சற்று முன்
Home / கட்டுரைகள் / மக்கள் வாழ்க்கையில் பொறுப்புடைமையும் சேவை வழங்கலும்

மக்கள் வாழ்க்கையில் பொறுப்புடைமையும் சேவை வழங்கலும்

Responsibility Words Representing Duty Obligation And Accountable

அபிவிருத்தி நடவடிக்கைகள் குடிமக்கள் சார் முன்னேற்றத்தையும் பொருளாதார விருத்தியையும் மையமாக கொண்டமைந்தவை. அவற்றின் திட்டமிடல்கள் மக்கள் பங்கேற்பை உள்வாங்கி அதற்கமைய நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எவ்வளவு வலியுறுத்தப்படுகிறதோ அதேயளவு மக்கள் கண்காணிப்பையும் உள்வாங்க வேண்டும். அத்தகைய ஒரு முறைமை போன்றதே குடிமக்கள் அறிக்கை அட்டை முறைமை மூலம் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பிலான மதிப்பீடு ஆகும். ஏனைய கருத்து மதிப்பீடுகள் அல்லாமல் குறித்த சேவை பற்றிய தரம், நம்பகத்தன்மை, சேவையில் உள்ள அசௌகரியங்கள் மற்றும் திருப்தி நிலைகள் குறித்து அந்தச் சேவையின் பாவனையாளரிடம் அணுகி பின்னூட்டல்களை பெற்று உரிய சேவை வழங்குனரிடம் வழங்கி சேவை மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் செயன்முறையை இந்தக் குடிமக்கள் அறிக்கை அட்டை கொண்டுள்ளது.

அத்தோடு இத்தகைய செயற்பாட்டை முன்னெடுக்கும் போது பொதுமக்கள் சார்பான அமைப்புக்களின் பிரதிநிதிகள் சேவை வழங்குனர் ஆகியோர் சேவை மேம்பாடு மற்றும் பொறுப்புக்கூறல்களுக்காக ஒருங்கிணைந்து செயற்பட ஒரு ஆரம்ப உந்து சக்தியாகவும் இருக்கிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கும் சேவை வழங்குனருக்குமான இடையிலான பாலமாக சிவில் சமூக அமைப்புகள் செயற்படுவதால் சேவைகள் தொடர்பான விளக்கங்கள் மக்களை சென்றடைய வழிவகுக்கிறது. மறுபக்கத்தில் மக்களின் தேவைகளும் முன்னுரிமைகளும் உரிய முறையில் சேவை வழங்குநரை சென்றடைகிறது. சேவை மேம்பாடுகள் கண்காணிக்கப்பட்டு சேவையின் தரம் மட்டும் அடைவுகள் குறித்த ஆலோசனைகள் உரிய நேரத்தில் கிடைக்கவும் மாற்றங்களை திட்டமிடவும் அனுகூலமாக அமைகிறது.

சேவை வழங்கல் சீராக அமையும் போது கல்வி, பொருளாதார நடவடிக்கைகள் இடையூறின்றி தொடரப்பட முடிவதுடன் தனிநபர் அபிவிருத்தியுடன் சமூக மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கும் பங்களிக்கிறது என்பதே இந்த தொடர் செயன்முறையின் சிறப்பாக கருதப்படுகிறது.
இத்தகைய ஒரு முறைமை மூலம் வறுமை ஆராய்ச்சி நிலையம் கல்வி சேவை மற்றும் பிரதேச சபைகளின் தெரிவு செய்யப்பட்ட சேவைகள் குறித்த ஆய்வொன்றை மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் மொனராகல மாவட்டங்களில் முன்னெடுத்து இருந்தது. அதன்போதான சிவில் சமூக அமைப்புகளுடனான சந்திப்பு மற்றும் ஆய்வு முன்னெடுப்பின் போதும் மக்கள் நேர்காணல்களின் போதும் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் பிரதிபலிப்புக்களில் சிலவற்றை பகிர்வதற்கான பதிவே இது.

மக்களுக்கு தாங்கள் எந்த சேவைகளை பெற உரித்துடையவர்கள் என்பதை முழுமையாக அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது ஒருபுறம் இருக்க தாங்கள் மக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகள் இவை தான் என்பதை முழுமையாக அறியாமல் சில சேவை வழங்குனர்களும் இருக்கிறார்கள்.

“சில நேரத்தில அவங்களுக்கும் தெரியாது எங்க போய் என்ன செய்ய வேணும் என்று. இதில அங்கயும் இங்கயும் எங்களை அலைய வைப்பினம். சரியா விஷயத்தை சொல்லாம கடுமையா நடப்பினம்.”
எனவே சேவை வழங்குனர் மற்றும் பெறுநர்கள் சேவைகள் தொடர்பில் ஒரு பூரண விழிப்புணர்வை கொண்டிருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. குடிமக்கள் பட்டயம் எனப்படும் சமூகப் பொறுப்புடைமைக் கருவி சேவை வழங்குனர் வழங்கும் சேவைகள் தொடர்பான அட்டவணை பொதுவாக அந்தந்த அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அவை தொடர்பில் தெரிந்து கொள்வது என்றால் மக்கள் அந்த அலுவலகத்திற்கு செல்லும் பட்சத்திலேயே தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

அதனால் மக்கள் ஒரு சேவையை அணுகும் முன்பு அந்த சேவை தொடர்பில் அறிந்து கொண்டு உரிய ஏற்பாடுகளுடன் செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறதன் காரணமாக பொது சேவைகளை அணுகும் போது மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதை சுட்டிக்காட்டினர். உதாரணமாக எந்த காரியாலயத்தில் எந்த சேவை வழங்கப்படுகிறது என்ற குழப்பம் ஒருபுறமும் அந்த சேவைக்கு உரிய ஆவணங்கள் எவை என்று தெரியாத காரணத்தால் ஒரு சேவையை பெறுவதற்கு பல தடவை பிரயாணம் செய்ய வேண்டிய நிலைமைக்கு உள்ளாகிறார்கள்.

“ஒரு வேலையை முடிக்க ரெண்டு மூன்று தரமும் போக வேண்டி இருக்கும். என்ன மாதிரியான ஆவணங்கள் வேணும் என்று எங்களுக்கு முதலே தெரிஞ்சா நாங்கள் கொண்டு போவம் தானே. இப்பிடி வேலையை விட்டுட்டு அலைய வேண்டி இருக்காது”
ஆய்வை மேற்கொண்ட மூன்று மாவட்டங்களும் இலங்கையில் வறுமைக்கு உட்பட்ட மாவட்டங்களாக 2016 ஆம் ஆண்டின் படி அடையாளப்படுத்தப்பட மாவட்டங்களாக காணப்படுகிறன. அத்தோடு ஆய்வு இடம்பெற்ற கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் குடும்பங்கள் நிரந்தரமான வருமான மூலம் அற்ற தொழிலை செய்பவர்களாக அல்லது விவசாயம் அல்லது மீன்பிடி சார்ந்த கூலித்தொழிலை மேற்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய நிலையில் இருக்கும் இவர்கள் உரிய சேவைக்கு தேவையான ஆவணங்கள் பற்றிய தெளிவின்மையால் ஒரு சேவையை பெற இரண்டு அல்லது மூன்று முறை பிரயாணம் செய்யும் போது குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் வருமானத்தை இழக்கிறார்கள். உரிய சேவைகள் சரியாக கிடைக்காமை என்பது பல்வேறு வகைகளில் மக்களை மேலும் வறுமைக்குள் தள்ளி விடுகிறது.

“ஒரு நாள் வேலைக்கு போகாட்டி ஒரு நாள் கூலி இல்லை தான். ஆனா வேலை ஒழுங்கா முடிஞ்சா பரவாயில்லை. இப்பிடி அலைஞ்சு திரிஞ்சு வருத்தம் என்று பிறகும் கூட ஒரு நாள் வேலைக்கு போக ஏலாம போயிடும். எங்கட கஷ்டம் எங்களுக்கு தானே?”
ஒரு சேவையை கருதும் போது அந்தச் சேவையை அணுகுவதற்கான உரிய வசதிகள் அல்லது இணைந்த சேவைகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய தேவை இருக்கிறது. உதாரணமாக உரிய போக்குவரத்து வசதிகள் மற்றும் தரமான பாதைகள் இருக்க வேண்டும். வீதிகளில் வீதி விளக்குகள் சீராக இயங்க வேண்டும்.

இந்த போக்குவரத்து மற்றும் வீதி வசதிகள் வேலை செய்பவர்கள் மட்டும் அல்லாது பாடசாலை செல்லும் மாணவர்கள் மத்தியிலும் கல்விச் சேவையை அணுகுவதில் சிக்கல்களை தோற்றுவிக்கிறன. கல்விச் சேவையில் ஆசிரியர்களும் பங்காற்றுகிறனர். அவர்களும் அதே வீதிகளை மற்றும் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துகிறவர்கள் ஆவார்கள். எனவே சீரற்ற போக்குவரத்து வெறுமனே மாணவர் வரவில் மட்டுமல்லாது ஆசிரியர்களின் வரவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

“அங்க சரியா வேலை நடக்குது என்றாலும் எங்கட இடத்தில இருந்து அங்க போறதுக்கு ஒண்டரை ரெண்டு மணித்தியாலம் ஆகும். இந்த பாதையால பஸ் குறிச்ச நேரத்துக்கு தான் வரும். அதில போயிட்டு வர அந்த நாள் முடிஞ்சுடும். மழை காலத்தில இந்த பாதைகளால போகவும் ஏலாது”
போக்குவரத்து மட்டுமல்லாது பாடசாலைக்கான மற்றைய வசதிகள் ஓரளவுக்கேனும் பூர்த்தியான நிலையில் குடிநீர் மற்றும் மலசல கூட பாவனைக்கான சுத்தமான நீருக்கான அணுகலில் உள்ள குறைபாடு சிறுவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் இந்த ஆய்விற்கான கள வேலைகளின் போது அறிந்து கொள்ள முடிந்தது. அது நாளடைவில் கல்வி அடைவில் பின்னடைவை ஏற்படுத்தி கல்வி இடைநிறுத்தம் வரை செல்கிறதாக கல்வி தொடர்பான கலந்துரையாடலின் போது வெளிப்பட்ட கருத்தாகும்.

“குடிக்கிற தண்ணியை வீட்டில இருந்து கொண்டு போகலாம், ஆனா மலசல கூட தேவைக்கு தண்ணி ஒழுங்கா இல்லாட்டி பிள்ளைகள் என்ன செய்யுறது?”
“விடிய போனா வீட்டுக்கு வந்து தான் நான் பாத்ரூம் போறனான்”
“மகள் சுகமில்லாத நாளில (மாதவிடாய்க்காலம்) பள்ளிக்கூடம் போக விரும்புறா இல்லை. அங்க தண்ணி இல்லை என்று. நாங்கள் எப்பிடி போ என்று சொல்ல முடியும்?”

பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தில் குடிநீருக்கான அணுகல் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதை நாம் கவனத்தில் கொள்ளாதவிடத்து அவை வறுமையில் இருக்கிற மக்களின் நிலைமையை மேலும் வறுமைக்குளேயே தள்ளிவிடப் போதுமானது. பெரும்பாலும் இங்குள்ள பிள்ளைகள் அதிலும் பெண் பிள்ளைகள் குறித்த வயதின் பின்னர் பாடசாலைக்கல்வியை தொடராமல் விட்டு விடுகிற தன்மை காணப்படுகிறது. அவர்கள் வேலை வாய்ப்பை தேடுவதில் மீண்டும் போக்குவரத்து வசதிகள் பாதைகள் போன்றன தடங்கல்களாக அமையும் போது இளவயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

ஆண் பிள்ளைகளும் கல்வியை தொடராமல் வேறு வாய்ப்புகளும் கிடைக்க முடியாத சந்தர்ப்பத்தில் அவர்களும் ஒரு தொழிலை தேடிக் கொள்கிறார்கள். அது ஒரு வளமான எதிர்காலத்தை தீர்மானிக்கும் வருமானத்தை வழங்க முடியாமல் இருக்கிறது. இது ஒரு சுழல் வட்டமாக அவர்களை வறுமைப் பொறிக்குள் வைத்திருக்கிறது.
“வேலைக்கு போறதெண்டாலும் ரவுணுக்கு தான் போக வேணும். போயிட்டு வர நேரம் போயிடும். பஸ்சில வாறதெண்டா நாலு மணிக்கு முதல் அங்க இருந்து வெளிக்கிட வேணும். வேலை தாறவை அப்பிடி விட மாட்டினம். பொழுது பட்டா பிறகு இந்த பதையளால வர பயம். வெளிச்சம் இல்லை. கள்ளரோ இல்லை காட்டு மிருகங்களோ என்று பயமா இருக்கும். ஆம்பிளைகளுமே வெள்ளன வேலையை முடிச்சுட்டு வந்துடுவினம்.”
இங்கே வீதிவிளக்குகளின் சேவையின் தேவை முக்கியமாக இருக்கிறது. ஆனால் சில இடங்களில் மக்களின் பொறுப்புடைமையும் தங்கள் சேவையை சரி வர வழங்க தேவையாக இருக்கிறது என்ற சேவைகள் வழங்குனர் சார்பில் குறிப்பிட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
“நாங்கள் விளக்கை போட்டு குடுத்தா அதை சரியா பார்க்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது தானே? ஏதேனும் பிரச்சினைகளுக்கு விளக்குகளை சேதப்படுத்துவது சரியில்லை தானே?”

சேவை வழங்குனர் சேவையை வழங்கிய பின்னர் அதன் பாவனை மற்றும் பராமரிப்புக்கு ஒத்துழைப்பை சேவை பெறுநர்கள் எனும் வகையில் மக்கள் வழங்க வேண்டிய கடப்பாடும் இன்றியமையாததே.
“பொது மயானத்துக்கு சுற்றுமதில் வேண்டும் என்று கட்டிக் கொடுத்தால் அதன் பராமரிப்பை மக்கள் ஏதோ வகையில் பொறுப்பெடுக்க முன்வர வேண்டும். எல்லா நேரமும் அதிகாரிகள் அங்கே காவல் இருக்க முடியாது”
“மலசல கூடம் சுத்தமாக இல்லை என்று குறை கூற முதல் அதை சரிவர பாவிப்பது எப்படி, அடுத்து பாவிப்பவருக்கு சுத்தமான நிலையில் விட்டுச் செல்வது எப்படி என்பதை மக்களும் உணர வேண்டும்”

மக்களது /சமூக பொறுப்புடைமையும் சிறப்பான சேவை வழங்கலில் ஒரு அங்கம் வகிக்கிறது.உரிய கண்காணிப்பை மேற்கொள்ளவும் அது தொடர்பில் பின்னூட்டல்களை செய்யவும் மக்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகள் சரிவர செயற்பட வேண்டும். அதே போன்று தம்மால் வழங்கப்படும் சேவைகள் குறித்த தெளிவை மக்களிடம் ஏற்படுத்தி மக்களின் நம்பிக்கையை பெற்று சிறப்பான முறையில் சேவையை முன்னெடுக்க மக்களின் கருத்துக்கள் பின்னூட்டல்களை உரிய முறையில் கையாள முன்வர வேண்டும். அதற்கு உறுதுணையாக இருந்து செயற்படுவதற்காகவே சமூகப் பொறுப்புடைமைக் கருவிகள் பயன்படுத்தப்படுகிறன. இத்தகைய செயன்முறைகள் மூலம் சேவை பெறுனர் அல்லது சமூகம் இணைந்து சேவை மேம்பாட்டை உறுதிப்படுத்துவதன் சிறந்த சமூக அபிவிருத்திக்கு வித்திட முடியும்.

மேகலா மகிழ்ராஜா
ஆய்வு உத்தியோகத்தர்
வறுமை ஆராய்ச்சி நிலையம் (CEPA)

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

83 ஜூலை கலவரத்தில் சிக்கிய அபாக்கியசாலிகள் – அனுஷா சிவலிங்கம்

இலங்கையில் தமிழர்கள் மீது செலுத்தப்பட்ட ஸ்ரீ லங்கா அரசின் அநீதிப் பட்டியலில் முதல் இடமாக மலையகத்தில் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com