சற்று முன்
Home / அரசியல் கட்டுரைகள் / போர் நினைவுகூரலை ஏற்பாடு செய்வதற்கான அருகதை? – பூபாலரட்ணம் சீவகன்

போர் நினைவுகூரலை ஏற்பாடு செய்வதற்கான அருகதை? – பூபாலரட்ணம் சீவகன்

அரங்கம் செய்திகள் பத்திரிகையில் இருந்து …

———————————————————————————-

இலங்கைப் போரில் பலியானவர்களை நினைவுகூருவதற்கான காலப்பகுதி நெருங்குகின்றது. தமது உறவினர்களை, நண்பர்களை, முன்னாள் போராளிகளை நினைவுகூருவதற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இந்தக் காலப் பகுதியை பயன்படுத்துகிறார்கள்.

இறந்தவர்களை, அதுவும் ஒரு குறிப்பிட்ட பெரும் அனர்த்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருதல் பலவகைகளில் பயந்தரக்கூடிய ஒன்றுதான். முக்கியமாக தமது உறவுகளை இழந்தவர்களுக்கு மன ஆறுதலுக்கு இது பெரிதும் உதவும். அவர்கள் தமது மனவடுக்களை முடிந்தவரை ஆற்றிக்கொள்ள நீத்தாரை நினைவூரல் உதவும்.

இந்த நினைவுகூரலை முன்பு அரசாங்கத்தரப்பு எதிர்த்து வந்தது. ஆனால், ஒப்பீட்டளவில் அது இப்போது குறைந்துவிட்டது.

ஆனால், இப்போது இங்கு தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சினை, இதனை யார் ஏற்பாடு செய்வது, யார் தலைமை தாங்குவது என்பதில் காணப்படும் இழுபறிகள்.

இந்தப் பிரச்சினை முன்னதாக புலம்பெயர் நாடுகளில் பெரிதாக இருந்துவந்த ஒன்று. யார் நடத்துவது என்ற போட்டிக்கு காரணமாக, விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளாக தம்மைக் காண்பித்துக்கொள்ளல், புலம்பெயர் தமிழர் மத்தியில் தமக்கு ஒரு அங்கீகாரத்தை தேடிக்கொள்ளல், முடிந்தவரை அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டில் நிதி திரட்டிக்கொள்ளல் என்பதுவரை பல காரணங்கள் அதற்கு அங்கு இருக்கின்றன.

இங்கும் அரசியலில் ஆதாயம் தேடிக்கொள்வதற்காக அரசியல்வாதிகள் அதனை பயன்படுத்த முற்பட, அதனால், மனமுடைந்த, பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் எதிராகக் குரல்கொடுக்கத் தொடங்கினார்கள். இந்த நிலைமையை இந்திய இராணுவத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த அன்னை பூபதி விடயத்திலும் மட்டக்களப்பில் அண்மையில் காணக்கூடியதாக இருந்தது. ஆனாலும் பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பாட்டாளர்களுடன் இணக்கம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. நல்ல விடயம்.

ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம் வேறு பல வடிவங்களை பெற்றிருக்கிறது.

கடந்த வருடங்களில் நடந்த இழுபறிகளை அடுத்து தாமே அதனை முன்னின்று நடத்தப்போவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கூறினார்கள், ஆனால், வடக்கு முதலமைச்சர் மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் இதனை தாமே ஏற்பாடு செய்யப்போவதாக கூறியிருக்கிறார். இந்த நிலைமையும் பின்னர் ஒருவாறு தீரலாம், அல்லது இருதரப்பும் பிணக்குப்பட்டு, முரண்பாடு தொடரலாம். எது எப்படி இருந்தாலும் இந்த இழுபறிகள் அனைத்தும் தமது உறவுகளை பலிகொடுத்து, கொடும் துயரில் இருக்கும் தமிழ் மக்களுக்கு இனிப்பான நடப்புகளாக இருக்கப்போவதில்லை. தமது உறவுகளை நினைவுகூரும் நிகழ்வு குறைத்து மதிக்கப்படும் ஒரு நிலையாகவே அவர்களால் இது பார்க்கப்படும்.

உண்மையில் பொதுமக்கள் அரசியல் வேறுபாடின்றி இந்த நிகழ்வை அனுட்டிப்பதற்கு ஏற்பாடு செய்துகொடுப்பதன் மூலமே இந்த விடயத்தில் அவர்களுக்கு ஒரு மன ஆற்றுப்படுத்தலை ஏற்படுத்திக்கொடுக்க முடியும். அதுவே அவர்கள் அழிவுகளில் இருந்து மனதளவிலும், ஏனைய வடிவங்களிலும் வெளிவர உதவும். அதனை விடுத்து இதனை வைத்து இன்னமும் அரசியல் நடத்த யாராவது முயற்சித்தால், அது பாரதூரமான விளைவுகளை குறித்தவர்களுக்கு எதிராகவே ஏற்படுத்திவிடும்.

இதில் இன்னுமொரு விடயமும் எவராலும், குறிப்பாக அரசியல்வாதிகளால் கவனிக்கப்படாமலேயே அல்லது வேண்டும் என்று புறக்கணிக்கப்பட்டே வருகின்றது.

அது, போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கை. அவர்களுக்கான மீள்குடியேற்றம், மன அமைதியை ஏற்படுத்தல், வாழ்வை மீளக்கட்டியெழுப்பல், போர் அழிவுகளைக் கடந்து அவர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போவதற்கான ஏற்பாடுகள் என்பனவாகும்.

போரில் இறந்தவர்களுக்கான நினைவுகூரலைச் செய்வது எந்த அளவுக்கு முக்கியமோ அதனைவிட முக்கியம், போரில் உயிர் தப்பியவர்களுக்கான, அதனால் காயமடைந்தவர்களுக்கான புனர்வாழ்வு.

அவர்களது வாழ்க்கைக்கான உதவிகள், அவர்களுக்கான ஜீவனோபாய ஏற்பாடுகள், தேவைப்படுபவர்களுக்கு தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சை, மன ஆற்றுப்படுத்தல் என்பன இதில் மிக முக்கியமானவை.

போரில் பலியானவர்களை நினைவுகூர்தலைவிட அதில் தப்பிப் பிழைத்தவர்களை வாழ வைத்தல் மிகவும் முக்கியமான செயற்பாடாகும். போரில் இறந்தவர்களை நினைவுகூர்தல் கூட தப்பிப் பிழைத்தவர்களை ஆற்றுப்படுத்துவதின் ஒரு பகுதியே.

உண்மையில் போரில் தப்பிப் பிழைத்தவர்களின் புனர்வாழ்வுக்கு எவர் உண்மையாக உதவுகிறார்களோ அவர்களே போர் நினைவுகூரலை ஏற்பாடு செய்யவும் அருகதை உடையவர்கள். இது அரசியல்வாதிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் மிகவும் பொருந்தும். வெறுமனே ஒரு நாள் மாத்திரம் போரில் பலியானவர்களை, போராளிகளை நினைத்துவிட்டு, அதனை முன்னிட்டு அரசியல் உரைகளை நிகழ்த்திவிட்டுப் போவதல்ல நியாயம்.

போரில் இறந்தவர்களின் குடும்பங்களில் வீழ்ந்துகிடக்கும் குடும்பங்கள் எழுந்து நிற்க உதவ வேண்டும், போரில் காயமடைந்த போராளி எழுந்து நடக்க உதவவேண்டும். அதுவே இங்கு முதற்தர்மம்.

முதலில் இந்த விடயங்களில் அரசியல் கட்சிகள், அதுவும் தமிழ் தேசியம் பேசும் அரசியல் கட்சிகள் தம்மை மீளாய்வு செய்துகொள்ள வேண்டும். வெறுமனே பாராளுமன்றத்திலும், ஏனைய மேடைகளிலும், பொதுமக்களுக்கு புனர்வாழ்வு வேண்டும் என்று உரத்துப் பேசுவதல்ல புனர்வாழ்வு. அது அதற்கும் அப்பாலானது. உங்கள் கட்சி மட்டத்தில் தொடங்கி அது பூரணப்படுத்தப்பட வேண்டும். வருடங்கள் 9 கடந்தோடியும் இன்னமும் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் வீழ்ந்தே கிடக்கிறார்கள். இந்த அளவுகாலத்தில் அவர்களை தூக்கி நிறுத்தாமல், நீங்கள் அரசாங்கம் செய்யவில்லை, வேறு யாரும் கண்டுகொள்ளவில்லை என்று வெற்றுப் பேச்சு பேசிக்கொண்டிருக்கமுடியாது.

எவரும் செய்யவில்லை என்று உணர்ச்சிப் பேச்சு பேசுவதல்ல அரசியல் கட்சிகளின் கடமை, புனர்வாழ்வை செய்து முடிப்பதே உங்கள் கடமை. கடந்துபோன 9 வருடங்கள் உங்களின் செயற்திறனின்மைக்கு சான்று பகர்கின்றன. இப்படி கூற நேர்ந்ததற்கு மன்னிக்கவும்.

 

நன்றி – அரங்கம் செய்திகள் பத்திரிகை

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com