மாகாணசபையினர் அரசியல் பேசக்கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

01தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவைபற்றி மாகாணசபை உறுப்பினர்கள் பேசத் தேவையில்லை. இவர்கள் அபிவிருத்தியில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதுமானது என்று சிலரால் தொடர்;ச்சியாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

முல்லை மாவட்டக் கூட்டுறவுச் சபையால் கற்சிலைமடு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கூட்டுறவு தினவிழா நேற்று சனிக்கிழமை (15.10.2016) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்;ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,

மாகாணசபை ஒரு நிர்வாக அலகு மாத்திரம் அல்ல. மாகாணசபை முறைமை, இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வாகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இது தமிழ் மக்களுக்கான தீர்வு அல்ல என்பதை விடுதலைப்புலிகள் உணர்ந்ததாலேயே அப்போது மாகாணசபை முறைமையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

வடக்கு மாகாணசபையை இப்போது நாம் நிர்வகிக்கின்றபோதுதான் விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்ள மறுத்தமைக்கான காரணங்களை யதார்த்த பூர்வமாக உணர்ந்து கொள்ள முடிகிறது. எதனையும் சுயாதீனமாக நாம் செய்ய முடியாதவாறு மத்திய அரசின் கடிவாளம் போடப்பட்டுள்ளது. பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் எமக்கு வழங்கப்பட்ட பல அதிகாரங்கள்கூட, தோலிருக்கச் சுளை பிடுங்கும் கதையாக மத்திய அரசால் மீளவும் பிடுங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், எமது அரசியல் உரிமைப் போராட்டத்தின் ஒரு களமாக மாகாணசபையை நாம் பயன்படுத்துவது தவிர்க்க முடியாது. இதன் அடிப்படையிலேயே, மாகாண சபையில் தமிழ் இன அழிப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்துக்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. எமது முதலமைச்சரும் அரசியல் ரீதியாக நாம் எதிர் கொண்டுவரும் நெருக்கடிகளை எவருக்கும் அடிபணியாது தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன், து.ரவிகரன், கூட்டுறவு உதவி ஆணையாளர் உ.சுபசிங்க, முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் சி.ஏ.மோகனறாஸ் ஆகியோரும் அதிக எண்ணிக்கையான கூட்டுறவாளர்களும் கலந்து கொண்டார்கள்.

07

08

10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com