மக்கள் தமது பிரதிநிதிகளாக உங்களை தேர்ந்தெடுப்பது சைக்கிளில் வந்து பென்ஸ் கார்களில் பயணிப்பதற்காக அல்ல,அவர்களின் தேவைகளை பெற்றுக்கொள்வதற்காகவே ஆகும். இதனை நீங்கள் ஒவ்வொருவரும் மனதில் பதிய வைத்துச் செயற்படவேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.கொழும்பு மாநகர சபைக்கு தெரிவான ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விருப்பு வாக்குகளால் நீங்கள் தெரிவு செய்யப்படவில்லை. உங்கள் வட்டார மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். மக்களை வீடு தேடிச் சென்று பிரச்சினைகளை தீர்த்துக்கொடுப்பது உங்கள் மீதான கடப்பாடாகும்.
கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க உட்பட தெரிவான 60 உறுப்பினர்களும் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வு நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது. இதில்உரையாற்றிய அவர்,…
அரசியலுக்கு வருபவர் யாராக இருப்பினும் மக்களுக்கு சேவை செய்வதையே இலட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளை இனம்கண்டு நிறைவேற்றிக் கொடுப்பதே எமது பணியாகும். மக்கள் எம்மைத் தேடி வந்து முறையிடும் வரை நாம் காத்திருக்க முடியாது. மக்கள் காலடிக்கு நாம் தான் செல்ல வேண்டும். பைசிக்களில் வந்து பென்ஸ் காரில் பயணிப்பதற்கு விரும்புபவர்கள் அரசியலுக்கு வராமலிருப்பதே நல்லது. அரசியல் பணம் தேடுவதற்கான இடமல்ல மக்கள் சேவைக்கான பணியாகும்.
டெங்கு பிரச்சினை, குப்பை அகற்றும் பிரச்சினை இந்த இரண்டுமே எமக்கு சவாலாக உள்ளது. இந்தச் சவாலை வெற்றிக்கொள்ள காத்திரமான திட்டங்களை வகுத்துச் செயற்படவேண்டும். எந்த சூழ்நிலையிலும் மக்களோடு முரண்பட வேண்டாம். மக்களின் இன்ப துன்பங்களில் நேரடியாக பங்கேற்று மக்களது மனங்களை வெற்றிகொள்ளுங்கள். அது உங்கள் பணிக்கு வலு சேர்க்கும். என்பதை உறுதியாக நம்புங்கள். நல்ல எதிர்பார்ப்போடு உங்களை தெரிவு செய்த மக்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்வதற்கு உறுதிபூணுங்கள் என்று கூறினார்.