மகாத்மாக்களை புரியாததால்தான் கிட்டுகள் வேறு மொழியில் பேசினர்

மகாத்மாக்களின் அகிம்சை மொழியை சிங்களப் பேரினவாதிகள் புரிந்து கொள்ளவில்லை. புரிந்த கொள்ள மறுத்தார்கள். இதனால்தான் ஆயுதப் போராட்டம் கருக் கொண்டது. கிட்டுகள் தோன்றி வேறுமொழியில் பேசத் தொடங்கினார்கள். என்று வடமாகாணசபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். சாவற்கட்டு மகாத்மா மைதானத்தில் நேற்று நடைபெற்ற மகாத்மா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கிட்டு முன்பள்ளி என்ற பெயரே இராணுவத்தின் நெருக்குதல் காரணமாக மகாத்மா முன்பள்ளி என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தியின் இலக்கும் கிட்டுவின் இலக்கும் ஒன்றுதான். அவரவர் தேசங்களின் விடுதலையே அவர்களின் இலட்சியங்களாக இருந்தது. ஆனால், இருவரும் தங்கள் இலட்சியங்களை அடைவதற்காக ஆட்சியாளர்களுடன் பேசிய மொழி வேறுவேறானது.
தமிழ்மக்களிடையே ஆயுதப் போராட்டம் முளை விட்டதற்கான காரணங்கள் இன்னமும் அப்படியே உள்ளன. அரசாங்கம் இடதுகையில் தூக்கிய கத்தியைத் தனது முதுகுக்குப் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டே இனி சமாதானம் என்று சொல்லி வலது கையால் எங்களுடன் கைகுலுக்கப் பார்க்கிறது. இதுபற்றி விழிப்புணர்வு எங்களுக்கு இல்லாவிடில் நாம் தொடர்ந்தும் எமாற்றப்படுவோம். ஆயுதங்களை நாம் மீளவும் தூக்க வேண்டாம். ஆனால், ஆயுதப் போராட்டம் நடைபெற்றதற்கான காரணங்களை ஆயுதப் போராட்டத்தின் அளப்பரிய தியாகங்களை யாரும் மறந்துவிடக் கூடாது. எமது இளைய தலைமுறையினரிடம் இவை எடுத்துச் சொல்லப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com