன என்பதை உறுதிப்படுத்தி கூற முடியாத போதிலும் இதில் ஒருபகுதியாவது அவர்களைச் சென்றடையும் என்று நாம் நம்பலாம். நாம் அவர்களின் விசேட குணாதிசயங்கள் மற்றும் சிறப்புக்கள் பற்றிப் போற்றி உரையாற்றுவதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அதன் மூலம் அவர்கள் இன்னும் உற்சாகத்துடன் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
பொதுவாக இவ்வாறான குழந்தைகளின் பெற்றோர்களிடம் நாம் மிகப் பெரியதொரு குறைபாட்டினை அவதானிக்கின்றோம். இப்பிள்ளைகளை பாடசாலையில் கொண்டுவந்து சேர்த்து ஒரு குறுகிய காலத்தினுள் மனம்; சலிப்படைந்துவிடுகின்றார்கள். எனது பிள்ளை பாடசாலையில் சேர்ந்து 3மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் ‘அ, ஆ’ அழகாக எழுதத் தெரியவில்லை என குறைப்பட்டுக் கொள்கின்றார்கள். ஆனால் இப்பிள்ளைகள் நாளாந்தம் கற்றுத்தேறிய பல விடயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள தவறிவிடுகின்றார்கள். பாடசாலையில் சேரும் இவ்வாறான குழந்தைகளுக்குத் தமது உடைகளை நேர்த்தியாக உடுத்துவதற்கு கற்றுத்தருகின்றார்கள். தலை முடியை ஒழுங்காக வாரி விடுவதற்கும் இம் மாணவர்களின் உதட்டில் இருந்து வழியக்கூடிய எச்சிலை அவர்களாகவே துடைத்துவிடுவதற்கும் தமது உணவை தாமாகவே அள்ளி உண்பதற்கும், உணவுக் கோப்பைகள் மற்றும் தேநீர் கோப்பைகளை கழுவி அடுக்கி வைப்பதற்கும் மேலும் இன்னோரன்ன பல செயற்பாடுகளை இம் மாணவர்கள் கற்றுக் கொண்டிருக்கின்ற போதிலும் ‘அ, ஆ’ எழுதாதது மிகப் பெரிய ஒரு குறையாக பெற்றோர்கள் காண்கின்றனர்.

இக்குழந்தைகள் சமூகத்தில் ஏனையவர்களுக்கு ஒப்பானவர்களாக விளங்குவதே முக்கியம். முடியுமானவர்கள் எழுத்துக்களைக் கற்றுக் கொண்டு எழுதவும் வாசிக்கவும் பழகிக் கொள்வது விரும்பத்தக்கது. எனினும் எழுத முடியாதவர்கள் சம்பந்தமாக அதை நாம் ஒரு பெரிய குறையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மாறாக அவர்களின் அன்றாடக் கடமைகளைத் தாமாகவே ஆற்றுவதற்கும் ஏனையவர்கள் முகம் கோணாதபடி தம்மைச் சரியாகப் பராமரிக்கவும் பழகிக் கொள்கின்றார்களா என்பதை அவதானிப்பதே அவசியம்.
அந்த வகையில் இந்த மாணவியர் மிகச் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டு இன்று நடனம் ஆடுவதற்கும் நாடகங்களில் அரங்கேறி வீரவசனங்கள் பேசி நடிப்பதற்கும் இசைக்கருவிகளை இசைப்பதற்கும் பழகிக் கொண்டு தமது ஆற்றல்களை இங்கே வெளியிட்டிருப்பது எம் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது மட்டுமன்றி இவர்களின் முன்னேற்றகரமான நிகழ்வுகள் ஏனையவர்களுக்கும் ஒரு தூண்டுதலாக அமைந்திருக்கின்றது.
செவிப்புலன் மற்றும் பேசுஞ் சக்தி அற்ற பிள்ளைகள் சைகை மொழி கற்கைநெறி மூலம் தமது பாடங்களை மிக இலகுவாக கற்றுக் கொள்வதுடன் அப்பாடங்களில் சிறப்புத் தேர்வுகளை பெற்றிருப்பதையும் நாம் அவதானித்திருக்கின்றோம். அதுபோன்று கட்புலன் அற்றவர்கள் இசைக்கருவிகளை இசைப்பதிலும் சங்கீதம் மற்றும் வாய்ப்பாட்டு ஆகிய துறைகளிலும் துறைசார்ந்த விற்பன்னர்களாக விளங்குவது ஆச்சரியத்தை அளிக்கின்றது.
இம்மாணவர்களின் வடக்குப் பாசறையில் முதலாம் நாள் நிகழ்வாகிய 31ம் திகதி நவீல்ட் பாடசாலையில் ஆரம்ப நிகழ்வுகளும் 2ம் நாள் நிகழ்வாகிய இன்றைய நிகழ்வுகளில் அவர்களின் விசேட திறமைகளை எடுத்தியம்பக்கூடிய வகையில் இசைநடன மாலை என்ற ஒரு விசேட நிகழ்வை ஒழுங்கு செய்து அதன்மூலம் அவர்களின் சிறப்பை வெளிப்படுத்தவும், நாளைய தினம் கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பாடசாலையாக விளங்குகின்ற சிவபூமி கல்வி நிறுவனத்தில் அவர்களின் 3ம் நாள் நிகழ்வுகளை நடாத்தவும் அன்றைய முழு தினமும் சிவபூமி இல்லத்தில் வீற்றிருந்து அங்கே கல்வி பயிலக்கூடிய மாணவர்களுடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் தாமும் பங்கேற்று மகிழ இருக்கின்றார்கள் இலங்கை சாரணியர் சங்கத்தினர்.

புசநயவ வழ டிந ருnஙைரந என்றால் தனித்துவம் பெருமையுடைத்து என்று பொருள்படும். நாம் ஒவ்வொருவரும் இறை சக்தியை எம்முள் கொண்டுள்ளோம். எமது உடல், உள்ளம், சூழல், கல்வி, அனுபவம் போன்றவற்றால் எமது நடவடிக்கைகள் மாற்றமடைகின்றன. உள்ளே ஒளிரும் அந்த ஒளி வெவ்வேறு விதமாக எம் ஒவ்வொருவர் ஊடாகவும் பரிணமிக்கின்றது. ஆகவே அடிப்படையில் ஒன்றாகவும் பரிணமிப்பில் பலவாகவும் நாம் காணப்படுகின்றோம். உதாரணத்திற்கு மின்சாரத்தை எடுத்துக் கொள்ளலாம். ஒரு பாரிய நிகழ்வில் எத்தனை விதவிதமான வெளிச்சங்களைக் காண்கின்றோம். மின்சாரம் ஒன்று. மத்திய சுவிட்சை அணைத்து விட்டால் அத்தனை மின்குமிழ்களும் வெளிச்சம் அற்றிருக்கும். ஆனால் மின்சாரம் எங்கும் நிறையத் தொடங்கியதும் ஒவ்வொரு மின்குமிழும் வெவ்வேறு விதமாக ஒளி பரப்பத் தொடங்கிவிடுவன. அந்த விதத்தில் அவை ஒவ்வொன்றும் தனித்துவம் பெற்ற மின்குமிழ்கள். அவை பெருமைக்குரியவை. மாற்றுத்திறனாளிகளான நாங்கள் ஒவ்வொருவரும் ஒரே உள்ளக ஒளியோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் வெளிப்படையாகப் பார்க்கும் போது தனித்துவமான மனித அலகுகளாகவே விளங்குகின்றோம். எமது தனித்துவத்தை மதிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சி இன்று நடைபெறுகின்றது.
எனவே இந்த மாணவ மாணவியர் பாராட்டப்பட வேண்டியவர்கள், போற்றப்படவேண்டியவர்கள். இம் மாணவ மாணவியர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து இவ்வாறாக திறம்பட செயற்பட வைத்த ஆசிரிய ஆசிரியைகளை உளமார மனமார வாழ்த்தி எனது உரையை இத்துடன் நிறைவு செய்கின்றேன்.

நன்றி வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com