மலையக பட்டதாரிகள் வேலையின்றிருக்கும் போது வடக்கிலிருந்து ஆசிரியர்களை கொண்டுவர வேண்டிய அவசியமில்லை

மலையகத்தில் போதுமான அளவு பட்டதாரிகள் வேலையற்றிருக்கின்றனர்.  அவர்களுக்கு ஆசிரியர் நியமனத்தை வழங்கி ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே பொருத்தமானதாகும் என  மத்திய மாகாண சபை உறுப்பினரும் மத்திய மாகாண கல்வி அமைச்சின் மேற்பார்வை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கு  வடகிழக்கு பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். அக்காலத்தில் ஆசிரியர் தொழிலை பெற்றுக்கொள்ளும் தகுதியை கொண்டவர்களாக மலையகத்தில் மிக மிக சொற்ப தொகையினரே இருந்தனர். ஆனால் தற்போது நிலைமை அவ்வாறில்லை. பாடசாலைகளில் நிலசும் கணித, விஞ்ஞான ஆசிரியர் தேவையை நிவர்த்திக்க தேவையான பட்டதாரிகள் மலையகத்திலேயே இருக்கின்றனர். அவர்களுக்கு ஆசிரியர் நியமனத்தை வழங்காமல் வடக்கிலிருந்து ஆசிரியர்களை நியமிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மலையகத்தில்  பட்டதாரிகள் இல்லை என்ற மாயையை சிலர் பரப்பி வருகின்றனர். அதில் எவ்விதமான உண்மையும் கிடையாது. நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் மாகாண சபைகளுக்கு வந்தவண்ணம் இருக்கின்ற போது கல்வி இராஜாங்க அமைச்சர் அவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு ஆர்வம் காட்டாமல் எதற்காக வடக்கிலிருந்து ஆசிரியர்களை கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

மலையகத்தில் படித்தவர்களுக்கு அதிகளவில் கிடைக்கின்ற ஒரே தொழில் ஆசிரியர் தொழில் மட்டுமே. ஏற்கனவே இலங்கை தொழிலாளார் காங்கிரசினால் பெற்ற மூவாயிரம் உதவி ஆசிரியர் நியமனம் இதுவரை முற்றாக வழங்கப்படவில்லை. அதை வழங்குவதற்கு கல்வி ராஜாங்க அமைச்சா முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இதுவரை பயிற்சி வழங்குவதற்கு எவ்விதமான முன்னெடுப்புக்களையும் தொடங்கவில்லை. ஆறாயிரம் ரூபா சம்பளத்தை அதிகரித்து கொடுக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை.  இதனால் பலர் தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர்.

மத்திய மாகாணத்தில் ஒரு தசாப்த காலமாக தமிழ் கல்வி அமைச்சை தன்வசம் வைத்திருந்தவர் தான் தற்போதய கல்வி ராஜாங்க அமைச்சர் இவருடைய காலத்தில் மத்திய அரசாங்கத்தின் நியாயமான தலையீடுகளை கூட மாகாணத்தில் அனுமதிக்கவில்லை. தேசிய பாடசாலைகளை உருவாக்குவதற்கு எதிரான கொள்கையை கொண்டிருந்தார்.  ஆனால் தற்போது மாகாண சபைக்குள்ள அதிகாரத்தில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்வதன் மூலம் 13வது அரசியல் யாப்பின் மூலம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு சவால்விடுகின்ற நிலையை தேற்றுவித்திருக்கிறார். இது மலையக தமிழ் கல்வித்துறைக்கு விடுக்கப்படுகின்ற பாரிய சவாலாகும். இவ்வாராண தலையீடுகளை வடக்கு மாகாண சபையிலோ, அல்லது கிழக்கு மாகாண சபையிலோ மேற்கொள்ள முடியுமா?

மலையக தமிழ் பாடசாலைகள் மத்திய அரசாங்கத்தின் நிதி மூலம் கடந்த காலங்களிலும் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அவ் அபிவிருத்தின் அனைத்தும் மாகாண கல்வி அமைச்சின் ஆலோசணை பெறப்பட்டு மாகாண சபையின் ஊடாகவே  செய்யப்பட்டதே தவிர மத்திய அரசாங்கத்தின் நேரடி தலையீடு காணப்படவில்லை. ஆயிரம் பாடசாலை வேலைத்திட்டத்தில் கூட பாடசாலைகளை தெரிவு செய்யும் பணி மாகாண சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட காலத்திருந்து  வரலாற்றில் இப்போதுதான் மலையக கல்வித்துறையில் பாரிய அரசியல் தலையீடுகள் நடைபெறுகின்றன. ஆசிரியர் நியமனங்கனை முறையாக மாகாண சபைகள்தான் வழங்க வேண்டும். அதற்கான நிதியைதான் மத்திய அரசாங்கம் வழங்க வேண்டும். ஆனால் அரசியல் இலாபத்திற்காக 3000ம்  உதவி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதாக கூறி மலையக பரீட்சாத்திகள் எத்தனை முறை கொழும்புக்கு அலைக்கப்பட்டார்கள். தற்போது 25 பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவுள்ளதாக தெரிவித்து பல பாடசாலை அதிபர்களை கொழும்புக்கு வரவழைத்து அரசியல் நடத்தப்படுகிறது. மாகாண சபையின் அனுமதியில்லாமல் எவ்வாறு மாகாண பாடசாலை அதிபர்களை கொழும்புக்கு அழைக்க முடியும் ?

தற்போது மாகாண கல்வித்துறையை விமர்சிப்பவர்கள்  தாம் பத்து வருடங்களுக்கு மேலாக மாகாண கல்வி அமைச்சராக இருந்ததை மறந்துவிடக் கூடாது அத்துடன் கல்வி ராஜாங்க அமைச்சர் மத்திய மாகாண கல்வி அமைச்சராக இருந்த காலத்தைவிட அண்மைய கடந்த சில வருடங்களிள் தான் மத்திய மாகாணத்தின் கல்வி பெறுபேறு சிறந்த வளர்ச்சிப்போக்கை கொண்டிருக்கின்றது எனவும் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com