மகிந்தவுக்கு உடல் முழுக்க சின்னம்மை நோய் – சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித

அதிகாரப் பகிர்வு தொடர்பில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாமல் போலியான தேசப்பற்றை வெளிக்காட்டிவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் அவருடைய குழுவினரும், உடல் முழுவதும் சின்னம்மை போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்களென சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.

ஐம்பதுகளிலிருந்து சமஷ்டி கோரிக்கையை முன்வைத்துவரும் வடபகுதி அரசியல் கட்சிகளை பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரப்பகிர்வு என்ற நிலைப்பாட்டுக்குக் கொண்டுவர முடிந்தமை பாரிய வெற்றியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், இது நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சி என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குற்றஞ்சாட்டியிருந்தார். அவருடைய கருத்துப் பற்றி அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் கேட்டபோதே இவ்வாறு அவர் பதிலளித்தார். சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் நாம் பயப்படத்தேவையில்லை. மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் யாவரும் ஒரே பக்கத்தில் இருப்பதால் இலகுவில் இதில் வெற்றிபெற முடியும்.

அரசியலமைப்பு தயாரிப்பின் ஊடாக எவ்வாறு நாடு பிளவுபடும்? வடக்கில் அன்றிருந்த அரசியல் கட்சிகள் பெயரில் கூட ‘பெடரல்’ கட்சி எனக் கொண்டிருந்தன. 1950களிலிருந்து அவர்கள் இந்நாட்டில் சமஷ்டி முறையொன்றையே கோரிவருகின்றனர். இப்படி கோரிவந்த அரசியல் கட்சியினர் முதல் தடவையாக பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்வதற்கு முன்வந்துள்ளனர். அவர்கள் அவ்வாறான மாற்றத்துக்கு வந்திருப்பது அல்லது அவ்வாறான மாற்றமொன்றை நோக்கி அவர்களை கொண்டுவந்திருப்பதே எமக்கு கிடைத்த வெற்றியாகும்.

பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்வது எப்படி நாட்டைப் பிளவுபடுத்துவதாக அமையும்? மஹிந்த ராஜபக்‌ஷவிடம் அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஒரு ஆய்வுகூட இல்லை. இவ்வாறு ஆய்வுகளை மேற்கொண்டு அதனூடாக கருத்து வெளியிடும் நபரும் அல்ல அவர். அவருடன் உள்ள கூட்டத்தில் எவருக்கும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் தெளிவு இல்லை. மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட குழுவினர் நீதிமன்றத்தின் ஊடாக, நாளை அவர்களுக்கு எதிராக வரக்கூடிய சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது பற்றியே சிந்திக்கின்றனர். தமக்கு எதிரான மோசடிகள், கொலைக்குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்டவற்றிலிருந்து எவ்வாறு தப்பிக்கொள்வது என்பதே அவர்களின் முக்கிய யோசனையாகும்.

புதிய அரசியலமைப்பின் முக்கிய விடயங்களில் பௌத்த மதத்துக்கான இடம் இல்லாமல் போகாது. அது மாத்திரமன்றி பிரிவினை தொடர்பில் மாகாண சபைகள் ஏதாவது கதைத்தால் அவற்றைக் கலைப்பதற்கான அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கு வழங்கப்படவுள்ளது. இவை குறித்து எதுவும் தெரியாமல் அவர்கள் சகலவற்றையும் எதிர்த்து வருகின்றனர். இந்த செயற்பாடுகளை யாராவது துரோகம் எனக் கூறுவார்களாயின், அப்படிக் கூறுபவர்களே துரோகிகளாவர்.

“அரசியல் பகுத்தறிவாளரான அல்பர்ட் ஐன்ஸ்டீன், போலியான தேசபற்றாளர்கள் பற்றித் தெளிவாகக் கூறியுள்ளார். போலியான தேசப்பற்றாளர்கள் உடல் முழுவதும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். இது சாதாரண நோய் அல்ல. உடம்பு முழுவதும் பரவும் சின்னமுத்து போன்ற நோயைக் கொண்டவர்கள். மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான குழுவினரும் இவ்வாறான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com