போட்டிக் கல்விமுறைமை மாணவர்கள் மனதில் பொறாமைத் தீயையும் சேர்த்தே வளர்க்கிறது – ஐங்கரநேசன் விசனம்

போட்டியிருந்தால்தான் முன்னேறலாம் என்று சொல்லுவார்கள். ஆனால், போட்டிக் கல்வி முறைமை எமது மாணவர்களிடையே பொறாமைத் தீயையும் சேர்த்தே வளர்த்து வருகிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் இதனைக் கண்டறிந்து உரிய நேரத்தில் அணைக்கத்தவறுவார்களாயின் இதுவே பின்னாளில் எந்தக் குறுக்குவழியில் சென்றேனும் எந்தச் சதியைச் செய்தேனும் தான் விரும்பிய இலக்கை அல்லது பதவியை அடைவதற்கு அவர்களைத் தூண்டுகிறது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும், முன்னாள் விவசாய அமைச்சருமாகிய பொ.ஐங்கரநேசன் விசனம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா  செவ்வாய்க்கிழமை (16.01.2018) நடைபெற்றது. இந்தப் பாடசாலையின் பழைய மாணவரான பொ.ஐங்கரநேசன் நூற்றாண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,

ஐந்தாம்தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்கு எமது பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஊடகங்களும் தருகின்ற முக்கியத்துவம் மிகமிக அதிகம். மாணவர்களை இப்பரீட்சையில் சித்தியடைய வைக்கப் பெற்றோர்கள் படாதபாடு படுகிறார்கள். மாணவர்களின் சித்தியை அவர்களது உயர்ச்சி என்று மட்டும் பார்க்காமல், தங்களின் கௌரவமாகவும் பார்க்கத்தலைப்படுகிறார்கள். சித்தி அடையும் மாணவர்கள் கிரீடம் சூட்டப்பட்டுப் பட்டமளிப்புவிழா போலக் கௌரவிக்கப்படுகிறார்கள். இந்தக் கோலாகலங்கள், சித்தியடையத் தவறும் பிஞ்சு மாணவர்களின் மனோநிலையை எவ்வாறு பாதிக்கின்றது என்பது பற்றி யாரும் பெரிதாக அக்கறை கொள்வதில்லை. அவர்களை ஆற்றுப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களை நாங்கள் தண்டிக்கிறோம். இதுவே அவர்களின் மனதில் தாழ்வுமனப்பான்மையும் அடுத்தவர்மீது பொறாமையையும் வளர்க்கிறது.

ஆரோக்கியமற்ற போட்டி எதனையும் உடனடியாக அடைந்துவிடவேண்டும் என்ற அவசரமனப்பான்மையும் இன்றைய இளைய தலைமுறையிடையே வளர்த்து வருகிறது. முகாமைத்துவ உதவியாளராகப் பணி நியமனம் பெற்ற உடனேயே பலருக்கு பிரதம இலிகிதராகும் ஆசை வந்துவிடுகிறது. சனசமூக நிலையங்களில் தலைவர்களான உடனேயே முதலமைச்சராகும் கனவும் வந்துவிடுகிறது ஆசைப்படுவதிலோ, கனவுகாண்பதிலோ, தவறேதுமில்லை. கனவுகளை வளர்த்துக்கொண்டால்தான் முன்னேறவும் முடியும். ஆனால், அதற்கான படிமுறைகளைத் தாண்டாமல் ஒரேடியாகத் தாவுவதற்கு ஆசைப்படுவதே தவறானது. இதுவே பலரைக் குறுக்கவழிகளை நாடவைக்கிறது. குற்றச்செயல்களையும் புரியவைக்கிறது.

எமது பெரும்பாலான பெற்றோர்கள் பிள்ளைகளைப் பரீட்சைக்கு மாத்திரமே தயார் செய்கிறார்கள். பாடப்புத்தகங்களையும், பயிற்சிப்புத்தகங்களையும் தவிர வேறு எந்தப் புத்தகத்தைப்படிப்பதையும் நேர வீண்விரயமாகவே இவர்கள் கருதுகிறார்கள். எதிர்கால வாழ்க்கைக்குப் பாடப்புத்தக அறிவுமட்டுமே போதுமென இவர்கள் நினைக்கிறார்கள். பாடப்புத்தகங்கள் அல்லாத ஏனைய துறை நூல்களையும், உலகுக்கே வழிகாட்டியாக அமைந்த தலைவர்களது வாழ்க்கை வரலாற்று நூல்களையும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுத்து அவற்றை வாசிப்பதற்கு ஊக்குவிக்கவேண்டும். அப்போதுதான் அவர்களின் எதிர்கால வாழ்க்கை நேரான சீரிய பாதையில் சென்று முழுமையுறும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com