மட்டு. மாவட்டத்தில் கிடைக்கின்ற முறைப்பாடுகளில் 75 வீதமானவை காணி தொடர்பானவை – அரசாங்க அதிபர் மா.உதயகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைக்கின்ற முறைப்பாடுகளில் சுமார் 75 வீதமானவை காணி தொடர்பானவையாக இருக்கின்றன. மாவட்டத்திலுள்ள பிரச்சினைகளில் முக்கியமானது காணிப்பிரச்சினை, மற்றையது மண், இந்த இரண்டு சம்பந்தமாகவும் நாங்கள் முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண காணி நிருவாகத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வருடாந்த காணி மீளாய்வுக் கூட்டத்திலேயே மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் இதனைத் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அனுர தர்மதாச, உதவிக் காணி ஆணையாளர்களான ஜீ;.ரவிராஜன், ஜே.பாஹிமா, மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காணி உத்தியோகத்தர் திருமதி குகதா ஈஸ்வரன், சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், பிரதேச செயலாளர்கள், உதவிப்பிரதேச செயலாளர்கள், காணி உத்தியேகாத்தர்கள், காணி தொடர்பாக மாவட்டத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களும் பங்கு கொண்டிருந்தனர்.

தொடர்ந்து இங்கு கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர்,

காணி தொடர்பாக மாவட்டத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் உங்களுடைய பொறுப்பினை உணர்ந்து கொள்ள வேண்டும். மாவட்டத்தில் மூவின மக்களும் வாழுகின்றார்கள். இந்த மூன்று இன மக்களுக்கும் காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. வழங்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் இலங்கையில் காணிச் சட்டங்கள் மிகவும் இறுக்கமானவை. அது மாத்திரமல்ல காலத்துக்குக்காலம் வெளிவந்த சுற்று நிருபங்கள் உங்களுக்கு விளக்கங்களை வழங்கயிருக்கின்றன. இங்கு பல்வேறு விதமான பயிற்சிகளைப் பெற்றிருக்கின்றீர்கள். அவற்றினைச் சரியாகப் பயன்படுத்தி உங்களது சேவைகளைச் செய்தல் வேண்டும்.

ஏனைய திணைக்களங்கள், அதே போல மாகாண ரீதியில் இருக்கின்ற நிறுவனங்கள் செயலாற்றினாலும் நீங்கள் இந்த வருடத்தின் ஆரம்பித்திலேயே இந்த மீளாய்வுக் கூட்டத்தினை நடத்துவது சிறப்பானதொரு விடயம் அதற்காக எனது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பிரச்சினைகளில் முக்கியமானது காணிப்பிரச்சினை, மற்றையது மண், இந்த இரண்டு சம்பந்தமாகவும் நாங்கள் முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டும்.

மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் அல்லது மத நம்பிக்கை சார்ந்ததாக உங்களது நடவடிக்கைகள் இருத்தல் வேண்டும். மாவட்டத்தில் இருக்கின்ற மூவின மக்களும் பக்கச்சார்பின்றி அவர்களுக்காக சேவையினை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சிலர் காணி தங்களிடம் வழங்கப்பட்டதனால் தங்களது சொந்தக்காணிகளாகக் கருதிக் கொளவதாக அறியக்கூடியதாக இருக்கிறது. தாங்கள் நினைத்தது போன்று வழங்க, பெற்றுக் கொள்ள வழி கோலியிருக்கிறீர்கள். மாவட்டத்தில் கிடைக்கின்ற முறைப்பாடுகளில் சுமார் 75 வீதமானவை காணி தொடர்பானவையாக இருக்கின்றன. ஆகவே இவை சம்பந்தமாக ஆராய வேண்டிய தேவையும் நமக்கிருக்கிறது. இது சம்பந்தமாக சில நடவடிக்கைள் எடுக்கப்பட்டும் இருக்கின்றன.

19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நில அடக்கு முறைகள் இருந்தன. அது போல மட்டக்களப்பு மாவட்டத்திலும் நில அடக்குமுறைகள் செய்வது அவதானிக்கப்பட்டிருக்கிறது ஆகவே நீங்கள் பக்கச்சார்பின்றி செயற்பட வேண்டும்.

நாங்க் இரண்டு கண்ணாலேயே பொது மக்களைப் பார்க்கிறோம். பொது மக்கள் 10 ஆயிரம் பெர் இருந்தால் 20 ஆயிரம் கண் நம்மைப்பார்க்கின்றன என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆகவே நாளாந்தம் பெயர் குறிப்பிட்டு முறைப்பாடுகள் வந்த வண்ணமிருக்கின்றன.

நாங்கள் செய்கின்ற சேவைகளுக்கு பொது மக்களுக்கு நீதிமன்றம் செல்லக்கூடிய வாய்ப்பிருக்கிறது. மனித உரிமை ஆணைக்குழுவில் அவர்களுக் கெதிரான செயற்பாடுகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஒம்புட்ஸ்மன் இருக்கிறது. அதற்கு மேலதிகமாக இலஞ்சு ஊழல் ஆணைக்குழு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக காணி மத்தியஸ்த சபை கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதனை விடவும் தகவல் அறியும் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது.

ஆகவே அரசாங்கம் பல்வேறு வகைகளில் அரசாங்க உத்தியோகத்தர்கள் பொது மக்களுக்குச் செய்யும் சேவையை வெளிப்படையாக பொதுவாகச் செய்வதற்கான வேலையை அரசாங்கம் செய்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் கூட மனித உரிமைகள் மீறும் போது செயற்படுதல் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.

இவற்றினைக் கவனத்தில் கொண்டு பொது மக்களுக்கு இருக்கும் தேவைகள் குறித்து செயற்பட வேண்டும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com