சற்று முன்
Home / அரசியல் கட்டுரைகள் / மாவீரர் நாள் 2016 – நிலாந்தன்

மாவீரர் நாள் 2016 – நிலாந்தன்

15235825_1136333139750027_2621626964274853126_o இம்முறை தாயகத்தில் மாவீரர்நாள் ஒரு வெகுசன நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. அரசியல்வாதிகளின் நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. மே பதினெட்டுக்குப்பின் தாயகம் தமிழகம் டயஸ்பொறா ஆகிய மூன்று தரப்புக்களும் ஒரே நாளில் ஒரு விடயத்துக்காக உணர்வுபூர்வமாக ஒன்று திரண்ட மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று.

தாயகத்தில் அதை ஒரு வெகுசன நிகழ்வாக ஒழுங்குபடுத்திய அரசியல்வாதிகளே அதைத் தங்களுடைய நிகழ்வாகவும் வடிவமைத்திருந்தார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

கடந்த ஏழாண்டுகாலப் பகுதிக்குள் தமிழ் மக்கள் துணிந்து காலடிகளை முன்வைத்த மற்றொரு நிகழ்வு அது. கடந்த ஏழு ஆண்டுகளில் தாயகத்தில் முதன்முதலாக ஒரு வெகுசன நிகழ்வாக அனுஷ்டி க்கப்பட்ட மாவீரர் நாள் இது. மாற்றத்தின் விரிவை தமிழ் மக்கள் வெற்றிகரமாக பரிசோதித்த ஒரு வெகுசன நிகழ்வும் இது. ஆட்சி மாற்றத்தை உடனடுத்து யாழ் பல்கலைக்கழக சமூகமூம் சிவில் சமூகங்களும் இணைந்து யாழ்ப்பாணத்தில் முதலாவது பெரிய ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தியிருந்தன. அதன் பின் இவ்வாண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நினைவு கூரப்பட்டது. அதன் பின் எழுக தமிழ், இப்பொழுது மாவீரர் நாள்.

முன்னைய மூன்று நிகழ்வுகளும் ஆயுதப் போராட்டத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கவில்லை. அவை பெருமளவுக்கு பொதுமக்கள் சம்பந்தப்பட்டவை. ஆனால் மாவீரர் நாள் அப்படியல்ல. அது புலிகள் இயக்கத்தின் தியாகிகளை நினைவு கூரும் ஒரு நாள். அந்த இயக்கம் இலங்கைத்தீவில் இப்பொழுதும் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த இயக்கத்தின் இலட்சியமாகிய தனிநாட்டுக் கோரிக்கைக்கு எதிரான ஆறாவது திருத்தச்சட்டம் இப்பொழுதும் அரசியல் யாப்பில் உண்டு. தவிர தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தைப் பயங்கரவாதமாகப் பார்க்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் இப்பொழுதும் அமுலில் உண்டு. அச்சட்டத்தின் கீழ் கடந்த மாதமும் சில கைதுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தனை தடைகளையும் தாண்டி மாவீரர் நாளை ஒரு வெகுசன நிகழ்வாக அனுஷ்டித்தமை என்பது அதில் பங்குபற்றிய சாதாரண சனங்களைப் பொறுத்தவரை ஒரு துணிச்சலான அடிவைப்புத்தான். அதை யாராவது அரசியல்வாதிகள் அல்லது கட்சிகள் தான் முன்னெடுக்க வேண்டியும் இருந்தது. புலிகள் இயக்கத்தின் வீரத்தையும், தியாகத்தையும் காட்டி வாக்குக் கேட்ட அரசியல் வாதிகளே அதை முன்மாதிரியாகச் செய்யவும் வேண்டியிருந்தது. தமிழ் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தமது வீரத்தையும், விசுவாசத்தையும் எண்பிக்க வேண்டிய ஒரு நிகழ்வாகவும் அது காணப்பட்டது.

SAMSUNG CAMERA PICTURES

“ஒரு நாடு இருதேசம்” என்ற கொள்கையை முன்வைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது மாவீரர்நாளை முன்வந்து நடாத்தும் என்று ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்தக்கட்சி அதை துயிலுமில்லங்களில் செய்யவில்லை. மாறாக தமது அலுவலகத்தோடு மாவீரர்நாளை மட்டுப்படுத்திக் கொண்டது. அங்கும் கூட அதை அவர்கள் மாவீரர் நாளாக அனுஷ்டிக்கவில்லை. போரில் உயிர்துறந்த அனைவரையும் நினைவு கூரும் ஒரு நிகழ்வாகவே அது அனுஷ்டிக்கப்பட்டது. அதற்கு அக்கட்சி பின்வருமாறு விளக்கம் கூறியது.

புலிகள் இயக்கத்துக்கு எதிரான சகல சட்ட ஏற்பாடுகளும் அப்படியே அமுலில் இருக்கும் ஓர் அரசியற் சூழலில் அந்த இயக்கத்தின் தியாகிகளை நினைவு கூர்வது என்பது சட்டரீதியாக ஆபத்தானது. தமது கட்சி அந்த நாளை துயிலுமில்லங்களில் அனுஷ்டி த்தால் அதைச் சாட்டாக வைத்தே அரசாங்கம் தம்மை சட்ட ரீதியாக முடக்க முயற்சிக்கலாம் என்று அக்கட்சியினர் தெரிவித்தார்கள். ஏற்கனவே தமது கட்சியைச் சேர்ந்த சிலர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதையும் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.15202491_1160553330647040_7527475126524910319_n

அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டமைப்பு அந்தத்தீர்வின் பங்காளிபோல தோன்றுகிறது. எனவே அத்தீர்வைக் கேள்விக்குட்படுத்தக் கூடிய தமிழ் தரப்புக்களில் முக்கியமானது தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான். எனவே அந்தக் கட்சியை சட்டரீதியாக முடக்கி வைத்திருக்க வேண்டிய ஒரு தேவை அரசாங்கத்திற்கு உண்டு. அதனால் அரசாங்கத்திற்கு அப்படியொரு வாய்ப்பை வழங்கக் கூடாது என்பதற்காக தமது கட்சியானது துயிலுமில்லங்களில் மாவீரர் நாளை அனுஷ்டிக்கவில்லை என்றும் அக்கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

அப்படியானால் கூட்டமைப்புக்கு அது போன்ற சட்டச் சிக்கல்கள் எதுவும் ஏன் இதுவரையிலும் ஏற்படவில்லை? கடந்த மாவீரர் நாளை பெருமளவுக்குக் கூட்டமைப்பே தத்தெடுத்தது போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பு பிரமுகர்கள் துயிலுமில்லங்களில் பொதுச் சுடர்களை ஏற்றினார்கள். சிலர் துயிலுமில்லங்களில் செல்பியும் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்களில் யாரும் இதுவரையிலும் கைது செய்யப்படவுமில்லை. விசாரிக்கப்படவுமில்லை. மாறாக, சம்பந்தரும், சுமந்திரனும் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு சுதந்திர வெளிக்குள்தான் இப்படியாக மாவீரர்களை நினைவு கூர முடிந்தது என்று ஒரு விளக்கமும் தரப்படுகிறது.

குறிப்பாக, கடந்த மாவீரர் நாள் நிகழ்வுகளில் அதிகம் கவனிப்பைப் பெற்றது. கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லம்தான். ஒப்பீட்டளவில் அதிக தொகை பொதுசனங்கள் பங்குபற்றிய துயிலுமில்லமும் அதுவே. சில நாட்களுக்கும் முன்னரே நன்கு திட்டமிடப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு நினைவு கூர்தல் அது. கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் முன்னின்று துயிலுமில்லங்களைத் துப்பரவாக்கத் தொடங்கினார். சாதாரண சனங்கள் அவரைப் பின்தொடர்ந்து களத்தில் இறங்கினார்கள். இங்கிருந்து தொடங்கி மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கான ஒரு பொது உளவியல் உருவாகலாயிற்று.

ஊடகங்கள் குறிப்பாக சமூக வலைத்தளங்கள் அந்த உளவியலை மேலும் உற்சாகப்படுத்திக் கட்டியெழுப்பின. தீப்பந்தங்களுக்காக நூற்றுக்கணக்கான இரும்புக்கம்பிகள் முன்கூட்டியே வளைத்தெடுக்கப்பட்டன. அந்தக் கம்பிகளையும், கொடித்துணிகளையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கான நீராகாரத்ததையும் கிளிநொச்சி வர்த்தகர்களும் ஆர்வலர்களும் தரமாக முன்வந்து வழங்கியிருக்கிறார்கள். மாவீரர் நாளுக்கு முதல் நாள் இரவே துயிலுமில்லத்தைச் சுற்றி பிரகாசமான மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.15203248_1194175307318995_6182098951215105653_n

இந்த ஏற்பாடுகள் யாவும் அரச புலனாய்வுத் துறைக்கு நன்கு தெரியும். குறிப்பாக மேற்படி ஒழுங்குகளை முதலில் முன்னின்று தொடக்கிய மாகாணசபை உறுப்பினர்; கடந்த சனிக்கிழமையன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு ஒரு கடிதத்தை கொடுத்திருக்கிறார். அக்கடிதத்தில் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கான அனுமதி கோரப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. மேலும் அந்த நிகழ்வுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் அக்கடிதத்தில் கேட்கப்பட்டிருந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. ஆனால் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் அக்கடிதத்திற்கு உத்தியோகபூர்வமாகப் பதில் அளித்திருக்கவில்லை என்று அறிய முடிகிறது.

இது போலவே முழங்காவில் துயிலுமில்லத்தைத் துப்பரவாக்கிக் கொண்டிருந்தவர்களை அப்பகுதியில் உள்ள பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளில் ஒருவர் அணுகி ஏதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவையா என்று கேட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.SAMSUNG CAMERA PICTURES

கிளிநொச்சியில் உள்ள கரைச்சிப்பகுதி ஒப்பீட்டளவில் சனச்செறிவானது. புலிகளின் வீழ்ச்சிக்கு முன்பு அவர்கள் கடைசியாகக் கொடிகட்டிப்பறந்த ஒரு தலைப்பட்டினம் அது. நவீன தமிழில் தோன்றிய வீரயுகம் ஒன்றின் கடைசித் தலைப்பட்டினம் அது. போர் நிறுத்த காலத்தில் அதிகம் மினுங்கிய பட்டினமும் அதுவே. போர்க்காலத்தில் அதிகம் பாழடைந்த ஒரு பட்டினமும் அதுவே. எனவே ஒரு வீரயுகத்தின் நினைவுகளை இரை மீட்டி பொதுசனங்களைக் கனகபுரத்தை நோக்கிக் கொண்டு வருவது கூட்டமைப்புக்குக் கடினமாக இருக்கவில்லை.

சனங்கள் தன்னியல்பாகவே முன்வந்தார்கள். தலைவர்களிடம் ஏதும் சூதான நிகழ்ச்சி நிரல்கள் இருந்திருக்கலாம். ஆனால் சனங்கள் விசுவாசமாகவும், உணர்வு பூர்வமாகவும் பங்கேற்றார்கள். அரசியல் வாதிகள் முன்சென்றபடியால்தான் சாதாரண சனங்கள் பின்சென்றார்கள் என்பதே உண்மை நிலவரம் ஆகும். கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தை கூடிய பட்சம் பயன்படுத்திக் கொண்டுள்ளது. கூட்டமைப்பு மாவீரர் நாளை அனுஷ்டி ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறது என்று அரசாங்கத்துக்கு முன் கூட்டியே தெரியும். அரசாங்கம் அதைத் தடுக்க எத்தனிக்கவில்லை. அதை உத்தியோகபூர்வமாக அனுமதிக்காவிட்டாலும் அதை அவர்கள் கண்டும் காணாமலும் விட்டார்கள். மாவீரர்நாளைக் கூட்டமைப்பு கைப்பற்றுவதை அரசாங்கமும் விரும்பும். அந்த நாளை செயற்பாட்டியக்கங்களோ அல்லது அரசியல் இயக்கங்களோ கைப்பற்றுவதை விடவும் வாக்குவேட்டை அரசியல் வாதிகள் அதைத் தத்தெடுப்பதை அரசாங்கம் விரும்பும். மறைமுகமாக ஆதரிக்கவும் செய்யும்.

மாவீரர் நாளைப் போன்ற உணர்வெழுச்சியான நிகழ்வுகளை அவற்றின் பெறுமதியுணர்ந்து விசுவாசமாக முன்னெடுக்கும் அமைப்புக்கள் கையேற்பதை அரசாங்கம் அனுமதிக்காது. அது ஆயுதப்போராட்டத்தின் தொடர்ச்சியாக வரக்கூடிய ஓர் அரசியலை ஊக்குவித்துவிடும். எனவே இப்படிப்பட்ட நிகழ்வுகளை வாக்குவேட்டை நிகழ்ச்சி நிரல்களுக்கு கீழ்ப்பட்டவைகளாக மாற்றுவது நீண்ட கால நோக்கு நிலையில் அரசாங்கத்துக்கு அனுகூலமானது. குறிப்பாக இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வைக் கொண்டுவரவிருக்கும் ஒரு பின்னணியில் கூட்டமைப்பின் வாக்குத்தளத்தைப் பலப்படுத்த அரசாங்கம் திட்டமிடுகிறதா?

வரவிருக்கும் தீர்வு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர்கள் அண்மைக்காலமாக தெரிவித்துவரும் கருத்துக்கள் ஆவிக்குரிய சபையினர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை நினைவூட்டுகின்றன. “நம்பிக்கையோடிருப்போம்”, “நிதானமாக இருப்போம்” “நாம் இருளான காலத்திலிருந்து ஒரு வெளிச்சத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறோம்” “ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது”…. என்றெல்லாம் கூறப்படுகிறது. கூட்டமைப்பு ஒரு தீர்வை நோக்கி தமிழ் மக்களைத் தயார் படுத்துகிறதா?

ஆனால் அண்மையில் அரசத்தலைவரைக் கூட்டமைப்புச் சந்தித்தபோது அச்சந்திப்பில் பங்குபற்றியவர்கள் சிலர் தரும் தகவல்களின்படி நிலமைகள் அப்படியொன்றும் திருப்திகரமானவைகளாகத் தோன்றவில்லை. அச்சந்திப்பில் சம்பந்தர் பெருமளவுக்கு அடக்கியே வாசித்ததாகக் கூறப்படுகிறது. மாவை வழமைக்கு மாறாக சில விடயங்களை அழுத்திக் கூற முற்பட்டிருக்கிறார். குறிப்பாக ஒற்றையாட்சிக்கு எதிராக அவர் கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரைத்; தொடர்ந்து பேசவிடாது தடுத்திருக்கிறார்கள்;. அவர் தெரிவித்த கருத்துக்கள் அந்த உரையாடலிற்கு பொருத்தமற்றவை என்ற தொனிப்பட மற்றொரு கூட்டமைப்பு முக்கியஸ்தர் அரசுத்தலைவருக்கு ஆங்கிலத்தில் கூறியிருக்கிறார்.

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் அரசியல் தீர்வைப் பற்றிக் கதைத்திருக்கிறார். அவர் அப்படிக் கதைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்புப்பற்றி யாரும் வாயைத்திறக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக ஒரு தகவல் உண்டு.15267652_1032797640182007_4867928320823510488_n

இதுதான் நிலமை என்றால் இனப்பிரச்சினைக்கான உத்தேச தீர்வில் கூட்டமைப்பு பங்காளியாகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்து வருகின்றன என்று அர்த்தம். எனவே தனது பங்காளியின் வாக்கு வங்கியைப் பலப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்குண்டு. வரும் ஆண்டில் புதிய யாப்புக்கான சர்வசனவாக்கெடுப்பு நடக்குமாயிருந்தால் அதில் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்குமாயிருந்தால் தமிழ் மக்களின் வாக்குகள் கூட்டமைப்புக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்குண்டு.

கடந்த மாவீரர்நாள் அந்த நோக்கத்தோடு பயன்படுத்தப்படவில்லை என்பதை எதிர்காலத்தில் நிரூபிக்க வேண்டிய தேவை சம்பந்தப்பட்ட கூட்டமைப்பு முக்கியஸ்தர்களுக்கு உண்டு.

இவ்வாண்டு மே 18 நினைவு கூரப்பட்ட போது அதை அரசியல்வாதிகளின் நிகழ்வாக சுருக்கியது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. எந்த ஒரு கட்சியோ அல்லது அரசியல் வாதியோ அதைப் பொருத்தமான விதத்தில் பொறுப்பெடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் மாவீரர் நாளை பல்கலைக்கழக மாணவர்களும், அரசியல்வாதிகளும் பொறுப்பெடுத்தார்கள். அப்படிப் பொறுப்பெடுத்த அரசியல்வாதிகள் அந்த நாளின் மரபை புனிதத்தைக் கெடுத்து விட்டார்கள் என்றும் விமர்சிக்கப்படுகிறது. அரசியல் வாதிகள் அப்படித்தானிருப்பார்கள். அவர்களுடைய ஒழுக்கம் அதுதான். முழங்காவில் துயிலுமில்லத்தில் மாவை சுடரேற்றியபோது அவருடைய பொலிஸ் மெய்க்காவலர் பின்னணியில் நிற்கிறார். இந்தக்காட்சி புலிகள் இயக்கத்தை விசுவாசிப்பவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் அதுதான் இலங்கைத்தீவின் இப்போதுள்ள களயதார்த்தம். இந்தக் கள யதார்த்தத்தை உள்வாங்கி அதைக் கடந்து சென்றுதான் தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டியிருக்கிறது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com