மலையகத்தில் ஐம்பதாயிரம் பேருக்கு ஒரு பிரதேச செயலகம் – அமைச்சர் திகா

Thikambaramஐம்பதாயிரம் பேருக்கு ஒரு பிரதேச செயலகம் இருக்கின்ற நிலையில் 2 இலட்சம் தமிழ் மக்கள் வாழும் எமக்கு ஒரு பிரதேச செயலகம். இந்நிலையை மாற்றியமைத்து ஐம்பதாயிரம் மக்களுக்கு ஒரு பிரதேச செயலகம் கொண்டு வந்து தேர்தலில் போட்டியிடுவோம் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அட்டன் லெதண்டி தோட்டம் புரடக் பிரிவில் இடம்பெற்ற அடிக்கல் நாட்டு வைபவத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

இவ் அடிக்கல் நாட்டு விழா 04.12.2016 அன்று மாலை இடம்பெற்றது. இதன்போது விழாவில் அதிதியாக கலந்து கொண்டு அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

2020ம் ஆண்டில் மலையகத்திற்கு ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு இன்னும் 4 ஆண்டுகள் எஞ்சியுள்ளது. இந்த நிலையில் மக்களுயைட ஒற்றுமையும் பலமும் எமக்கு கிடைக்கும் பட்சத்தில் பாரிய மாற்றத்தினை உருவாக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராக உள்ளது.

மலையகத்தில் ஒற்றுமையாக செயல்படும் தமிழ் முற்போக்கு கூட்டணிணை பிளவுப்படுத்த அல்லது சீர்குழைக்க நினைக்கின்றார்கள். ஒரு காலமும் அது நடக்காது என தெரிவித்த அமைச்சர் ஒற்றுமை பிறந்துள்ள இந்நிலையில் வீடுகள், வீதிகள், காணிகள் போன்ற அபிவிருத்திகளில் மக்களை மேலோங்க வைக்க நாம் பாடுபட்ட வருகின்றோம். இதற்கு மக்களுடைய பூரண ஆதரவு எமக்கு கிட்ட வேண்டும் என்றார்.

அமைச்சர் இராதாகிருஷ்ணன் இ.தொ.காவில் இருந்த காலத்தில் அவருக்கு அதிகாரம் கிடைக்கவில்லை. நான் எதிர்கட்சியில் இருந்த பொழுது எனக்கும் அதிகாரம் இல்லை. ஆனால் இன்று எமக்கான அதிகாரத்தை மக்களாகிய நீங்கள் தந்துள்ளீர்கள். இவ் அதிகாரத்தை பயன்படுத்தி மலையக மக்களுடைய வாழ்க்கையில் 2020ம் ஆண்டில் சுபீட்சத்தை ஏற்படுத்துவோம்.

மலையகத்தில் பொகவந்தலாவ, மஸ்கெலியா, அட்டன் ஆகிய பிரதேச மக்கள் கினிகத்தேனையில் அமைந்துள்ள பிரதேச செயலகத்திற்கு சென்று தமது கடமைகளை பூர்த்திக்கின்றனர்.

அதேபோன்று நுவரெலியா பிரதேசத்திலும் இடம்பெறுகிறது. 2 இலட்சம் மக்களுக்கு ஒரு பிரதேச செயலகம் இருக்கின்ற நிலையில் நாட்டில் ஏனைய மக்களுக்கு ஐம்பதாயிரம் பேருக்கு ஒரு பிரதேச செயலகம் காணப்படுகின்றது. இவ்வாறு நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆகவே தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைகள் ஊடாக அரசாங்கத்திடம் வழியுறுத்தப்பட்ட நிலையில் ஐம்பதாயிரம் பேருக்கு ஒரு பிரதேச செயலகம் என்ற ரீதியில் அமைக்கும் அமைச்சரவை பத்திரத்தை ஒர் இரு மாதங்களில் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது.

இவ்வாறாக அரசாங்க செயலகங்களை அமைத்துக் கொண்டு அதன்பின் தேர்தலில் போட்டியிட நாம் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் நாம் காட்டி கொடுப்புகளை ஏற்படுத்தவில்லை. எதிர்வரும் காலத்தில் தொழிலாளர்களுக்கு நியாயமான ஒரு சம்பளத்தை பெற்றுக்கொடுக்க கையொப்பம் இடும் நிலையை உருவாக்க தொழிலாளர்களின் ஆதரவினை எதிர்பார்க்கின்றோம். இவ் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயமாக நியாயமான சம்பளம் ஒன்றை பெற்றுத் தருவோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com