மாகாண சபையுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை – பட்டதாரிகள் போராட்டம் தொடர்வதாக அறிவிப்பு

வடக்கு மாகாண சபையினருக்கும் பட்டதாரி பிரதிதிகளுக்குமிடையில் இன்று (09) நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காத நிலையில் தமது போராட்டத்தை தொடரப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

தமக்கான அரச வேலைவாய்ப்பினை வழங்குமாறு வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக யாழ் மாவட்டச் செயலகம்முன் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வடக்கு மாகாண பட்டதாரிகள் இன்று (09) கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபைமுன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஏழு பேர் கொண்ட குழுவினரை அழைத்த மாகாண சபை அவைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பட்டதாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பட்டதாரிகளுடனான பேச்சுவார்த்தையின்போது வெற்றிட ஆளணி குறித்து தம்மிடம் தரவுகள் இல்லை எனத் தெரிவித்த மாகாண சபையினர் விவசாய மற்றும் சுகாதரா அமைச்சுக்களில் தலா சுமார் ஐம்பதிற்கு குறைவான வெற்றிட்டங்கள் உள்ளதாகவும் ஏனைய திணைக்களங்கள் அமைச்சுக்கள் தொடர்பில் எதிர்வரும் 15 ஆம் திகதியே தகவல் திரட்டி வழங்க முடியும் எனவும் தெரிவித்தனர்.

எதிர்வரும் 13 ஆம் திகதி மாலை பட்டதாரி பிரதிநிதிகள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநருக்கிடையில் பேச்சுவார்த்தை ஒன்றிற்கு ஏற்பாடு செய்யுமாறும் அதுவரை போரைாட்டத்தைக் கைவிட்டுச் செல்லுமாறும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் போராட்டத்தை கைவிட்டால் கடந்த 2015 ஆம் ஆண்டு போராட்டம் நடாத்தி வழங்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டதுபோல இவர்கள் ஏமாற்றிவிடுவார்கள் என ஒருமித்து கருத்துத் தெரிவித்த பட்டதாரிகள்  பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கமாக நடைபெற்றாலும் கவனஈர்ப்புப் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைமுன் நடைபெற்ற போராட்டத்தையடுத்து பட்டதாரிகள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்டு குழு அமைத்ததோடு பட்டதாரிகள் போராட்டத்தைக் கைவிட்ட நிலையில் மாகாணசபையால் உருவாக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கான 851 ஆளணி வெற்றிடங்களில் கடந்த ஒருசில நாட்களிற்குமுன் விண்ணப்படம் கோரப்பட்ட 172 வெற்றிடங்கள் தவிர்த்து இன்னமும் நிரப்பப்படாமலுள்ள சுமார் 600 ஆளணி வெற்றிடங்களிற்கு இதுவரை என்ன நடந்தது என்பது தெரியாமலிருப்பதாக பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகள் நாளை காலை 09.30 மணிக்கு பிரதம மந்திரி ரணில்விக்கிரமசிங்கவைச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com