மாநகரசபையிலிருந்து நியமனம் ரத்தானவர்களிற்கு நியமனம் வழங்கப்படும் – முதலமைச்சர்

மாநகரசபையில் அரசியல் நியமனத்தின் மூலம், நியமனங்கள் தொடர்பில் வகை தொகையின்றி 700ற்கும் மேற்பட்டவர்கள் எந்தவித நியமன ஒழுங்கு முறைகளும் பின்பற்றப்படாது வேலைக்கு ஆட்சேர்ப்புச் செய்தவர்களே தாம் மாகாணசபைத் தேர்தலில்  வென்றவுடன் நியமனங்களை இரத்துச் செய்ததாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எனினும் தாம் இவை பற்றி எந்தவித காழ்ப்புணர்வோ அல்லது மாற்றுக் கருத்தோ இன்றி கடமையாற்றிய அனைத்து ஊழியர்களையும் ஏதோ ஒரு விதத்தில் மீண்டும் கடமைகளில் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இவற்றினால் ஏற்படக்கூடிய காலதாமதங்கள் தவிர்க்கப்பட முடியாதவை எனினும் எவ்வளவு விரைவாக இவற்றை நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு விரைவில் அவை நடைமுறைப்படுத்தப்படுவன என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

26.02.2016 வெள்ளிக்கிழமை யாழ். மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை ஆலோசனைக்குழு தாபித்தலும்
இணையத்தள அங்குரார்ப்பணமும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரது உரையின் முழுவடிவம் வருமாறு

குருர் ப்ரம்மா…………………………….

யாழ் மாநகரசபை ஆணையாளர் அவர்களே, அதிகாரிகளே, தொழில்நுட்ப வல்லுனர்களே, தரவுப்பதிவு உத்தியோகத்தர்களே, மற்றும் ஆலோசனைக்குழு அங்கத்தவர்களே, மாநகர சபை உத்தியோகத்தர்களே மற்றும் சகோதர சகோதரிகளே!

இன்று யாழ் மாநகர சபையின் ஆலோசனைக் குழு மற்றும் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன். ஓர் இரு மாதங்களுக்கு முன்னர் யாழ் மாநகர சபை ஊழியர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் மற்றும் வசதியீனங்கள் பற்றி நேரடியாக உங்களிடமிருந்து கேட்டு அறிந்து கொள்வதற்காக இங்கே வருகை தந்திருந்தேன். அப்போது பல விடயங்கள், குறைகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டன. அவை சம்பந்தமாக முடியுமானவற்றிற்கு உடனடித் தீர்வு வழங்கப்பட்டுள்ளன.
நியமனங்கள் தொடர்பில் வகை தொகையின்றி 700ற்கும் மேற்பட்டவர்கள் எந்தவித நியமன ஒழுங்கு முறைகளும் பின்பற்றப்படாது வேலைக்கு உள்வாங்கப்பட்ட பின்னர் 2013ம் ஆண்டில் நாம் வடமாகாணத் தேர்தலில் வெற்றியீட்டியதும் இவ்வாறு நியமனஞ் செய்யப்பட்டவர்கள் உடனடியாக வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள். இவற்றை நாம் செய்யவுமில்லை அறிந்திருக்கவும் இல்லை. யார் அவர்களை நியமித்தார்களோ அவர்களே தங்கள் நியமனங்களை இரத்துச் செய்துவிட்டார்கள்.
எனினும் நாம் இவை பற்றி எந்தவித காழ்ப்புணர்வோ அல்லது மாற்றுக் கருத்தோ இன்றி கடமையாற்றிய அனைத்து ஊழியர்களையும் ஏதோ ஒரு விதத்தில் மீண்டும் கடமைகளில் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். இவற்றினால் ஏற்படக்கூடிய காலதாமதங்கள் தவிர்க்கப்பட முடியாதவை எனினும் எவ்வளவு விரைவாக இவற்றை நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு விரைவில் அவை நடைமுறைப்படுத்தப்படுவன என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சில தசாப்தங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் அல்லது வடபகுதியில் இயங்கிய அனைத்து அலுவலகங்களும் ஏனைய மாகாணங்களில் இயங்கிய அலுவலகங்களுக்கு அல்லது திணைக்களங்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கின. ஆனால் இன்றைய நிலையோ எம்மை கையாலாகாதவர்களாக மாற்றி விட்டன. எந்தவொரு விடயமாயினும் மத்திய மாகாணத்தை கேட்டுப் பாருங்கள் அல்லது மேல் மாகாணத்தைக் கேட்டுப் பாருங்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். இதற்கான வலுவான காரணம் நாம் சேவையில் இணைந்துவிட்டபின் தொடர்ந்து கற்கின்ற பழக்கத்தை அடியோடு மறந்து விட்டுள்ளோம். எமது முயற்சிகள் முழுவதும் பொருள் ஈட்டலிலும் குடும்பத்தை மேன்நிலைப்படுத்துவதிலும் மட்டுமே கழிந்து போகின்றன. சுய மேம்பாட்டில் நாட்டம் கொள்வதில்லை. இதனாலேயே இன்று பலர் என்ன சேவையில் இணைந்தார்களோ அதே சேவையில் இளைப்பாறும் வரை ஏனோ தானோ என இருந்துவிட்டு ஓய்வு பெறுகின்றார்கள். இந் நிலைகளில் இருந்து மாற்றம் பெறுவது அத்தியாவசியமாகின்றது. எம்மவர்கள் முன்பு இருந்த நிலைக்கு உயர்வு பெற வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் பாடுபடவேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் இந்த வடமாகாணத்தைக் கட்டி எழுப்புவதில் ஏதோ ஒரு பங்கை வகிக்கின்றோம் என்ற எண்ணம் எம்மிடையே மேலோங்க வேண்டும். நாம் நினைத்தால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை.
யாழ் மாநகர சபையின் நிர்வாக அலகுகளில் காணப்படுகின்ற அல்லது ஏற்படக் கூடிய குறைபாடுகளை இனம் காண்பதற்கும் அவற்றை சீர்செய்வதற்குமான ஆலோசனைகளை வழங்குவதற்கென ஒரு ஆலோசனைக்குழு ஸ்தாபிக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்புக்குரியது. இந்த ஆலோசனைக்குழுவில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் துறை சார்ந்த விற்பன்னர்களாக காணப்படுகின்றனர். பொறியியல், நிர்வாகம், திட்டமிடல், காணிப்பங்கீடு, கல்வி, மருத்துவம், கட்டடம், நீதி, நீர்ப்பாசனம் என பல்துறைசார் விற்பனர்களும் இதில் அங்கத்துவம் வகிப்பது போற்றப்பட வேண்டியது. இந்த 11 அங்கத்தவர்களின் தெரிவுகளும் முறையாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு கிடைக்கப்பெற்ற 42 விண்ணப்பதாரிகளை நேர்முகப் பரீட்சை மூலம் தேர்ந்தெடுத்தலினால் நடைபெற்றன.
உள்;ராட்சி ஆணையாளரால் மேற்படி நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு தகுதியானவர்களும் மாநகர சபையின் ஒழுங்கு முறைகளை பேணுவதற்கு உகந்தவர்களுமான 11 பேர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். எனவே இக்குழு சிறப்பானதொரு சேவையை யாழ் மாநகர சபைக்கு தொடர்ந்து வழங்கும், வழங்க வேண்டும் என இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்து இக்குழுவின் சிறப்பான முன்மொழிவுகளுக்கு யாழ் மாநகர சபை தமது முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

மாநகர சபையின் பல வேலைத்திட்டங்கள் இன்று தடங்கியுள்ள நிலையில் இக்குழு தமது ஒத்துழைப்பை வழங்கி அவசரமானதும் அவசியமானதுமான கழிவகற்றல், மீள்சுழற்சி முறை ஆகிய விடயங்களில் உடனடிக் கவனம் செலுத்துவார்கள் என எண்ணுகின்றேன்.

அடுத்ததாக இன்று மாநகரசபையில் இணையத்தள அங்குரார்ப்பணம் என்ற விடயமும் நடந்தேறியுள்ளது. விரைவாக மாறிவருகின்ற இந்த இலத்திரனியல் உலகத்தில் நாமும் அதனுடன் ஒத்து ஓட வேண்டியவர்களாக மாறுவது காலத்தின் கட்டாயம். இன்று வீட்டில் இருந்தவாறே தமக்குத் தேவையான அனைத்து வங்கி நடவடிக்கைகள், பொருட் கொள்வனவுகள், கொடுப்பனவுகள் சீர் செய்தல் ஆகிய அனைத்து வேலைகளும் இலத்திரனியல், கைத்தொலைபேசிகள் அல்லது அலைபேசிகள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. இக் காலகட்டத்தில் நாம் இன்னமும் மேசை நிறைந்த கோப்புக்களையும் ஆவணங்களையும் குவித்து வைத்துக் கொண்டு சதாகாலமும் தேடல்களிலேயே காலத்தைக் கடத்துகின்றோம். இலத்திரனியல் உபகரணங்களையும் அவற்றிற்கான மென்பொருட்களையும் பாவிப்பதன் மூலம் வேலைகளை இலகுவாகவும் விரைவாகவும் நிறைவேற்றக் கூடிய ஒரு தன்மையை வளர்த்துக் கொள்ளலாம். இணையத்தளங்கள் எம்மைக் காட்சிப் பொருட்கள் ஆக்குகின்றன. நாம் இருக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. எம்மை எவ்வாறு தொடர்பு கொள்வது எங்களுடன் தொடர்புடையவர்கள் யார் யார் என்பதெல்லாம் துல்லியமாக அறிவிக்கப்படுகின்றன. மேலும் மக்களின் குறைகளை நாங்கள் அறிந்து கொள்ளவும் இணையத்தளம் வழிவகுக்கின்றது.

அந்த வகையில் யாழ் மாநகர சபையும் அரச அங்கீகாரம் பெற்ற ஒரு இணையத்தள வலையமைப்பை முறையாக விண்ணப்பித்து பெற்றுக் கொண்டு அதனை அழகுற வடிவமைத்து தேவையான தகவல்களை வெளியிடவும் முறைப்பாடுகளை இந்த இணையத்தினூடாக பெற்றுக் கொள்ளவும் வழி அமைத்துள்ளது. அதே நேரம் முறைப்பாடுகளை மேற்கொள்ள ஏற்ற வகையில் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு பொதுமக்கள் குறைகேள் ஒழுங்கு மற்றும் பொதுமக்கள் அபிப்பிராயம் என பகுதிகள் ஆக்கப்பட்டிருப்பதுடன் அவற்றில் உப பிரிவுகளாக அபிப்பிராயம், ஆலோசனை, முன்மொழிவுகள் என்ற பிரிவுகளையும் கொண்டதாக ஆக்கப்பட்டுள்ளது என அறிகின்றேன். அத்துடன் பொதுமக்கள் பட்டயப் பகுதி  ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக இந்த இணையத் தொடர்புகள் மும்மொழிகளிலும் வழங்கப்படக்கூடியதாக அமைக்கப்பட்டிருப்பது மாநகரசபையின் செயற்பாடுகளுக்கு உகந்ததாக அமையும்.

இவை அனைத்தும் முன்னேற்றகரமான செயற்பாடுகளாக இருக்கின்ற போதிலும் இவற்றை தொடர்ச்சியாகவும் வினைத்திறனுடனும் பயன்படுத்துவதன் மூலமே இவற்றின் முழுமையான பயனைப் பெறமுடியும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பாடுபடவேண்டும் அதன் மூலம் யாழ் மாநகர சபை இலங்கையிலேயே ஒரு முன்மாதிரியான மாநகரசபையாக அமையவேண்டும் என வாழ்த்தி வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகின்றேன்.
நன்றி. வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com