பொறுப்புக்கூறல் – வடகிழக்கு இணைப்பு – அரசியல் தீர்வு – மூன்று விடையங்களை முன்னிறுத்தி தமிழ் மக்கள் பேரவை தீர்மானம்

160807121305_vigneshwaranpressconference_512x288_bbc_nocreditஇலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு கூறல், அரசியல் தீர்வு, வடக்கையும் கிழக்கையும் இணைத்தல் ஆகிய மூன்று விடயங்களில் கூடிய கவனம் செலுத்திட வேண்டும் என்று இன்று (ஞாயிற்றுக் கிழமை) யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ் மக்கள் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

யாழ்ப்பாணம் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் டாக்டர் பி.லக்ஷ்மன், ரீ.வசந்தராஜா ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் செய்தியாளர்களிடம் விக்னேஸ்வரன் பேசிய போது, வடக்கையும் கிழக்கையும் இணைப்பதால் மட்டுமே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையையும், தமிழ் மக்களின் மொழி, கலை, கலாசாரங்களைப் பேணி பாதுகாக்கவும் முடியும் என்று கூறினார்.

கிழக்கில் சிங்கள மக்கள் பெருவாரியாகக் குடியேறி விட்டார்கள்; முஸ்லீம்கள் வடகிழக்கு இணைப்புக்கு ஒத்து வர மாட்டார்கள் என்றெல்லாம் வடகிழக்கு இணைப்புக்கு எதிராகக் காரணம் காட்டுகின்றார்கள். இவ்வாறு கூறும் நம்மவர்கள் கிழக்கில் பெருவாரியாக வெளியார் குடியேற்றங்கள் நடைபெற்ற போது தமது குரல்களை உரத்துக் கத்தியிருந்தால் இவ்வாறான குடியேற்றங்களைக் குறைத்திருக்கலாம். இக் குடியேற்றங்களினால் எமக்கு ஏற்பட்ட பாதிப்பை நாங்கள் தணிப்பது என்றால் வடகிழக்கு இணைப்பு அவசியம். முஸ்லிம் மக்களுக்கு ஒரு நிர்வாக அதிகார சபையை வழங்குவதில் தமிழ் மக்களுக்கு எந்த ஆட்சேபணையும் இருக்க முடியாது. ஆனால் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ்ப் பேசும் அலகு என்பது எமது வருங்கால ஒற்றுமைக்கும், தமிழ்ப் பாரம்பரிய நிரந்தரத்திற்கும் மிக்க அவசியமான ஒன்று என்பதைக் கூறி தமிழ் மக்கள் பேரவை மூன்று முக்கியமான விடயங்களை மக்கள் மனதில் விதைக்கப் பாடுபட வேண்டும் என்றும் கூறி வைக்கின்றேன். ஒன்று பொறுப்புக் கூறல் கடப்பாட்டில் இலங்கை அரசாங்கத்தின் பங்கை ஆணித்தரமாக வலியுறுத்தல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com