போர்க்குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இலங்கை தோல்வி கண்டுள்ளது!-பென் எமர்சன்

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக போர்க்குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இலங்கை தோல்வி கண்டுள்ளது. அத்துடன், மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசின் செயற்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றன” இவ்வாறு மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்தார்.

இலங்கைக்கான 5 நாள் பயணத்தின் நிறைவில் அவர், கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் இலங்கை அரசால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உண்மையான முன்னேற்றத்தை உறுப்படுத்துவதற்கு போதுமானவையல்ல. போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை நீதிக்கு முன்னால் நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா? என்பதற்கு சிறியளவிலான சான்றுகூட இல்லை.

பயங்கரவாத தடைச் சட்டத்தை மறுசீரமைக்கும் பணி நிறைவடைந்தவுடன், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றுவதோடு, போரின் போது இரு தரப்புகளாலும் மேற்கொள்ளப்பட்ட மனித குலத்துக்கு எதிரான குற்றங்கங்களில் ஈடுபட்டோர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க சிறப்பு வழக்கறிஞர் அலுவலகம் அமைக்கப்படும் என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட வகையில் உறுதியளித்தார்.

இவை அனைத்தும் அரசால் பன்னாட்டுச் சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளாகும். அதில் சில சாதகமான அறிகுறிகள் உள்ளன என்பது நியாயமானது. போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் நீதிக்கு முன்னால் நிறுத்தப்படுவார் என்று இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க உறுதியளித்துள்ளார். போர் இடம்பெற்ற காலப்பகுதியில் 11 பேர் கடத்தப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டில் மூத்த கடற்படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சட்டமா அதிபர், இராணுவத்தினர் மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் தமது அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டால், அவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என்று வாக்குறுதியளித்தார்.

ஆனால் இந்த அறிகுறிகள் இலங்கை அடிப்படைப்படைப் பிரச்சினைகளுக்கு நீடித்து நிலைக்கக் கூடிய தீர்வை காணும் என்ற பன்னாட்டு அர்ப்பணிப்பு மிகக் குறைவு. இலங்கை அனைத்து சமூகங்களுக்காகவும் சமத்துவம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் இடைக்கால நீதிக்கான ஒரு அர்த்தமுள்ள முறையை அமைக்க வேண்டும்.தேசியப் பாதுகாப்பத் துறையில் உடனடி மறுசீரமைப்பும் தேவைப்படுகிறது.

தடுப்புக்காவல் சித்திரவதைகள் பெரும் பிரச்சினையாக உள்ள போதும், அவை மீதான விசாரணைகள் இடம்பெறுவது மிகவும் குறைவு. சந்தேகநபர்களைச் சித்திரவதை செய்ததாக இதுவரை 71 பொலிஸ் அதிகாரிகள் மீதே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சமீபத்தியப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மனித உரிமைகள் ஆணைக்குழுவை, பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களுக்கும் அனுமதிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளின் பின் அவர்கள் குற்றவாளிகாக இனங்காணப்படுவதில்லை.

இந்த வழக்குகளில் தலைமை வழக்கறிஞராக சட்டமா அதிபர் உள்ளார். பிணை விண்ணப்பங்களுக்கு அனுமதியளிக்க அவருக்கு முழு அதிகாரமும் உண்டு. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளோருக்கு பிணை அனுமதி வழங்கபடவில்லை. எனினும் அண்மைக் காலங்களில் நிலமை மாறத் தொடங்கியுள்ளது.

இதன் விளைவாக, சட்டத்தின் ஆட்சிக்கு முற்றிலும் பொருந்தாத வகையில் நீதித்துறையின் கைகள் அதிகாரிகளால் கட்டப்பட்டிருக்கின்றன.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தற்போது 81 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 70 பேர் 5 ஆண்டுகளுக்கு மேலாக எதுவித விசாரணைகளுமின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். 12 பேர் 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்தப் புள்ளிவிவரங்கள் உலகலளவில் இலங்கையின் நற்பெயருக்கு கறைபடிந்த விடயமாகும். அரசியல் கைதிகள் அனைவரையும் பிணையில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அல்லது அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு சில மாதங்களுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால் அது வருடக் கணக்கில் தாமதிக்கக் கூடாது – என்றார்.

இதேவேளை, மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், இலங்கை அரசால் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் பரிந்துரைகளையும் முன்வைத்தார்.

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நீதியை நிரந்தரமாக செயற்பாட்டுச் சமமாகும். தடுப்பில் வைக்கப்பட்டுள்ளவர்கள் விடயம் தொடர்பில் நீதியை மறு ஆய்வுக்குட்படுத்துவதுடன், அவர்களுக்கு நியாயமான உத்தரவாதங்களை வழங்குவதை இலங்கை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

பொலிஸால் சித்திரவதை செய்யப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரணை செய்வதற்கு ஒரு சிறந்த வழிமுறையை அரசு நிறுவ வேண்டும். பங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளுக்கு பொலிஸாரிடம் வழங்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வழக்கு விசாரணையின் ஆதராமாக முன்வைப்பது தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும்- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com