மாகாண சபையில் பெண்களுக்கு 25 சத இட ஒதுக்கீடு: சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல்

160615103003_lanka_women_reservation_512x288_bbc_nocreditஇலங்கையில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சரவையில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம், குறைந்தபட்சம் 25 சதவீதமாக இருக்க வேண்டும் . அதற்கமைய அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்களில் வேட்பு மனுக்களில் 30 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என அந்த திருத்தம் கூறுகின்றது.
இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சரவை தற்போதுள்ள மாகாண சபைகள் தேர்தல் சட்டம் திருத்தப்பட்டு நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு முன் வைப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளது
ஏற்கெனவே உள்ளுராட்சி சபைத் தேர்தல் சட்ட திருத்தத்தில் பெண்களுக்கு 25 சத வீதம் இடமளிக்கப்பட்டுள்ள நிலையில் மாகாண சபைகள் தேர்தல் சட்டத்திலும் அது போன்ற திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.
தற்போது மாகாண சபைகளில் பெண்கள் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள போதிலும் 5 சத வீதத்திற்கும் குறைவான பெண்களே அங்கத்துவம் பெற்றுள்ளனர். தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் வழங்க தவறுவதே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.
குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 37 உறுப்பினர்களை கொண்ட கிழக்கு மாகாண சபையில் ஒருவர் தான் பெண் உறுப்பினராக அங்கத்துவம் பெற்றுள்ளார் . அதே நிலை தான் 39 உறுப்பினர்களை கொண்ட வட மாகாண சபையிலும் காணப்படுகின்றது.
வாக்காளர் எண்ணிக்கையில் ஆண்களை போன்று பெண்களும் சம நிலையில் உள்ள நிலையில் அவர்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்புடையதாக இல்லை .இருந்த போதிலும் பெண்களின் அரசியல் தலைமைக்கு பலமானதாக அமையும் என மகளிர் செயற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.
இதுபோன்ற திருத்தம் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்திலும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com