மகிந்தவை இந்தியாதான் தோற்கடித்தது – கோத்தா சொன்ன காரணம் !

இந்தியாவைத் திருப்திப்படுத்தக் கூடிய வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடிக்காமையால், அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “வெளிவிவகாரக் கொள்கைகளில், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவை எம்மால் திருப்திப்படுத்த முடியவில்லை. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் குறித்து இந்தியா அச்சம் கொண்டிருந்தது. இந்தியாவின் பாதுகாப்புக்கு எம்மால் அச்சுறுத்தல் ஏற்படாது என்றும், சீனாவுடனான தொடர்புகள் முற்றிலும் பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாக கொண்டது என்றும் நாம் அவர்களுக்கு உறுதியளித்திருந்தோம். ஆனால், இந்தியா அதனை நம்பவில்லை. அவர்கள் அதற்கும் மேலான உறவுகள் இருப்பதாக நினைத்தனர்.

புலனாய்வு பின்னணியில் இருந்து வந்தவரான இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், முற்றிலுமாக சீனாவின் மீதே கவனம் செலுத்தி வந்தவர். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை இருமுறை சந்தித்தேன். அந்த இரண்டு சந்தர்ப்பங்களின் போதும், அவர் சீனாவின் தலையீடுகள் தொடர்பான கவலைகளை வெளிப்படுத்தினார்.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்துமாறும், சீனாவின் முதலீட்டுத் திட்டங்களுக்கு எல்லை போடுமாறும் என்னிடம் வலியுறுத்தினார். 30 ஆண்டுகாலப் போருக்குப் பின்னர், நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதால், நாம் அதனைச் செய்ய முடியாது என்று அவருக்கு விளக்கிக் கூறினேன்.

சீனாவிடம் இருந்து மட்டுமே எம்மால் முதலீட்டைப் பெற முடிகிறது. தற்போதைய அரசாங்கமும் கூட இறுதியில் சீனாவின் முதலீட்டைத்தான் நாடக் கூடும். துறைமுக நகரத் திட்டமும் தொடங்கப்படக் கூடும். அப்போது இந்த விவகாரத்தை இந்தியா மீண்டும் எழுப்பும் என்று நான் உறுதியாக கூறினேன். இந்தியாவுடனான பிரச்னைகளை நாம் உணரவில்லை என்பதல்ல. இது எமது நலன்களுடன் முரண்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com