மாகாணசபை அமர்வில் கலந்துகொள்ள பிள்ளையானுக்கு அனுமதி

இலங்கையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியாகவுள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு கிழக்கு மாகாண சபையின் இம்மாத அமர்வில் கலந்துகொள்ள இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையுடன் தொடர்டைய சந்தேகநபர்களில் ஒருவரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரும் குற்றப் புலனாய்வுத் துறையினரால் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்கள் மீதான விளக்கமறியல் உத்தரவும் எதிர்வரும் 27ம் திகதி வரை நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர் என்று கருதப்படும் மீராலெப்பை கலீல் ஆகியோரே நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் கிழக்கு மாகாணசபை அமர்வுகளில் அவர் கலந்து கொள்ளவில்லை.
எதிர்வரும் 26ம் திகதி கூடவுள்ள கிழக்கு மாகாணசபை அமர்வில் கலந்து கொள்வதற்கு தனக்கு அனுமதி கோரி அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதோடு அவரை பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதற்கான உத்தரவையும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com