சற்று முன்
Home / செய்திகள் / முக்கிய பிரமுகரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதா ? – குறிபார்த்துச் சுடும் சீன பிரஜை கொழும்பில் கைது

முக்கிய பிரமுகரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதா ? – குறிபார்த்துச் சுடும் சீன பிரஜை கொழும்பில் கைது

இலங்கையின் முக்கிய பிரமுகர் ஒருவரைக் கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் குறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்ற சீனப் பிரஜை ஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புவைத்திருந்ததாகவும் முக்கிய அரசியல்வாதிகள் சிலருடனும் தொடர்புவைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இலங்கையின் மிக முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்கு வைக்கத் திட்டமிட்டிருந்தாரா என்ற சந்தேகத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நி மா சி ரென் என்ற சீனரே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பிலுள்ள முன்னணி கசினோ சூதாட்ட நிலையம் ஒன்றில் பணியாற்றியிருந்தார்.

முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றவே தாம் சிறிலங்கா வந்ததாக குறிப்பிட்ட சீனர் தெரிவித்திருந்தார். எனினும், அவர் சீன சூதாட்டக்காரர்களால் நடத்தப்படும் கசினோ நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

கைது செய்யப்பட்ட போது, இவரது சுற்றுலா நுழைவிசைவு காலாவதியாகியிருந்தது என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர், சூட்டுப் பயிற்சி பெற்றவர் என்றும், முக்கிய பிரமுகர்களை இலக்கு வைக்கும் மாபியா குழுக்களுடன் தொடர்புடையவர் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சீனர், சிறிலங்கா அதிபர் இல்லம், அலரி மாளிகை, மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் மொனாச், கிரெஸ்காட் உள்ளிட்ட அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதிகளுக்கு அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலேயே தங்கியிருந்துள்ளார்.

நி மா சி ரென்னின் மனைவி, சீனாவில் அரச புலனாய்வாளராக பணியாற்றுகிறார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சீனர், தென்பகுதியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் ஏனைய அரசியல்வாதிகளுடன் கிரமமான தொடர்பில் இருந்துள்ளார்.

இவர் சிறிலங்காவில் தங்கியிருந்ததற்கான நோக்கத்தை கண்டறிவதற்கு விசாரணையாளர்கள் முயற்சிக்கின்றனர். அத்துடன், இவருடன் தொடர்பில் இருந்த தொலைபேசி இலக்கங்கள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

நாட்டில் எந்த நேரத்திலும், ஆட்சி மாற்றம் நிகழலாம் என்று எதிரணி அரசியல்வாதிகள் சிலர் கூறி வரும் நிலையில், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சதித்திட்டத்துடன் சீன சூட்டாளர் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சீனர், நுழைவிசைவு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், நாளை நாடுகடத்தப்படவுள்ளார். இவர் தற்போது, மீரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர் சதித் திட்டங்கள் எதனுடனும் தொடர்புபட்டிருந்தாரா என்பது குறித்து, நாடு கடத்தப்பட்ட பின்னரும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிப்பதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com