முடிவெடுக்கும் அதிகாரம் முதல்வருக்கே – பங்காளிக் கட்சிகள் இணக்கம் – சம்பந்தனும் ஒத்திசைவு

முதலமைச்சர் தனக்கிருக்கும் சட்டரீதியான தற்துணிவு அதிகாரங்களைப் பயன்படுத்தி அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்தவோ திருத்தி அமைப்பதற்கோ அங்கத்துவக் கட்சிகள் சம்மதத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்நிலையில் வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இந்த முடிவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒத்திசைந்ததாக தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் முதலமைச்சருக்குமிடையிலான சந்திப்பு நேற்று (05) மாலை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே இம் முடிவு எடுக்கப்பட்டதாக முதலமைச்சர் ஊடகங்களுக்குக் குறிப்பிட்டுள்ளார்.

இச் சந்திப்புக் குறித்துக் குறிப்பிட்ட முதலமைச்சர்,

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், கட்சித்தலைவர்களும், முதலமைச்சரும் தமிழ்மக்களின் நலன்கருதி பின்வரும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

1. முதலமைச்சர் தனக்கிருக்கும் சட்டரீதியான தற்துணிபு அதிகாரங்களைப் பிரயோகித்து அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்தவோ திருத்தி அமைப்பதற்கோ அங்கத்துவக் கட்சிகள் சம்மதத்தை வெளிப்படுத்துகின்றன.

2. அமைச்சர்கள் மாற்றப்பட்டால் அது குறித்த அமைச்சர் எந்த ஒரு குற்றச்சாட்டையும் இழைத்ததாக அர்த்தப்படாது.

3. அமைச்சரவை நியமனங்களைப் பொறுத்த மட்டில் அங்கத்துவக்கட்சிகளின் ஆலோசனைகளையும் கருத்தில் எடுத்து அவை மேற்கொள்ளப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

நேற்றைய சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,  தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈபிஆர்எல்எவ் தலைவர் க.சுரேஸ்பிரேமசந்திரன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம்அடைக்கலநாதன் மற்றும் செயலாளர் ந.சிறிக்காந்தா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com