மாபியா கும்பலிடமிருந்து எம்.எல்.ஏ தப்பியது எப்படி – அதிரடி றிப்போட்

ஓ.பி.எஸ். கூடாரத்துக்குத் தப்பிவந்த எம்.எல்.ஏ-க்களில் மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் வருகை, தமிழக அரசியல் களத்தை வேறு வடிவத்துக்கு மாற்றியுள்ளது. ‘மாறுவேடத்தில் தப்பி வந்தேன்’ என்றும், ‘என்னைக் கடத்தினார்கள்’ என்றும் புகார்கொடுத்து பரபரப்பைக் கிளப்பிவருகிறார். கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்து எம்.எல்.ஏ தப்பிவந்தது எப்படி? அந்தத் திக்… திக் நிமிடங்கள்….

‘‘13-ம் தேதி இரவு 11 மணிக்கு அசந்து தூங்கிக் கொண்டிருந்தபோது விடாமல் எனது செல்போன் ஒலித்துக்கொண்டே இருந்தது. கடந்த சில நாட்களின் வேலைப் பளு காரணமாகத் தெரியாத அந்த நம்பரை எடுக்க மனம் இல்லாமல் சைலன்ட் மோடில் போட்டுவிட்டு மீண்டும் தூங்கிவிட்டேன். எனது ரிங்டோனாக இருந்த, லா… லீ… லா… லீ… லோ… என்கிற அந்த மலையாளத் தாலாட்டுப் பாட்டுக்கூட இந்த அரசியல் சூழலில் ஒப்பாரி பாடலாக என் காதுகளில் ஒலித்தது. வேண்டாவெறுப்பாக போனை எடுத்தேன்.

‘பிரம்மா சாரா?’

‘ஆமாங்க. நீங்க யாரு?’

‘சார்… இன்னும் அரை மணிநேரத்துல திருவான்மியூர் டிப்போ பக்கத்துல வர முடியுமா?’

‘நீங்க யாருன்னு சொல்லுங்க, அங்க எதுக்கு வரணும்?’

‘கூவத்தூர்ல, எம்.எல்.ஏ-க்கள் எல்லாரையும் அடைச்சுவெச்சு இருக்காங்க. அங்கேயிருந்து ஒருத்தர கூட்டிட்டுவரப் போறோம். நீங்க வந்தா எங்களுக்குப் பாதுகாப்பா இருக்கும். வர முடியுமா?’

‘என் நம்பரை, உங்களுக்கு யார் கொடுத்தா?’

‘ஹைகோர்ட் அட்வகேட் ஒருத்தர் கொடுத்தாரு?’ அப்புறம், வரும்போது மறக்காம வெள்ளைச் சட்டை போட்டுக்கிட்டு வந்துருங்க.’

அடுத்த, 15 நிமிடங்களில் திருவான்மியூர் டிப்போ அருகில் இருந்தேன். அந்த நம்பருக்கு டயல் செய்தேன்.

‘சார்… நான் வந்துட்டேன்.’

‘ஒரு டீ சாப்பிட்டுக்கிட்டு இருங்க. 10 நிமிஷத்துல வந்துறோம்’ என்று மறுமுனையில் இருந்து பதில் வந்தது. பக்கத்துக் கடையில் டீயை ஆர்டர் செய்து குடித்துவிட்டுக் காத்திருந்தேன். 15 நிமிடங்களுக்கு மேல் ஆகியும் யாரும் வரவில்லை. வெறுத்துப்போய், அந்த நம்பருக்கு மீண்டும் கால் செய்தேன். அப்போது, பின்னால் இருந்து ஒருகை என் முதுகைத் தட்டியது.

கூவத்தூர்

‘போகலாம் சார்…’

என்னைத் தோளில் தட்டிய நபர், அவ்வளவு நேரம் என் அருகில்தான் நின்றுகொண்டு இருந்தார். ‘நீங்கதானா? சாரி சார்… மன்னிசுருங்க. எங்களுக்கு உங்கள முன்னபின்ன தெரியாது. தகவலை வேற யாருக்கும் நீங்க சொல்றீங்களான்னு செக் பண்ணத்தான் உங்க பின்னாடியே நின்னேன்.’

‘இப்ப உங்க சந்தேகம் தீர்ந்துச்சா?’

‘தப்பா எடுத்துக்காதீங்க. பல வருசமா இந்தக் கட்சியிலதான் இருக்கேன். எம்.எல்.ஏ எங்க நண்பர். அவருதான், போன் பண்ணி ‘வாங்க’ன்னு கூப்பிட்டாரு. ஆனா, ‘எங்களுக்குப் பயமா இருக்கு’ன்னு சொன்னோம். ‘பயப்படாதீங்க. நான் பாத்துக்கிறேன். கார் எடுத்துட்டு வாங்க’ன்னு கூப்பிட்டாரு. இப்ப, நீங்க எங்ககூட வர்றது அவருக்குத் தெரியாது’ என பேசிக்கொண்டே… வெள்ளை நிற வெண்டோ கார் அருகில் அழைத்துச் சென்றார். காரில் இருந்த அவரது நண்பர் ஒருவரை, எனக்கு அறிமுகப்படுத்திவைத்தார். எங்கள் பயணத்தைக் கூவத்தூர் நோக்கித் தொடர்ந்தோம்.

நாங்கள் கூவத்தூரை அடைந்தபோது 2 மணி ஆகி இருந்தது. மெயின் ரோட்டிலிருந்து சொகுசு விடுதி நோக்கிச் செல்லும் பாதையில் செல்லத் தொடங்கினோம் பகலில் செய்தி சேகரிக்க அங்கு சென்று இருக்கிறேன். ஆனால், இரவில் செல்வது சற்றுப் பயத்தை ஏற்படுத்தியது. தெருவிளக்குகள் எதுவும் எரியவில்லை. ஒரு கூர் இருட்டாக அந்த இடம் காட்சியளித்தது. தூரத்தில் சிலர், தெருவிளக்குகளைக் கல்லால் அடித்து உடைப்பது எங்களுடைய வாகன வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தது. எங்கள் வண்டியின் சத்தத்தைக் கேட்டு அந்தக் கும்பல், நேராக எங்களை நோக்கி வந்தனர். வண்டியை நிறுத்திவிட்டுக் கண்ணாடியை இறக்கினார், முன்சீட்டில் இருந்தவர். அந்தக் கும்பலில் ஒருவர், எங்கள் முகங்களில் எல்லாம் டார்ச் அடித்துப் பார்த்துவிட்டு, ‘நீங்க யாரு, இங்க எதுக்கு வந்து இருக்கீங்க’ என்றார். ‘நாங்க, மதுரை எம்.எல்.ஏ சரவணனைப் பார்க்க வந்திருக்கோம். அவருதான் உடுத்துறதுக்கு டிரஸ் இல்லைன்னு எடுத்துட்டு வரச் சொன்னாரு. நாங்க எல்லாம் மதுரையில இருந்து வர்றோம்’ என… என்னை அழைத்துச் சென்ற நண்பர் அவரிடம் சொல்ல, உடனே அந்த நபர், போனை எடுத்து… ‘சரவணன் எம்.எல்.ஏ-வைப் பார்க்க, அவுங்க ஊருல இருந்து ஆள் வந்திருக்காங்க. உள்ளே விடவா’ எனக் கேட்டுவிட்டு எங்களை எல்லாம் ஏற இறங்கப் பார்த்தார். பின்பு, ‘போனில் சரி அனுப்புறேன்’ எனக் கூறிவிட்டு… ‘போங்க’ என்று கூறி அனுப்பிவைத்தனர். எங்களுக்கு இப்போதுதான் மூச்சு இயல்பாக வந்தது. அதிலும், முக்கியமாக எனக்கு? ஏனென்றால், அந்தக் கும்பலில் நின்ற ஒருவருக்கு என்னை நன்றாகத் தெரியும். அவர், சென்னையில் மையப் பகுதியில் பொறுப்பில் உள்ள நிர்வாகி ஒருவரின் உதவியாளர். நான், பின்சீட்டில் உட்கார்ந்து இருந்ததால், என்னை அவருக்குச் சரியாக அடையாளம் தெரியாமல் போயிருக்கலாம். அதைவிட முக்கியம், என்னை அடையாளம் காணும் நிலையிலும் அவர் இல்லை. எங்கள் கார், நேராக சொகுசு விடுதி வாசலில்போய் நின்றது. போர்வையைப் போர்த்தியபடி இருவர், எங்கள் வாகனம் அருகில் வந்தனர். ‘எல்லாரும் தூங்கிட்டாங்க… நீங்க கார்ல இருங்க. விடிஞ்சபிறகு கூப்பிடுறோம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றனர். எங்கள் பயத்தின் அமைதியை இளையராஜா தன் பாடல்களால் நிரப்பிக்கொண்டு இருந்தார். அந்தச் சூழலில், இசையை ரசிக்கும் மனநிலையில் நாங்கள் இல்லை என்றாலும், எங்களுக்கு ஆதரவுக் குரல் ஒன்று தேவைப்பட்டது. அப்படியே தமிழக அரசியல் நிலவரங்களைப் பேசிவிட்டுத் தூங்கிவிட்டோம்.

எம்.எல்.ஏ சரவணன்சரியாக 5 மணியளவில் நண்பரின் போனுக்கு கால் வந்தது. ‘சரிண்ணே… உள்ளே வர்றோம்’ என்று பதில் சொன்னவர், ‘வாங்க பாஸ்…. போவோம், அண்ணன் வரச் சொல்லிட்டாரு’ எனக் கூறினார். மூவரும் இறங்கி சொகுசு விடுதி நோக்கி நடந்துசென்றோம். வாசலில் இருந்த சிலர், ‘அவரை வந்து கூட்டிட்டுப் போகச் சொல்லுங்க’ எனச் சொல்ல… மீண்டும் அவருக்கு போன் செய்தார் காரில் வந்த நண்பர். அடுத்த 10-வது நிமிடத்தில் பர்மடாஸ், டி ஷர்ட் உடன் வாசலுக்கு வந்தார் மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ சரவணன். ‘எங்க ஆளுதான் உள்ளே விடுங்க’ என்று அவர் சொன்னவுடன்… எங்களை உள்ளே அனுமதித்தனர். சரவணனிடம்… என்னை, ‘நண்பர்’ என்று அறிமுகப்படுத்திவைத்தனர், என்னுடன் வந்தவர்கள். ‘சரி, ரூமுக்குப் போயிடுவோம்… இங்க, எதுவும் பேச வேண்டாம்’ என்று சொல்லி அழைத்துச் சென்றார் சரவணன்.

மிகப் பிரமாண்டமாக இருந்தது கோல்டன் பே ரிசார்ட். அதன் நடுவில், நீச்சல் குளம்… சுற்றிலும் புல்தரைகள்… பின்னணியில் கடல்… என வேறு லெவலில் இருந்தது. எம்.எல்.ஏ-க்களுக்கு என்று தனியாக ஒரு தளம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில், ஓர் அறைக்கு இருவர் வீதம் இருந்தனர். அமைச்சர்களுக்கு மட்டும் தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. முதல் தளத்தில் சரவணனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றோம். எங்கள் காலைக்கடன்களை எல்லாம் முடித்துவிட்டுத் தற்போது சூழ்நிலை எப்படியுள்ளது என்று வெளியில் வந்து பார்த்தோம். அங்கு, அறிவிக்கப்படாத தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடந்துகொண்டு இருந்தது. அனைத்து அமைச்சர்களும் செய்தித்தாள்களைப் படித்துக்கொண்டிருந்தனர். சூழ்நிலை சாதகமாக இல்லை என்பதைப் புரிந்துகொண்ட எம்.எல்.ஏ சரவணன், ‘சரி… இப்ப வேணாம். வாங்க, போய் சாப்பிட்டுட்டு வந்துருவோம்’ என்று கூறி அழைத்துச் சென்றார்.

இட்லி, தோசை, கிச்சடி, கேசரி என்று காலை உணவை முடித்துவிட்டு… புல்தரைக்குத் திரும்பினோம். நாம் நின்ற பக்கத்தில், பலரும், ‘அவரு இல்லீங்க… ராங் நம்பர். கொஞ்சம் நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க’ என்ற பதிலையே சொல்லிக்கொண்ருந்தனர். அவர்கள் எல்லாரும் அமைச்சர் பி.ஏ-க்கள் என தகவல் சொன்னார்கள். ‘விடியற்காலை 5 மணிக்கே ஆரம்பிச்சுடுறாங்க… அசிங்க அசிங்கமா பேசுறாங்க… அமைச்சர், ரொம்ப மனசு வருத்தப்படுறாரு’ என்று எங்களைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போனார் மூத்த அமைச்சர் ஒருவரின் பி.ஏ. ‘அண்ணன், இப்ப என்ன பண்ண’ என… என்னுடன் வந்த இருவரும் சரவணனைப் பார்த்துக் கேட்க, ‘கிரிக்கெட் விளையாடுவோம்’ என்றார் கூலாக.

‘மேலே, ரூம்ல பேட்டும் பாலும் இருக்கு. போய், எடுத்துட்டு வா’ எனச் சொல்ல… அந்தப் புல்தரையில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தோம். மேலும், சில எம்.எல்.ஏ-க்களும் எங்களுடன் சேர்ந்துகொள்ள… ஆட்டம் களை கட்டியது. ‘இந்த பேட், வாங்கிட்டு வந்தது டி.டி.வி.தினகரன் அண்ணன்தான். அதேபோல சீட்டுக்கட்டு, செஸ் போர்டு எல்லாம் வாங்கிட்டு வந்தாரு’ என்று விளையாட்டு உபகரண வரலாற்றைக் கூறிக்கொண்டிருந்தார் ஒரு எம்.எல்.ஏ. பேச்சு சுவாரஸ்யத்தில்… அந்த எம்.எல்.ஏ, பந்தை விட்டுவிட… ‘பந்தைப் புடிக்க முடியலே. நீங்கல்லாம் அமைச்சர் ஆகி’ என்று இன்னொரு எம்.எல்.ஏ கலாய்க்க… ‘124 பேரையும் எப்படிப்பா அமைச்சர் ஆக்க முடியும்… அவங்கதான் சொல்றாங்கன்னா, நமக்கு அறிவு வேண்டாமா’ என அதற்கு பன்ச் வைத்தார், பந்தைவிட்ட எம்.எல்.ஏ.

வாயில விரலைவைத்து மெதுவா பேசுப்பா… மேலே ஆளுங்க இருக்காங்க’ என கிண்டல் செய்த எம்.எல்.ஏ கூற…. ‘ஆமா, இங்க எல்லாரும் ரொம்ப யோக்கியவங்கதான். சின்னம்மா வாழ்கன்னு கத்திட்டு… அவங்க கார்ல ஏறுன உடனே திட்டுறவன் எல்லாம் இருக்கான். அட போப்பா… நீ வேற’ எனக் கூறிக்கொண்டு செல்ல… நாங்களும் கிரிக்கெட் விளையாட்டை முடித்துக்கொண்டு ரூமுக்குத் திரும்பினோம். சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு, அதற்குள் மதிய சாப்பாட்டுக்குக் கிளம்பிச் சென்றோம்.

என்றும் இல்லாத வகையில் அன்று மதிய உணவுக்கு இறால், மீன், கடுவா என கடல் ஐட்டங்கள் அனைத்தையும் வைத்திருந்ததால், கூட்டம் அதிகமாக இருந்தது. திடீரென, எங்களைப் பார்த்து… ‘நீங்கள் காருக்குச் செல்லுங்கள்’ என்று கூறினார், சரவணன். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. நாங்களும் வெளியில் காரை நோக்கிச் சென்றோம். அதுவரை கேட்டில் காவலுக்கு நின்றுகொண்டிருந்த 10 பேரில் ஒருவர்கூட இல்லை. அப்போதுதான் சரவணன், ஏன் எங்களை வெளியில் போகச் சொன்னார் என்று புரிந்தது.

காவலுக்கு நின்றிருந்த அனைவரும் கறி சோற்றுக்கு ஆசைப்பட்டுச் சென்றுவிட்டதால்…. எங்களுக்குப் பின்னாலேயே பர்மடாஸ், டி ஷர்ட் உடன் போனில் பேசியபடி எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் வந்துகொண்டிருந்தார் சரவணன். அங்கு நின்ற ஒரு சிலரும்… வெள்ளைச் சட்டையில் இருந்த எங்களை உற்றுஉற்றுப் பார்த்தார்களே தவிர, சரவணனை அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. நாங்கள் காரில் ஏறி புறப்படத் தயாராகிற நேரத்தில் கண்காணிப்புப் பணியில் உள்ள ஸ்கார்பியோ வாகனம் ஒன்று எங்கள் முன்புவந்து திரும்பி நின்றது. அதிலிருந்து நான்கு பேர் வேகமாக இறங்கினர். காருக்குள் இருந்த நண்பர் பதற்றமாகிவிட்டார். ‘அண்ணன், அவ்ளோதான்… மாட்டிக்கிட்டோம். கொல்லப் போறாங்க’ என பதற்றத்துடன் சொல்ல… ‘பொறுமையா இரு… பார்த்துக்கலாம். நீங்க யாரும் பேசாதீங்க, நான் பேசிக்கிறேன்’ என்றார் சரவணன்.

பன்னீர்செல்வம், சசிகலா

என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. பின்னர், அந்த நால்வரும் மீண்டும் அதே வண்டியில் ஏறி… எங்களுக்கு முன்பாகச் செல்லத் தொடங்கினர். நாங்களும் மெதுவாக அவர்கள் பின்னால் செல்ல ஆரம்பித்தோம். ஒரு வளைவுப் பகுதியில் காலையில் எங்களை விசாரித்த அதே கும்பல் அங்கேயே நின்றுகொண்டிருந்தது. முன்னால் போகிற வண்டியிலும் ஆட்கள்… வளைவில் காலையில் அடையாளம் பார்த்த கும்பலும் நிற்க… இதனால் எங்களுக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது. ‘அண்ணன்… கண்டிப்பா இங்க மாட்டிருவோம். திரும்பிப் போயிடுவோமா’ என்று அந்த நண்பர் கேட்க…. ‘போங்க பார்த்துக்கலாம்’ என்று பொறுமையாகச் சொன்னார், சரவணன். அந்த நேரம் பார்த்து, அங்கே மீடியா லைவ் வாகனம் ஒன்று உள்ளே நுழைய… அங்கிருந்த கும்பல் அதைத் தடுக்க ஆரம்பித்தது. எங்கள் முன்னால் சென்றுகொண்டிருந்த ஆட்களும் அதைப் பார்த்து ஓட… திடீரென அந்த ஏரியா கூச்சல் குழப்பமானது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு சாலையைவிட்டு காரை இறக்கி… அந்த இடத்தைவிட்டு நகர்ந்தோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் வண்டி தாம்பரத்தை அடைந்தது. உடனடியாக அங்கிருந்த கடையில் வேட்டியும் சட்டையும் வாங்கி உடைகளை மாற்றிக்கொண்டு கிளம்பினோம். இப்போது, ‘நான் யார்’ என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன், சரவணனிடம். பாதுகாப்புக்காக என்னை அவர்கள்தான் அழைத்து வந்ததாகக் கூறினார்கள். இதையடுத்து, அங்கே ஒரு பேட்டி எடுத்து…  இணையதளத்துக்குச் செய்தியைக் கொடுத்தேன். இந்தச் செய்தி வெளியாகியபோது, சசிகலா கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். இணையச் செய்தியைப் பார்த்தே சரவணன் தப்பியது அங்குள்ளவர்களுக்குத் தெரிந்துள்ளது. அதற்குள் சரவணன், ஓ.பி.எஸ் இல்லம் நோக்கிச் செல்ல… தலைமைச் செயலகம் சென்றுவிட்டு வந்துகொண்டிருந்த முதல்வர், வழியிலேயே சரவணனை தனது காரில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்குச் சென்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதன்பிறகு, ‘தன்னை எடப்பாடி பழனிச்சாமியும், சசிகலாவும் கடத்தினார்கள்’ என்று வழக்குக் கொடுத்து, ஓ.பி.எஸ் அணியின் துருப்புச்சீட்டாகத் தற்போது மாறி நிற்கிறார் சரவணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com