மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசு நடந்துகெள்ளும் விதம் எம்மைச் சினமடைய வைக்கிறது – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

Wicki1_CIசாலாவப் பகுதியில் இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு விரைந்து உதவிகளை நல்க வந்திருப்பது பாராட்டப்படக்கூடியது. இது அரசின் கடமையுமாகும். எதிர்பாராத இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்படுகின்ற மக்களுக்கான உதவிகள் விரைந்து வழங்கப்படவேண்டும். ஆனால் வட பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட இலட்சோப இலட்சம் மக்கள் உறவுகளை இழந்து, உடல் அங்கங்களை இழந்து, வீடுகளை இழந்து, வாசல்களை இழந்து, பிள்ளைகளை இழந்து, இன்னல்படுகின்றார்கள். ஆகக் குறைந்தது அவர்களின் மிக மிக அடிப்படைத் தேவையாக கருதப்படக்கூடிய உணவுத் தேவைக்கு கூட எந்தவொரு உதவியையும் அரசு வழங்காது தாமதித்து வருவதை நாம் ஏற்க முடியாது. என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளர்.
நடந்தவற்றை மறப்போம் புதிய நல்லுறவை சிருஷ்டிப்போம் என்கின்றார்கள். எப்படி மறப்பது? மறக்கக் கூடிய விதத்திலா தமிழர்களுடன் உறவுகள் பேணப்பட்டு வந்துள்ளன? மேடை போட்டு நீலிக்கண்ணீர் வடிப்பது மட்டும் உதவியாக அமைந்துவிடாது. நீங்கள் கூறுகின்ற விடயங்களுக்கு செயல் வடிவம் கொடுங்கள் என்று அரசாங்கத்தை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
சகல வசதிகளுடனும் இருந்த மக்களில் எத்தனை ஆயிரம் பேர் அகதி முகாம்களில் ஏதிலிகளாக இன்று கிடக்கின்றார்கள் என்பதை நாம் கருத்தில் எடுக்க வேண்டும்.

பொது மக்களின் காணிகளை விடுகின்றோம் விடுகின்றோம் என்கின்றார்கள். எமது மக்களும் இலவு காத்த கிளியாக தவங் கிடக்கின்றார்கள். இது எப்போது நிறைவேறப் போகிறது என்று எமக்கும் தெரியாது அரசுக்குந் தெரியாது. இவ்வாறான செயற்பாடுகளே எம்மைச் சினமடைய வைக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர்ஸ்ரீ  துர்க்கா தேவி மணி மண்டபத்தில் 22.06.2016 புதன் கிழமை  மாலை நடைபெற்றவிழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் முன்னெடுக்கப்படப்ட சர்வதேச விதவைகள் தின நிகழ்வில்  தேசிய விதவைகள் பட்டயத்தினை அறிமுகஞ்செய்துவைத்து உரையாற்றும்போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரது உரையின் முழுவடிவம் வருமாறு,

குருர் ப்ரம்மா……………………..
இந் நிகழ்வின் தலைவர் அவர்களே, நிகழ்வினை சிறப்பிப்பதற்காக வருகை தந்திருக்கும் சிறப்பு அதிதிகளே, பெரியோர்களே, சகோதர சகோதரிகளே, எனதினிய குழந்தைகளே!
இன்று விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், மாவட்ட பெண்கள் சமாசம், மற்றும் அமரா குடும்ப தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியங்கள் இணைந்து நடாத்தும் சர்வதேச விதவைகள் தின நிகழ்வு இங்கு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் இந் நிலையில் அமரா அங்கத்தவர்களினால் தயாரிக்கப்பட்ட தேசிய விதவைகள் பட்டயத்தினை அறிமுகம் செய்கின்ற இந் நிகழ்வில்; பங்குபற்றி உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.
நான் நேற்றைய தினம் கொழும்பில் அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள வேண்டி இருந்ததால் நேற்று முன்தினம் கொழும்பிற்கு சமயத்திற்கு விமானம் கிடைக்காததால் புகையிரத மார்க்கமாகச் சென்று அவசர அவசரமாக எனது சந்திப்புக்களை நிறைவு செய்து இன்னும் இரண்டொரு சந்திப்புக்கள் இருந்த போதும் அவற்றை இரத்துச் செய்துவிட்டு உங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இன்று மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பி இக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றேன்.

2014ம் ஆண்டு மார்ச் 08ம் திகதி இதே மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் உரையாற்றும்போது மகளிர் அமைப்புக்களின் தோற்றப்பாடு அவற்றின் பிரதான கடமைகள், வடபகுதியில் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் போன்ற பல விடயங்களை அங்கே தொட்டுக் காட்டியதுடன் அவர்களின் வாழ்க்கை முறைமையை ஒழுங்குபடுத்தப்பட்டதாக மாற்றுவதும், வாழ்க்கையை மேம்படுத்துவதும் எமது தலையாய கடன் எனவும் குறிப்பிட்டிருந்தேன். அத்துடன் விழுதுகள் போன்ற மகளிர் அமைப்புக்கள், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட பெண்களின் நிவாரணம் மற்றும் பெண்களின் உரிமைகள், மனோதிடம் ஆகியவற்றை வளப்படுத்தக்கூடிய வகையிலும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று கேட்டிருந்தேன். பெண்களுக்கு சம வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து சமூகத்தில் பெண்கள் சம அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள வழிவகுப்பதுடன் பொருளாதார மறுமலர்ச்சி உருவாக்குவதற்கு இவ்வாறான அமைப்புக்கள் பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தேன். அப்பொழுது எங்களுடன் சகோதரியார் சாந்தி அவர்கள் உடன் இருந்தார்.
அந்த வகையில் “விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம்” கிராமங்கள் தோறும் இருக்கும் பெண்கள் அமைப்புக்களின் தலைமைகளை அவ்வூர் மாதர் அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் கிராம அலுவலர் பிரிவுகள் ஊடாக தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று அறிகின்றேன். அவர்களுக்கு விஷேட கலந்துரையாடல்களையும், பயிற்சிகளையும் நடாத்தி அவர்களைப் பலப்படுத்தி வருவதுடன் வடக்கு கிழக்குப் பகுதியில் போருக்கு பிந்திய பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்து வருகின்றார்கள் என்றும் அறியவருகின்றேன்.
அத்துடன் ஒவ்வொரு பகுதியிலும் பெண்கள் பொது மன்றங்களை (Forum) உருவாக்கி அவற்றின் கூட்டாக “அமரா மாவட்ட குடும்பத் தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியம்” என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்கி அதன் செயற்பாடுகளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், புத்தளம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் விஸ்தரித்து அவற்றைச் சிறப்புற நடாத்தி வருகின்றமை பாராட்டுக்குரியது. 220 பொது மன்றங்களில்; இருந்து சுமார் 17,584 அங்கத்தவர்கள் இதில் அங்கம் வகிப்பதாக அறிகின்றேன்.

போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அடங்கலாக அனைத்து பெண் தலைமைத்துவ குடும்பங்களின் தலைவியர்களையும் ஒன்றிணைத்து சமூக அரசியல் துறைகளில் செயலாண்மை மிக்கவர்களாக விளங்க அவர்களுக்கு வழிகாட்டி அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த நல்லதோர் திட்டத்தை முன்மொழிந்து நடைமுறைப்படுத்திவருவதையும் அறிந்துள்ளேன். இது நிறைவான ஒரு பணியாக அமைந்திருக்கின்றது எனக் காண்கின்றேன்.
இந்த அமைப்பானது வடக்கு கிழக்கு மக்களை மட்டும் உட்படுத்தாது தெற்கில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களையும் ஒன்று சேர்த்து ஒட்டுமொத்த மகளிர் பிரச்சனைகளை வெளிக்கொணர்வதன் மூலம் அரசின் கவனத்தை இந்தப் பெண்கள்பால் திரும்பச் செய்ய வேண்டும் என்ற ஒரு திட்டத்தையும் வகுத்திருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் தமிழர்களாக இருந்தால் என்ன சிங்களவர்களாக இருந்தால் என்ன பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கப் பெற வேண்டும். அதே நேரம் வடபகுதி மக்களுக்கென வழங்கப்படுகின்ற விஷேட உதவிகள் ஏனைய பகுதி மக்களால் சுரண்டப்படாமல் பார்த்துக் கொள்வதும் இவ் அமைப்பின் கடப்பாடாக அமைகின்றது.
பெண்கள் பிரச்சனைகள் தொடர்பாக, விசேடமாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், கணவனை இழந்த மற்றும் பிள்ளைகளைக் கொண்ட விதவைத் தாய்மார்கள் ஆகியோரின் புனர்வாழ்வு தொடர்பாக வடமாகாண சபை மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்துவருவதுடன் அவர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது தொடர்பாக விசேட கவனம் செலுத்திவருகின்றது. சற்று முன்னர் ஒரு அம்மா தனது பிள்ளையின் நிலை பற்றியும் கதி பற்றியும் விபரித்தார். பலர் எம்மை நாடி இதே போல் முறையிடுகின்றார்கள். அவர்களிடம் நான் கேட்டுக் கொள்வது உங்கள் விபரங்கள் அனைத்தையும் எங்களுக்குத் தாருங்கள். காணாமற் போன தினம், அவர்கள் இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்ட விபரங்கள் உள்ளடங்கிய அனைத்தையும் எழுத்து மூலமாகத் தாருங்கள். நாங்கள் நேராக அரசாங்கத்திடம் கையளியாது வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக எமது கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். அதனால் அரசாங்கம் பதில் தரவேண்டிய ஒரு கடப்பாட்டுக்குள் தள்ளப்படுகின்றார்கள். சில தடவைகளில் எமது விசாரிப்பு வெற்றியும் அளித்துள்ளது.
மகளிர் விவகாரம் தொடர்பான பிரச்சனைகளை எனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் மேற்கொண்டு வருமுகமாக மகளிர் சம்பந்தமான திணைக்களத்தை எனது அமைச்சின் கீழ் மீளக் கொண்டு வந்துள்ளேன். எனது செயலாளராக இவற்றைக் கண்காணிக்கவும், நெறிப்படுத்தவும் திருமதி கேதீஸ்வரனை எனது அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளேன். பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வை வளம்படுத்தல் தொடர்பாக பல விபரங்களையும், அவர்கள் தேவை பற்றியும் எனது அமைச்சின் அதிகாரிகள் தரவுகள் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். அதைப் பற்றித்தான் சற்றுமுன் எமது அதிகாரி Felician அவர்கள் குறிப்பிட்டார். பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அவர்களின் மிக முக்கியமான தேவைகளை விரைவில் நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற செய்தியை இத் தருணத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன்.
விழுதுகள் நிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் அமரா அங்கத்தவர்களால் தயாரிக்கப்பட்ட ‘விதவைகள் பட்டயத்தினை’ மத்திய அரசின் அமைச்சர்கள் மற்றும் ஐ.நா.சபை பிரதிநிதிகளிடமும் அமரா அங்கத்தவர்கள் கையளித்ததன் மூலம் கொள்கை ரீதியானதோர் மாற்றத்தினைக் கொண்டுவருவதற்கு விழுதுகள் முன்னெடுத்த பணி மிகவும் உன்னதமாகின்றது.
கற்றுக் கொண்ட பாடங்களின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அச் செயற்திட்டங்கள் முறையாக அமுல்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் முயற்சியிலும் அவ்வப்போது அவை பற்றிய குறைபாடுகள் தொடர்பாக எடுத்துக் கூறுவதிலும் இந்த அமரா அங்கத்தவர்கள் ஈடுபட அவர்களுக்கு விசேட பயிற்சிகளும் அறிவுறுத்தல்களும் விழுதுகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறிகின்றேன்.
இந்த வகையில் ‘அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியம்’ தயாரித்து வழங்கியிருக்கும் தமது பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய குறிப்பு ஆவணத்தினூடாக உருவான “விதவைகள் பட்டயத்தினை” அறிமுகஞ்செய்து வைப்பதுடன் இப் பட்டயத்தில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் எமது எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவுவனவாக அமைவன எனக் கருதுகின்றேன்.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் தேசிய ரீதியில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் மேம்பாடு குறித்து ஆராய்ந்து வரும் அதே சமயத்தில் வடமாகாணசபையைப் பொறுத்தவரையில் வட பகுதியில் இடம்பெற்ற நீண்டகால யுத்தத்தின் பயனாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், விசேடமாக பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் விரைந்து உதவ வேண்டிய கடப்பாட்டில் நாம் உள்ளோம். எதிர்பாராத வகையில் நிர்க்கதியாக்கப்பட்ட பல குடும்பங்கள் துவண்டு வீழ்ந்துவிடாது அவர்களைத் தாங்கி மீண்டும் அவர்களை இந்த சமூக நீரோட்டத்தில் அங்கத்துவம் பெறக்கூடிய வகையிலும் அவர்களுக்கான தொழில் முயற்சிகளையும் மற்றும் வழிகாட்டல்களையும் வழங்கி அவர்களைத் தமது சொந்தக்கால்களில் நின்று குடும்பப் பாரத்தை தாங்கக்கூடியவர்களாக மாற்றி அமைக்கவும் வேண்டியது எமது தலையாய கடமையாக உள்ளது.
சாலாவப் பகுதியில் இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு விரைந்து உதவிகளை நல்க வந்திருப்பது பாராட்டப்படக்கூடியது. இது அரசின் கடமையுமாகும். எதிர்பாராத இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்படுகின்ற மக்களுக்கான உதவிகள் விரைந்து வழங்கப்படவேண்டும். ஆனால் வட பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட இலட்சோப இலட்சம் மக்கள் உறவுகளை இழந்து, உடல் அங்கங்களை இழந்து, வீடுகளை இழந்து, வாசல்களை இழந்து, பிள்ளைகளை இழந்து, இன்னல்படுகின்றார்கள். ஆகக் குறைந்தது அவர்களின் மிக மிக அடிப்படைத் தேவையாக கருதப்படக்கூடிய உணவுத் தேவைக்கு கூட எந்தவொரு உதவியையும் அரசு வழங்காது தாமதித்து வருவதை நாம் ஏற்க முடியாது. ஒற்றுமையாக இருப்போம் எம்முடன் இணைந்து செயற்படுங்கள் என நேசக்கரம் நீட்டுகின்றார்கள். நாங்கள் மறுக்கவில்லை. நீங்கள் தமிழ் மக்களை நோக்கி அவர்களின் குறைகளைக் களையும் நோக்கில் ஓர் அடி முன்னோக்கி வாருங்கள் நாம் பத்து அடி உங்களை நோக்கி வருகின்றோம் எனத் திரும்பத் திரும்ப கூறி வருகின்றோம்.
நடந்தவற்றை மறப்போம் புதிய நல்லுறவை சிருஷ்டிப்போம் என்கின்றார்கள். எப்படி மறப்பது? மறக்கக் கூடிய விதத்திலா தமிழர்களுடன் உறவுகள் பேணப்பட்டு வந்துள்ளன? மேடை போட்டு நீலிக்கண்ணீர் வடிப்பது மட்டும் உதவியாக அமைந்துவிடாது. நீங்கள் கூறுகின்ற விடயங்களுக்கு செயல் வடிவம் கொடுங்கள் என்று அரசாங்கத்தை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
சகல வசதிகளுடனும் இருந்த மக்களில் எத்தனை ஆயிரம் பேர் அகதி முகாம்களில் ஏதிலிகளாக இன்று கிடக்கின்றார்கள் என்பதை நாம் கருத்தில் எடுக்க வேண்டும். பொது மக்களின் காணிகளை விடுகின்றோம் விடுகின்றோம் என்கின்றார்கள். எமது மக்களும் இலவு காத்த கிளியாக தவங் கிடக்கின்றார்கள். இது எப்போது நிறைவேறப் போகிறது என்று எமக்கும் தெரியாது அரசுக்குந் தெரியாது. இவ்வாறான செயற்பாடுகளே எம்மைச் சினமடைய வைக்கின்றன. எனினும் எமக்கு ஒரு மன ஆறுதல். அரசு கவனிக்காவிட்டால் என்ன எங்கள் இரத்த உறவுகளைப் பாதுகாக்க நாங்கள் உதவ முன்வருகின்றோம் என எத்தனையோ வெளிநாட்டு உறவுகள் மற்றும் உள்ளூர் கொடையாளிகள் முன்வந்து கொண்டிருகின்றார்கள்.
இவர்களின் உதவிகள் “ஆனைப் பசிக்கு சோளம் பொரி” என்பது எமக்குத் தெரியும். ஆனால் அந்த உதவியாவது கிடைப்பதாக உள்ளதே என்பது ஒரு மன ஆறுதல். இவ்வாறான உதவிகளுடன் நாம் மெல்ல மெல்ல எழுவோம். எம் மக்களின் மன உறுதியும் அயரா உழைப்பும் அவர்களை சுபீட்சமாக வாழ வழி வகுக்கும்.
தற்போதைய அரசிற்கு ஒரு அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. தமிழ் மக்களின் இப் பிரச்சனைகளைத் தீர்ப்பதன் மூலம் இந் நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்குவதற்கான திட்டங்களை விரைந்து செயற்படுத்துவார்களேயாயின் அவர்கள் அழியாத் தலைவர்களாக எம்மவர்களாலும் ஏன் இலங்கையிலுள்ள ஒட்டு மொத்த சமூகங்களாலும் போற்றி கௌரவிக்கப்படுவதுடன் இவர்களின் பெயர்கள் எமது முன்னைய உலகப் பெருந் தலைவர்களின் பெயர் வரிசைகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை. மாறாக எமது பணிவான கோரிக்கைகளை ஏற்க மறுத்து தான்தோன்றித்தனமாக இறுமாப்புடன் செயற்பட்ட அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்ட கதி என்ன என்பதனையும் அவர்கள் நன்கு அறிவார்கள். தம்மை உலகப் பெருந்தலைவர்கள் என பிதற்றிக் கொண்ட பலர் இன்று இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டுள்ளமை இந்த அரசுக்கு ஒரு பாடமாக அமையட்டும் எனத் தெரிவித்து எனது சிற்றுரையை நிறைவு செய்கின்றேன்.
நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்;.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com