மன்னார் வெள்ளப் பெருக்கால் 2247 பேர் இடம்பெயர்வு

மன்னார் மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் இன்று  மதியம் வரை 610 குடும்பங்களைச் சேர்ந்த 2247 பேர் வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ளதுடன் 95 வீடுகள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னாரில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக மன்னார் நகரில் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கியதுடன் அரச அலுவலங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்து அலுவலக உபகரணங்களை சேதமாக்கியுள்ளன.
மன்னார் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியான மழை பெய்தபோதும் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையைத் தொடர்ந்து மக்கள் இடம்பெயர வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது. 
இதன்படி இன்று மதியம்வரை கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 118 குடும்பங்களைச் சேர்ந்த 401 நபர்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்தள்ளனர். இதில் 52 குடும்பங்களைச் கார்ந்த 204 பேர் இடம்பெயர்ந்து மூன்று நலன்புரி நிலையங்களில்    தங்க வைக்கப்பட்டள்ளனர். 
நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1824 பேர் இடம்பெயர்ந்து 12 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு நலன்புரி நிலையங்களிலுள்ள இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு உணவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெள்ளாங்குளம் கோவில் தேவன்பிட்டி கோவில் பாலியாறு பொது மண்டபம் மூன்றாம்பிட்டி பொது மண்டபம் எழுத்தூர் றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும் செல்வநகர் சிறுவர் பாடசாலையிலும் பள்ளிமுனை பாடசாலை போன்ற நலன்புரி நிலையங்களில் இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com