மக்களின் இதயத் துடிப்பினை இனங்காண்பது அரசியல்வாதிகளின் கடமையாகும்

மக்களின் இதயத்துடிப்பு பற்றி விழிப்புணர்வுடன் செயற்பட்டு அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குதல் அரசியல்வாதிகளின் கடமையாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.”காலு சமய 2015” கண்காட்சி நிகழ்வினை காலியில்  நேற்று (27) பிற்பகல் ஆரம்பித்து வைக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். 

பல்வேறு மதங்களை பின்பற்றும், பல்வேறு மொழிகளை பேசும் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள் மத்தியிலும் இன்று நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி , நாட்டில் வேற்றுமையை விளைப்பதா அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றுபடுவதா என்பது பற்றி இன்று அனைவரும் தம் மனங்களை தொட்டு வினா எழுப்புதல் வேண்டுமென குறிப்பிட்டார். 

நாட்டு மக்களின் வறுமையை ஒழித்து, சுபீட்சமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக 2016 ஆம் ஆண்டில் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலவச சுகாதாரம் மற்றும் இலவசக் கல்வி ஆகியவற்றை வலுவடையச் செய்வதற்கும் விவசாய நாடு என்ற ரீதியில் தேசிய பொருளாதாரத்தை வலுவடையச் செய்து, நாட்டை முன்னேற்றுவதற்கும் புதுவருடத்தில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்தார். 

ஓராண்டுக்குள் நிறைவேற்றப்பட்டவைகள் தொடர்பாக திருப்தியடைய முடியுமா என்ற ஒரு சிலரின் கேள்விக்கு நேரடி விடையாக ஆம் என்றே கூற முடியுமென தெரிவித்த ஜனாதிபதி, கடந்த ஓராண்டுக்குள் அரசினால் மேற்கொள்ளப்பட்ட  தீர்மானங்களை இந்நாட்டு மக்களின் வயிறுகள் உணராத போதும், மக்களுக்குத் தேவையான சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றை பாதுகாத்து நாட்டின் நல்லாட்சி மற்றும் கலங்கமற்ற தன்மை ஆகியவற்றை நிலைநாட்டி, ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழித்து, நாடு என்ற ரீதியில் பயணிக்க வேண்டிய சரியான பாதையில் காலடி எடுத்து வைக்கும் செயன்முறையினை மக்கள் உணர்ந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

புதிய அரசு பதவியேற்று ஓராண்டிற்குள் நடைமுறைப்படுத்திய வேலைத்திட்டங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கொள்ளவில்லை என்பதுடன் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த பொருளாதார முறைமைகளில் காணப்பட்ட குறைபாடுகளே அதற்கான காரணமாகுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் மேடைகளில் தெரிவிக்கப்படும் விமர்சனங்கள், விளக்கங்கள் மற்றும் வரைவிலக்கணங்கள் எதுவாக இருந்தாலும் நாட்டைச் சரியான வழியில் இட்டுச் சென்று அபிவிருத்திப் பாதையினை நோக்கி தான் வழிநடாத்துவதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com