மனிதப் புதைகுழி நீதிபதிக்கு எதிராக மனுத்தாக்கல்!

மன்னார் மாவட்டம் – திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழி வழக்கில் மன்னார் மாவட்ட நீதவானுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிச்சேவை ஆணைக்குழுவில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் மன்னார் மாவட்ட நீதவான் ஆசீர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்பாக செயற்படுவதாகக் குற்றம் சாட்டியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் நீதவான் அலெக்ஸ்ராஜா குற்றப் புலனாய்வாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும், முன்னர் இருந்த நீதவானுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும், இதன் காரணமாக இந்த வழக்கினை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரியும் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நீதிபதி அலெக்ஸ்ராஜா கடந்த 28ஆம் நாள் தனது நிலைப்பாட்டை திறந்த மன்றில் அறிவித்தார்.

அதற்கமைய,  மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதியிலிருந்து மாந்தை பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான அகழ்வுப் பணிகளை மேற்கொண்ட போது, கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 84 மனித மண்டையோடுகளும் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்புக் கருதி, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, பகுப்பாய்வு செய்யும் வரை அவை அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

மனித எச்சங்களை பகுப்பாய்வு செய்யும் இடம், நிறுவனம் மற்றும் மனிதப் புதைகுழி தொடர்பில் இன்று கட்டளை பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், நீதி சேவை ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்டுள்ள மனுவின் அடிப்படையில், ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய அடுத்தகட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதவான் ஆசீர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஐா அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com