சற்று முன்
Home / செய்திகள் / மகிந்தவை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு மங்கள அழைப்பு

மகிந்தவை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு மங்கள அழைப்பு

நாட்டின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைச் செலவு பற்றி விவாதிப்பதற்காக தொலைக்காட்சியில் நேரடி விவாதத்துக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று சவால் விடுத்தார்.

கொலை, ஊழல், மோசடி, திருட்டு ஆகியவை பற்றி அல்லாமல் நாட்டின் கடன் மற்றும் பொருளாதார நிலவரம் பற்றி மட்டுமே விவாதிக்கவுள்ளதால் முன்னாள் ஜனாதிபதி பயமின்றி விவாதத்தில் கலந்து கொள்ளலாமென்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

நாட்டின் நிதி அமைச்சர் ஒருவர் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் விவாதத்துக்கு செல்வதா எனப் பலர் கேள்வி எழுப்பியுள்ளபோதும் நான் அதனை பொருட்படுத்தாமல் விவாதத்துக்கு தயாராகியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

நிதி மற்றும் ஊடக அமைச்சில் நேற்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி நீண்டகாலம் நாட்டில் நிதி அமைச்சராக இருந்துள்ளார். இதனால் அவருக்கு நாட்டின் பொருளாதார நிலைமை நன்கு புரியும். எனவே அவர் யாரோ எழுதிக் கொடுப்பதனை வாசிக்காமல் கொடுப்பதனை வாசிக்காமல் என்னுடன் நேருக்கு நேர் விவாதத்துக்கு வர வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த 12 வருடங்களுக்குள் செலுத்த வேண்டிய கடனை எடுத்துப் பார்த்தால் ராஜபக்ஷ குடும்பத்தினரும் நண்பர்களும் எடுத்துக் கொண்ட கடனை திருப்பிச் செலுத்துவதற்கே பெருந்தொகையை செலவிட வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதனடிப்படையில் 2019 ஆம் ஆண்டில் அரசாங்கம் 4.2 ட்ரில்லியன் ரூபாவை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.அதில் 77 சதவீதம் கடன்கள் ராஜபக்ஷ யுகத்தில் பெறப்பட்டவையாகும். 2020 இல் அரசாங்கம் 3.7 ட்ரில்லியன் ரூபாவையும் 2021 இல் 3.4 ட்ரில்லியன் ரூபாய்களையும் அரசாங்கம் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் கடும் வறட்சி, பாரிய வெ ள்ளம் மற்றும் கடன் சுமையுடன் நாட்டைப் பொறுப்பேற்ற இந்த அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களுக்குள் பொருளாதாரத்தில் பாரிய வெற்றியை ஈட்டியிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் கூடி வருவதாகவும் மஹிந்த ஆதரவு அணியினர் மக்களிடத்தே பொய்யான தகவல்களை மந்திரம் போன்று மீண்டும் மீண்டும் உச்சரித்து வருகின்றனர். உண்மையில் வாழ்க்கைச் செலவு 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் டீசல்,பெற்றோல் மற்றும் சமயல் எரிவாயுவின் விலை ராஜபக்ஷ காலத்திலும் தற்போது வெகுவாக குறைவடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தின் நூறு நாள் வேலை திட்டத்தில் அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களதும் சம்பளம் அதிகரிக்கப்பட்டதாகவும் இது 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020 இல் 107 சதவீத அதிகரிப்பைக் காட்டுமென்றும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை அமைச்சர் 2014 ஆம் ஆண்டிலிருந்த பொருட்களின் விலை 2018 இல் எவ்வாறு அதிகரித்துள்ளது என்பது தொடர்பிலும் விளக்கமளித்தார். இதற்கமைய வெ ள்ளையரிசி 78 ரூபாவிலிருந்து 80 ரூபாவுக்கும் வெள்ளை நாடு 88 ரூபாவிலிருந்து 90 ரூபாவுக்கும் மா 97 ரூபாவிலிருந்து 89 ரூபாவுக்கும் உருளைக்கிழங்கு 108 ரூபாவிலிருந்து 100 ரூபாவுக்கும் பெரிய வெங்காயம் 90 ரூபாவிலிருந்து 85 ரூபாவுக்கும் பருப்பு 170 ருபாவிலிருந்து 145 ரூபாவுக்கும் டின்னில் அடைக்கப்பட்ட மீன் 230 ரூபாவிலிருந்து 228 ரூபாவுக்கும் விற்கப்படுவதாகவே அவர் கூறினார்.

“சில பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதும் ஒப்பீட்டளவில் சுட்டிக்காட்டுமளவுக்கு பெரிய மாற்றங்கள் இல்லை”.என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் கடந்த மூன்று வருடங்களில் இந்த அரசாங்கம் ஸ்திரமான பொருளாதாரத்துக்காக உறுதியான அத்திவாரத்தை போட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் அரசாங்கத்தின் வருமானம் 13.8 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.

அனைத்து செலவீனங்களையும் ஈடு செய்யக்கூடிய நிலையை தற்போது அரசாங்கம் எட்டியுள்ளது. 2017 ஆம் ஆண்டில் வேலையில்லாதோரின் சதவீதம் 4.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 2018 இல் 4065 அமெரிக்க டொலர்களை தனி நபர் வருமானமாக பெறமுடியும். 2012 இல் 6.7 சதவீதமாக இருந்த வறுமை சுட்டெண் 2016 இல் 4.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.அத்துடன் 2025 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com