மாகாணசபையின் அதிகார வரம்பை அறியாமல் பாராளுமன்ற உறுப்பினர் கருத்து வெளியிடுவதா? ஈ.பி.ஆர்.எல்.எவ். கண்டனம்

Suresh-Premachandranமுஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் வடக்கு மாகாணசபை அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்திற்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ். க.பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் வடக்கு மாகாணசபை அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அது மாத்திரமல்லாமல், விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களை வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றியதானது ஓர் இன சுத்திகரிப்பு என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திவருகிறார். ஆனால், ஒரு விடயத்தை சுமந்திரன் புரிந்துகொள்ள வேண்டும். புனர்வாழ்வு என்ற விடயம் மத்திய அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட விடயமாக இருக்கின்றதே தவிர, மாகாண அரசிற்குச் சொந்தமான ஒரு அதிகாரப் பகிர்வாக இதுவரையில் இல்லை. வடக்கும் கிழக்கும்தான் யுத்தத்தினால் பாரிய அளவில் பாதிக்கப்பட்டபோதிலும்கூட, அது தொடர்பான புனருத்தாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாகாணங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை கற்றறிந்த சட்டத்தரணியான சுமந்தரனுக்கு விளங்கும் என கருதுகின்றோம்.
கடந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ரிசாட் பதியுதீனும், இப்பொழுதைய மைத்திரி, ரணில் ஆட்சியில் சுவாமிநாதன் அவர்களும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்குப் பொறுப்புக் கூறவேண்டிய அமைச்சர்களாக உள்ளனர். அதேசமயம், புனர்வாழ்வு அமைச்சு என்பது வடக்கு-கிழக்கு மாகாணசபைகளில் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். காணிகளை மீளப் பெற்றுக்கொள்ளல், புதிய காணிகளை பகிர்ந்து வழங்குதல், அவர்களுக்கான வீடுகளைக் கட்டுவித்தல், வாழ்வாதாரங்களைக் கொடுத்தல் போன்ற சகல விடயங்களுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ்தான் உள்ளது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக வடக்கு மாகாணசபை ஒரு அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கிறது என்பது முதலமைச்சரின்மேல் சுமந்தரனுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறதே தவிர, உண்மை நிலவரங்களை அல்ல.
தமிழ் மக்களும்கூட இன்னமும் மீளக்குடியேற முடியாத நிலையும், கடந்த இருபத்தைந்து வருடங்களாக அவர்கள் முகாம்களில் வாழக்கூடிய நிலையும், வடக்கில் தொடர்ந்தும் நிலவிவருகிறது. இவர்களின் மீள்குடியேற்றத்திற்காக தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பல்வேறு கட்சிகளும் தொடர்ந்தும் போராடவேண்டியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், மாகாண சபை மீள்குடியேற்றத்திற்கோ, புனர்வாழ்விற்கோ எதிராக இருக்கின்றது என்று பொறுப்பு வாய்ந்த பதவிகளில் உள்ள சுமந்திரன் போன்றோர் கூறுவது ஒரு பொறுப்பற்ற கருத்தாகும்.
இதனைப் போன்றே வடமாகாணத்தில் விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது ஒரு இனச்சுத்திகரிப்பு என்பதையும் அவர் மீண்டும் மீண்டும் கூறிவருகின்றார். முஸ்லிம் மக்கள் அவ்வாறு வெளியேற்றப்பட்டமையை தவறு என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்ந்தும் கூறிவந்திருக்கின்றது. அவர்களின் வெளியேற்றத்தை எந்தவொரு தமிழ்க்கட்சியும் நியாயப்படுத்தவும் இல்லை. அதேசமயம், யுத்த நிறுத்த காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஹக்கீம் அவர்களுக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை பிரபாகரன் ஏற்றிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
யுத்தம் நடந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து சகல மக்களும் வெளியேற்றப்பட்டார்கள். யாழ்ப்பாணமே வெறிச்சோடிப்போயிருந்தது. யுத்த கால கட்டத்தில் இத்தகைய தவறுகள் நடந்துதான் இருக்கின்றது. ஆனால், யுத்தகாலத்தில் பல்லாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்படும்போது வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இப்பொழுது யுத்தம் முடிந்து, முஸ்லிம் மக்கள் மீள்குடியேறிக்கொண்டிருக்கிறார்கள்.
மன்னாரில், வவுனியாவில், முல்லைத்தீவில், கிளிநொச்சியில் மற்றும் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. இவர்களை மீள்குடியேற்றியது தான்தான் என்றும் ரிசாட் பதியுதீன் மார்தட்டிக்கொள்கின்றார். மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த ரிசாத்திற்கு அதனைச் செய்ய வேண்டியது அவருடைய கடமை. அந்த மக்கள் முழுமையாக மீள்குடியேறிக் கொண்டிருக்கின்ற நிலையில் இனச் சுத்திகரிப்பு என்பது எங்கிருந்து வந்தது? ஓர் இனம் அழித்தொழிக்கப்பட்டிருந்தால் அல்லது தனது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாதிருந்தால் அதை ஒரு இனச் சுத்திகரிப்பாக எடுத்துக்கொள்ள முடியும்.
இலங்கையில் நடைபெற்ற பல்வேறு கலவரங்களின்பொழுது தென் பகுதியில் இருந்த தமிழ் மக்கள் வடக்கு-கிழக்கிற்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்கள். அதனை ஒரு இனச் சுத்திகரிப்பு என்ற வரையறையின்கீழ் கொண்டுவரமுடியுமா? ஆகவே தவறான கருத்துக்களைக்கூறி தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் மேலும் மேலும் முரண்பாடுகளை உருவாக்க வேண்டாம் என சம்பந்தப்பட்ட அனைவரையும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கேட்டுக்கொள்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com