மாணவர் படுகொலை வழக்கினைத் துரிதப்படுத்த சட்ட மாணவர் சங்கத்தால் குழு அமைப்பு

court_hammerயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை தொடர்பான வழக்கினை துரிதப்படுத்துவதற்கும் கண்காணப்பதற்கும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கத்தினால் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்கள் இருவர் கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களின் படுகொலையை கண்டித்து அனைத்து தரப்பினராலும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அத்துடன் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த படுகொலை சம்பவத்தின் வழக்கு விசாரணைகளை கண்காணிப்பதற்கும் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கும் ஒரு 6 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. அக் குழுவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம், யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், சட்டத்தரணிகள் சங்கம், மனித உரிமைகள் அமைப்பு போன்றவற்றில் இருந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு செயற்படவுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக சட்டமாணவர் சங்க தலைவர் அ.றொமோள்சனை தொடர்பு கொண்டு கேட்ட போது எமது பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு நீதி கிடைக்கப்பெற வேண்டும். அத்துடன் இது போன்ற அசம்பாவிதங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறக்கூடாது என்பதனை வலியுறுத்தும் முகமாக நாம்பல செய்ற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம் அந்த வகையில் குறித்த வழக்கினை துரிதப்படுத்துவதற்கும் அதை கண்காணிப்பதற்கும் குழு ஒன்றை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். ஓரிரு நாட்களில் குறித்த குழு அமைக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் தொடர்பில் வெளிப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com