மட்டக்களப்பில்  மூன்று சபைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமாகியது 

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் இடம்பெற்று தற்போது அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்குமான சபை அமர்வுகள் இடம்பெற்று வருகின்றன. அவ்வகையில் இன்றைய தினம் (043 மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான முதல் நாள் அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இன்றைய தினம் (03) மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்றுப் பிரதேச சபை, போரதீவுப் பற்றுப் பிரதேச சபை, மண்முனை மேற்குப் பிரதேச சபை போன்ற உள்ளுராட்சி சபைகளுக்கான முதல்நாள் அமர்வுகள் இடம்பெற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகள் இடம்பெற்றன.

இன்று காலை 09.00 மணிக்கு மண்முனை தெற்கு மற்றும் எருவில்ப் பற்றுப் பிரதேச சபை முதல்நாள் அமர்வு ஆரம்பமாகி தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஞா.யோகநாதன் 11 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சியின் த.தவராணி 06 வாக்குகளையும் பெற்றனர். 04 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்தார்கள். இந்நிலையில் ஞா.யோகநாதன் அவர்கள் 05 மேலதிக வாக்குகளால் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் பிரதித் தவிசாளர் தெரிவில் பகிரங்க வாக்கெடுப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் க.ரஞ்சினி 11 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சியின் த.தவராணி 04 வாக்குகளையும் பெற்றனர். இதன் போது 06 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்தனர். இந்நிலையில் க.ரஞ்சினி அவர்கள் 07 மேலதிக வாக்குகளால் உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் முதல்நாள் அமர்வு ஆரம்பமாகி தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யோ.ரஜனி 09 வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வி.ஆயுஸ்மன் 08 வாக்குகளையும் பெற்றனர். 01 உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்தார். இந்நிலையில் யோ.ரஜனி அவர்கள் ஒரு மேலதிக வாக்கினால் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் பிரதித் தவிசாளர் தெரிவில் பகிரங்க வாக்கெடுப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நா.தர்மலிங்கம் 09 வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜெ. இந்துஜா 08 வாக்குகளையும் பெற்றனர். இதன் போது 01 உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்தார். இந்நிலையில் நா.தர்மலிங்கம் அவர்கள் ஒரு மேலதிக வாக்கினால் உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மாலை 02.30 மணிக்கு மண்முனை மேற்குப் பிரதேச சபையின் முதல்நாள் அமர்வு ஆரம்பமாகி தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செ.சண்முகராசா 10 வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட த.ராமகிருஸ்ணன் 04 வாக்குகளையும் பெற்றனர். 04 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்தார்கள். இந்நிலையில் செ.சண்முகராசா அவர்கள் 06 மேலதிக வாக்கினால் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் பிரதித் தவிசாளர் தெரிவில் பகிரங்க வாக்கெடுப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொ.செல்லத்துரை அவர்கள் எவ்வித போட்டியும் இன்றித் தெரிவு செய்யப்பட்டார்.

அந்தவகையில் இன்றைய தினம் இடம் பெற்ற மூன்று உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர், உபதவிசாளர் பதவிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமாக்கிக் கொண்டது. நாளைய தினம் (04) மண்முனை பிரதேச சபை மற்றும், மண்முனை தென்மேற்குப் பிரதேச சபைக்கான முதல் நாள் அமர்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com