மக்களின் பாதுகாப்பை தீர்ப்புக்கள் வாயிலாக நிலைநாட்டிய  நீதிபதி இளஞ்செழியனின்  பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் – விந்தன் கோரிக்கை

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் யாழ்.குடாநாட்டை குற்றங்கள் அற்ற பிராந்தியமாக மாற்ற முயற்சித்தார். அவர் பாதுகாக்கப்பட்டு அவரது சேவையின் நலன்களை மக்கள் அனுபவிப்பதற்கு ஏற்ற சூழ் நிலைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் வருகைக்குப் பின்னர் குடாநாட்டில் குற்றமிழைக்க நினைப்பவர்களிடம் சட்டம் தங்களைத் தண்டிக்கும் என்ற அச்சம் நிலவியது.
யுத்தத்திற்குப் பின்னர் வடக்கில் குறிப்பாக பாலியல் வல்லுறவுகள், வல்லுறவுக்கான முயற்சிகள், போதைவஸ்துப் பாவனை, போதைப்பொருள் கடத்தல், கொலைக்குற்றங்கள், கொள்ளைகள் வாள் வெட்டுச் சம்பவங்கள் என நடந்தேறிவருக்pன்றன. இவை ஒரு சமூகத்தின் அகக்கூறுகளை சிதைக்கக்கூடிய விடயமாக வடிவமைத்தே சமூக விரோதிகளிடம் கையளிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன. அடிப்படையில் இக் குற்றங்கள் எங்களுடைய பண்பாடுமல்ல. வழிவந்த இயல்புகளுமல்ல. எனினும் போர்க்காலத்தில் குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படாத கலாச்சாரம் குற்றமிழைப்போருக்குத் தைரியத்தினைக் கொடுத்துள்ளது. இதனை மாற்றும் வகையில் நீதிபதி இளஞ்செழியன் அவர்களது தீர்ப்புக்கள் அமைந்துள்ளன.
ஒரு இனத்தினை, அவர்களது அடிப்படைகளை சிதைத்து இவர்களது இருப்பினை இல்லாதொழிக்கும் முயற்சிகளின் கட்டம் கட்டமான நடவடிக்கைகளாகவே நடைபெறும் குற்றங்களை ஆராய்ந்து பார்க்கவேண்டும். பூர்வீக இனம் ஒன்று அரசியல் அதிகாரம் இன்றி தவிக்கின்ற இப்பொழுதில் அவர்களது நடத்தைகளை மானிட ஒழுக்க விதிமுறைகளுக்கு அப்பாற்பட்தாக மாற்றுவது எமது மக்களின் இருப்பையே அழித்தொழிக்கும் வேலைத்திட்டமாகும். இதனை ஆயுதங்களைப் பயன்படுத்தாது கொலைகளைப் புரியாது சர்வதேச மனித உரிமைக் கண்டனங்களைச் சம்பாதிக்காது தனியே ஒழுக்கமற்ற சமூதாயத்தினைக் கட்டியெழுப்புவதன் வாயிலாக செய்து முடிக்க இயலும். இவ்வாறானதோர் கைங்காரியம், குடாநாட்டில் உள்ள சில இளைஞர்களை பயன்படுத்தி அவர்களுக்கு மூளைச்சலவை செய்து சலுகையளித்து மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை கடுமையாக பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது. அத்தேவையினையே மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் ஆற்றிவருகின்றார்.
செம்மணிப் புதைகுழி வழக்கினை விசாரித்ததில் இருந்து அவரது நீதித்துறை பணிகள் மிகவும் சிக்கல்மிக்க சவாலான விடயங்களை துணிந்து தீர்ப்பளிக்கத் தக்க பக்குவத்தினை வெளிப்படுத்தியுள்ளன. இதனை சர்வதேசமும் நன்கறியும். இவர் யாழ் குடாநாட்டுக்கு நியமனம் பெற்று வந்ததன் பின்னர், மக்கள் இவரின் நீதித்தீர்ப்புக்களின் வாயிலாக ஒழுக்கமான சமுதாயம் கட்டியெழுப்பப்படும் என்பதை நம்பினர். அது நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றது.
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனால் விசாரிக்கப்பட்டுவரும் புங்குடுதீவு மாணவி வித்தியா வல்லுறவுப் படுகொலை வழக்கு, அதற்கு முன்னரான வழக்குகள் எல்லாம் சிக்கல் மிக்கவை. இந்த நிலையில் துணிச்சலான ஓர் நீதிபதியைத் தீர்த்துக் கட்டுவதன் மூலம் நீதித்துறையின் சுயாதீனத்தினை அச்சுறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.
நாட்டில் நீதிபதிகளின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு நீதித்துறையின் சுயாதீனமான தீர்ப்புக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படவேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம் பற்றி வலுவான கோரிக்கைகள் நிலவும் இச்சூழ்நிலையில் இச் சந்தர்ப்பத்தினை அரசியல் ரீதியில் கையாளுவதற்கு தென்னிலங்கை சக்திகள் பயன்படுத்தக்கூடாது.
குற்றவாளிகளையும் அதன் பின்னாலுள்ள சக்திகளையும் சட்டம் ஒழுகை நிலைநாட்டவேண்டிய பொறுப்புள்ள பொலிஸ் திணைக்களம் விரைந்து கைதுசெய்யவேண்டும். மேலும,; மேல் நீதிபதி இளஞ்செழியனுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம், நீதிச்சேவை ஆணைக்குழு ஆகியன தாமதமின்றி எடுக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதி என்ற வகையில் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com