மலையக மக்களின் வாழ்க்கை வளம் பெற உதவுவேன் – ஆனந்த சங்கரி

vlcsnap-2016-11-19-17h15m47s72மலையக மக்களின் வாழ்க்கை வளம் பெற வேண்டும். காலம் காலமாக தாயும் தகப்பனும் உழைத்து அவர்களின் பிள்ளைகளும் இந்த மலையக மண்ணில் உழைக்கும் காலத்திலும் அரை ஏக்கர் காணிக்கூட சொந்தமில்லாமல் வாழ்ந்து வருகின்றனர் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

மஸ்கெலியா ஸ்ரீ சண்முக நாதர் ஆலய மண்டபத்தில் 19.11.2016 அன்று இடம்பெற்ற ஈடோஸ் அமைப்பின் முன்பள்ளி சிறுவர்களின் கலைநிகழ்ச்சி ஒன்றில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஈடோஸ் அமைப்பின் செயலாளரும், யாழ் மாநகர சபையின் முன்னால் உறுப்பினருமான இரா.சங்கையன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது-:

மலையக மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயா காலத்திலிருந்து இம் மக்கள் மீது அன்பும் ஆதரவு எனக்கிருக்கின்றது.

எனவே எதிர்காலத்தில் என்னால் இயன்ற உதவிகளை இந்த தொழிலாளர் மக்களுக்கு அவர்களின் வாழ்வு வளம் பெற உதவுவேன்.

நாட்டு மக்களுக்கு வரியை சுமத்தி விட்டு நாட்டின் பிரதமர் 600 லட்சம் ரூபாய்க்கு கார்களை பெற்றுள்ளமை நியாயமான விடயமில்லை.

இவ்வாறாக சொகுசான வகையில் வழங்கும் கார்களை பெற்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உலாவ முடியும் என்றால் மக்களுடைய பட்டினியை போக்க திட்டம் கொண்டு ஏன் முடியாது என கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நான் காலடி வைத்த காலப்பகுதியில் உறுப்பினர் என்ற ரீதியில் எனக்கு கிடைத்த சம்பளம் 600/=ரூபாய் மாத்திரமே ஆனால் மக்களுக்கு சேவை செய்வதில் பின்வாங்கவில்லை.

இன்று தோட்ட தொழிலாளி ஒருவர் பெறுகின்ற நாட் சம்பளம் தான் அன்று எனக்கு பாராளுமன்றத்தில் மாதாந்த சம்பளமாக கிடைத்தது. ஆனால் மலையக மக்கள் தொடர்பில் அவர்களை வழி நடத்திய சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயாவுடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வந்தோம்.

வறுமையின் போக்கில் உழைப்பை மாத்திரம் நம்பியுள்ள தோட்ட தொழிலாளர் மக்களுக்கு இவர்கள் பெரும் அதி குறைவான சம்பளத்தை கருத்திற் கொண்டு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்களின் வாழ்வாதாரத்தை காக்க பொருட்களின் விலைகள் குறைப்பு மற்றும் மாதாந்தம் கூப்பன் அடிப்படையில் உணவு பொருட்களை வழங்குவதற்கு திட்டம் ஒன்றை கொண்டு வந்தால் நல்லதாக இருக்கும்.

அல்லது தொழிலாளர்கள் பெறும் உணவு பொருட்களுக்கு விலை குறைப்பு என்று ஒரு திட்டத்தை உருவாக்கினால் இவர்கள் வாழ்வில் வளம் பெறுவர்.

இவை அனைத்தும் விடுத்து மக்களின் சேவையை உணராமல் சொகுசான வாழ்க்கைக்காக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் சற்று தோட்ட தொழிலாளர் மக்களை பற்றி சிந்திப்பது சால சிறந்தது.

இதைவிடுத்து அரசாங்கம் வழங்கும் 600 இலட்ச ரூபா கார்களை பெற்றுக்கொண்டு உலாவுவது மலையகத்திற்கும் மட்டுமன்றி வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் வெட்கம் இல்லையா என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com