மாலத்தீவுகளில் அவசரநிலை பிரகடனம்

தலைநகர் மாலியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் வெடிப்பொருட்களும் ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மாலத்தீவுகளில் ஒரு மாதத்துக்கு அவசரநிலையை அந்நாட்டு அரசு பிரகடனம் செய்துள்ளது.

இதுதொடர்பாக, மாலத்தீவு அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் முவாஸ் அலி ட்விட்டரில், “புதன்கிழமை மதியம் 12 மணியிலிருந்து 30 நாட்களுக்கு மாலத்தீவுகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

மாலியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியைச் சோதனையிட்டபோது, அதில் வெடிப்பொருட்கள், ஏராளமான ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவு மாளிகையிலும் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த ஆயுதங்கள் மாலத்தீவு ராணுவத்துக்குச் சொந்தமானவை எனத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பாதுகாப்புப் படையினருக்கு அதிகபட்ச அதிகாரத்தை அளிக்கும் வகையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆயுதங்கள் எதற்காக கொண்டுவரப்பட்டன, ராணுவ ஆயுதக் கிடங்கிலிருந்து அவை எப்படி வெளியே கொண்டு வரப்பட்டன என்பது தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளது.

மாலத்தீவுகள் அதிபர் அப்துல்லா யமீன் பயணம் செய்யவிருந்த படகில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இது அதிபரைக் கொல்ல நடந்த முயற்சி எனக் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக துணை அதிபர் அகமது அதீப் கடந்த அக்டோபர் 25-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

மேலும், மலேசியாவில், மாலத்தீவு மூத்த தூதரக அதிகாரி மற்றும் நான்கு மாலத்தீவு குடிமக்கள் மாலத்தீவுகள் அதிபரைக் கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, மாலத்தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதிகஅளவிலான ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், உடனடியாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com