‘மானத் தமிழன், வீரத் தமிழன் விலை போய்விட்டான்’ – கொந்தளித்த சீமான்

seemanlongதேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு தலைவர்கள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சியின் சீமானிடம் இருந்து இதுவரையில் எந்தப் பதிலும் வரவில்லை. ‘அடுத்த தேர்தல் நமக்கானது’ என ஆதரவாளர்களை தேற்றிக் கொண்டிருக்கிறார் சீமான்.

சட்டசபை தேர்தல் முடிவுகளை, தனது ஆலப்பாக்கம் வீட்டில் இருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார் சீமான். பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஐந்தாவது இடம், ஆறாவது இடம் என நிலவரம் போய்க் கொண்டிருக்க, கலவரத்தோடு கவனித்துக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில், ‘ பல தொகுதிகளில் இரண்டாவது இடம் வருவோம் என எதிர்பார்த்தேன். மக்கள் ஏமாற்றிவிட்டார்கள்’ என நொந்து போனார்.
இதுபற்றி நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர், ” தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றதும் கொந்தளிப்பின் உச்சிக்கே போய்விட்டார் சீமான். ‘ மானத் தமிழன், வீரத்தமிழன் இப்படி செய்துவிட்டான்’ எனக் கோபப்பட்டார். நேரம் செல்லச் செல்ல, எங்களுக்கு அவர் ஆறுதல் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

கொஞ்சம் செருமலோடு பேசத் தொடங்கிய சீமான் ‘ முப்பது வருஷமாக சாதியைச் சொல்லி கட்சி நடத்துகிற ராமதாஸ், காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த இடத்திற்கு வந்துவிட்டார். ஐம்பது ஆண்டு பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான வைகோ, நம்மைவிடவும் குறைந்த ஓட்டுக்களைத்தான் வாங்கியிருக்கிறார். எண்பது ஆண்டு பாரம்பர் கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட நாம் வாங்கிய ஓட்டை வாங்கவில்லை. 8.3 சதவீத ஓட்டை வைத்திருந்த விஜயகாந்துக்கு 2.3 சதவீதம்தான் வாக்கு கிடைச்சிருக்கு. அவருக்கு ஆந்திரா கிளப் உள்பட பல தொழிலதிபர்கள் பணம் கொடுத்தார்கள். எந்தப் பணபலமும் இல்லாமல்தான் தேர்தலை எதிர்கொண்டோம். இப்பதான் களத்துக்குள்ள வந்திருக்கோம். இந்தத் தேர்தலை முயற்சி மற்றும் பயிற்சி என்ற அடிப்படையில்தான் எதிர்கொண்டோம்.

மானத் தமிழன், வாங்கின காசுக்கு விசுவாசமா ஓட்டுப் போட்டிருக்கான். நாம என்ன பண்ண முடியும்? தி.மு.கவும் அ.தி.மு.கவும் பணத்தைக் கொட்டி வேலை பார்த்தார்கள். நாம் உண்டியல் குலுக்கி தமிழனிடம் கையேந்தி நின்னோம். நமக்கு ஒரு சதவீதம் கொடுத்திருக்கான். நமக்கு இன்னமும் வயசு இருக்கு. அடுத்த தேர்தலை வலிமையோடு சந்திப்போம். 2021-ம் ஆண்டு நமக்கான ஆண்டாக இருக்கும். தம்பிகள் யாரும் சோர்வடைந்துவிட வேண்டாம். தேர்தலை எதிர்கொண்ட ஓராண்டிலேயே நம்மை ஒரு சதவீதம் பேர் ஆதரித்திருக்கிறார்கள். பணபலம் எதுவுமில்லாமல் நமக்குக் கிடைத்த வெற்றி இது. இந்த வாக்கு சதவீதத்தை இன்னும் உயர்த்தப் பாடுபடுவோம்’ என எங்களை உற்சாகப்படுத்தினார்” என்றார்.

‘நாமே மாற்று, நாம் தமிழரே மாற்று’ என தேர்தல் களத்தில் களமாடிய சீமானின் தம்பிகளுக்கு இந்தத் தேர்தல் பெருத்த ஏமாற்றமாகப் போய்விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com